பகிரங்கமாக குற்றம் சாட்டிய டிலான் பெரேரா, விமல் வீரவன்ச ஆகியோரை ஏன் விசாரணைக்குட்படுத்தவில்லை - சமிந்த விஜேசிறி - Sri Lanka Muslim

பகிரங்கமாக குற்றம் சாட்டிய டிலான் பெரேரா, விமல் வீரவன்ச ஆகியோரை ஏன் விசாரணைக்குட்படுத்தவில்லை – சமிந்த விஜேசிறி

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா அறிந்திருந்ததாகக் கூறிய டிலான் பெரேரா மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் முஸ்லிம் உறுப்பினர்கள் இதனுடன் தொடர்புபட்டுள்ளனர் என்று பகிரங்கமாகக் கூறிய அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் ஏன் குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைக்குட்படுத்தவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேள்வியெழுப்பினார்.

அத்தோடு அமைச்சர் விமல் வீரவன்ச குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டால் ஏதேனும் உண்மைகளை வெளிப்படுத்துவார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் சமிந்த விஜேசிறி கூறினார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை பயன்படுத்திக் கொண்டுள்ளமை தெளிவாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு ஆளுந்தரப்பினர் கூட தயாராக இல்லை. குறிப்பாக அமைச்சர் விமல் வீரவன்ச இதில் பிரதானமானவராகக் காணப்படுகிறார்.

தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் அடுத்த தாக்குதல்கள் இடம்பெறாமல் எமது அரசாங்கம் தடுத்தது. இதற்கான தகவல்களை வழங்கிய புலனாய்வு பிரிவினர் தற்போதைய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தல்களில் இனவாதத்தை பயன்படுத்திய அரசாங்கம் அடுத்த தேர்தல்களில் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்தியா உதவியுள்ளதாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் இந்தியாவிற்கு தெரிந்திருந்ததாகவும் டிலான் பெரேரா அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.

எனவே அஷோக அபேசிங்கவிடம் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. ஏன் டிலான் பெரேராவிடம் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை ?

நல்லாட்சி அரசாங்கத்தின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர் என்று பகிரங்கமாகக் கூறிய விமல் வீரவன்ச ஏன் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை? அவர் குற்ற விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டால் உண்மைகளைக் கூறுவார் என்று எதிர்பார்க்கின்றோம்.

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாகக் கூறிய ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கம், சீனி இறக்குமதி வரிச் சலுகை மூலம் பாரிய மோசடி செய்துள்ளது. 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு இந்த அரசாங்கத்தால் புறந்தள்ளப்பட்டுள்ளது என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team