பட்ஜட்டுக்கு ஆதரவளித்த மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்..! - Sri Lanka Muslim

பட்ஜட்டுக்கு ஆதரவளித்த மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்..!

Contributors
author image

Editorial Team

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் கௌரவ. றிஷாத் பதியுத்தீன், கௌரவ. இஷ்ஹாக் றஹ்மான், கௌரவ. அலி சப்றி றஹீம் மற்றும் கௌரவ. முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என, நேற்று (2021.11.21) நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

 

குறித்த தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வட்ஸ்அப், கடிதம் மூலமாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கட்சியின் தலைவர் தவிர்ந்த ஏனைய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தீர்மானத்திற்கெதிராக இன்று (2021.11.22) வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.  இது தொடர்பில் நேற்று ஒத்திவைக்கப்பட்ட கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டம் இன்று கூடியபோது ஆராயப்பட்டது.

இதன்போது, கட்சியின் யாப்பில் அரசியல் அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில், கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. இஷ்ஹாக் றஹ்மான், கௌரவ. அலி சப்ரி ரஹீம், கௌரவ. முஷாரப் முதுநபீன் ஆகியோரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதெனவும், அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக் கைகளை மேற்கொள்வதெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. இஷ்ஹாக் றஹ்மான், கௌரவ. அலி சப்ரி ரஹீம், கௌரவ. முஷாரப் முதுநபீன் ஆகியோர் இன்றைய தினம் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்படுகின்றனர். அத்துடன் அவர்களுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கை கட்சியினால் மேற்கொள்ளப்படும். என செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team