பட்ஜட்டில் எமது சமூகத்துக்கு 7 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு, ஜனாஸா எரிப்புக்கு பிரதமருடன் கலந்துரையாடி தீர்வை பெற்றோம், மாடறுப்பு பிரச்சினைக்கும் விரைவாக தீர்வு..! - Sri Lanka Muslim

பட்ஜட்டில் எமது சமூகத்துக்கு 7 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு, ஜனாஸா எரிப்புக்கு பிரதமருடன் கலந்துரையாடி தீர்வை பெற்றோம், மாடறுப்பு பிரச்சினைக்கும் விரைவாக தீர்வு..!

Contributors
author image

Editorial Team

சமூகத்துக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை ஆளும் அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக்கொள்வதன் மூலமே சமூகத்துக்கு பாதுகாப்பு இருக்கின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். அத்துடன் வடக்கு கிழக்கு மேற்கு தெற்கை இணைத்து அபிவிருத்தி செய்யுக்கூடியதான வரவு செலவு திட்டமாகவே காண்கின்றோம் என அரசுக்கு ஆதரவளித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரித்தார்.

 

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற 2022ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்  வரவு செலவு திட்டம் வடக்கு,கிழக்கு, தெற்கு மேற்கு என முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யக்கூடியதாகவே நாங்கள் காண்கின்றோம்.

இந்த வரவு செலவில் பிரதேச ரீதியில் எமது சமூகத்துக்கு 7ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று பாரிய உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையிலே இது அமைந்திருக்கின்றது.

மேலும் எமது சமூகம் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது அதனை ஆளும் அரசாங்கத்துடன் பேசியே தீர்த்துக்கொள்வதா அல்லது பிரச்சினைகளை பேசி, மக்களை உசுப்பேற்றக்கூடியவர்களுடன் இணைந்து செயற்படுவதா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும்.

இன்று எமது சமூகத்தைச்சேர்ச்த தலைவர்கள் பிச்சைக்காரனின் புண் போன்று அரசியல் நோக்கத்துக்காக சமுகத்தின் பிரச்சினைகளை பேசி மக்களை உசுப்பேற்றி வருகின்றனர்.

எமது சமுகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் காலகட்டத்தில் இருக்கின்றது. இந்நிலையில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி எமது பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதே சமூகத்துக்கு பாதுகாப்பாகும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்.

மேலும் நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி ஏற்படுகின்றபோது அதனை பிரதமருடன் கதைத்து கடந்த காலங்களில் தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றோம். ஜனாஸா எரிப்பு எமது சமூகத்துக்கு பாரிய வேதனையை ஏற்படுத்தி இருந்தது. என்றாலும் பிரதமருடன் கலந்துரையாடி இதற்கான தீர்வை பெற்றுக்கொண்டுள்ளோம்.

அதேபோன்று தற்போது மாடறுப்பு தாெடர்பான பிரச்சினை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பிரச்சினை தொடர்பாகவும் பிரதமர், நீதி அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளோம். இந்த பிரச்சினைக்கும் விரைவாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றார்.

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

Web Design by Srilanka Muslims Web Team