பட்டும் தேறாத ராஜபக்ஸவினர்..!

Read Time:3 Minute, 39 Second

நேற்று அரசுக்கு ஆதரவான குழுவினர் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் முழுக்க முஸ்லிம்கள் மீதான இனவாதம் கக்கப்பட்டிருந்தது. இவ்வாறான இனவாத சிந்தனை காரணமாகவே 2015 இல் ராஜபக்ஸவினர் ஆட்சியை இழந்திருந்தனர். மீண்டும் இனவாதத்தை விதைத்து, கைப்பற்றப்பட்ட ஆட்சியை தொடர முடியாமல் தவிக்கின்றனர். தற்போதும் இவ்வாட்சியை தொடர முடியாமல் திணறுகையின் பின்னாலும் இனவாதமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த கால வரலாறுகள் மூலம் ராஜபக்ஸவினர் பாடம் கற்றிருப்பார்களாக இருந்தால் நிச்சயம் மீண்டும் இனவாத செயலுக்கு தூபமிட்டிருக்க மாட்டார்கள். தங்களது ஆட்சியை தக்கவைக்க மீண்டும் ராஜபக்ஸவினர் இனவாதத்தை கையில் எடுத்துள்ளமை, அவர்கள் இன்னும் பாடம் பயிலவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இவர்களுக்கு பின்னால் தற்போதும் அமைச்சுக்காக பல்லுக்காட்டும் எமது முஸ்லிம் பா.உறுப்பினர்கள் உள்ளமையே கவலைக்குரியது.

கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை விதைத்து, பற்பல அட்டூளியங்களை புரிந்தவர்கள், தற்போது ராஜபக்ஸவினருக்கு ஆதரவாக, முழு இலங்கை மக்களையும் எதிர்த்துக்கொண்டு கடைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் இவர்களின் எஜமானர்கள் ராஜபக்ஸவினர் தான் என்பது எவ்வித சிறு சந்தேகமுமின்றி வெளிப்பட்டுள்ளது. இவ்வாறான இனவாதிகளை கடந்த காலங்களில் நாட்டை மீட்கப் போகும் போராளிகளாக மக்கள் நோக்கியிருந்தமை கவனத்திற்கொள்ளதக்கது. இத்தோடு அவர்களது ஆட்டமும் நிறைவுக்கு வரும்.

நேற்றைய அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் பௌத்த மத குருக்கள் சிலர் களமிறக்கப்பட்டிருந்தனர். இதனை அறிந்ததும் ஓமல்பே சோபித தேரர் உட்பட முக்கியமான மத குருக்களை உள்ளடக்கிய குழுவினர் காலி முகத்திடல் விரைந்து, அரசுக்கு எதிரான செயற்பாட்டுக்கு ஆதரவளித்திருந்தனர். இன்றும் பல இடங்களில் அரசுக்கு எதிராக பௌத்த மதகுருக்கள் வீதிக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய அரச ஆதரவாளர்களின் செயற்பாடு பௌத்த மதகுருக்களையும் அரசுக்கு எதிராக வீதிக்கு கொண்டு வந்துள்ளது.

தற்போதைய கோத்தா அரசு, கடந்த காலங்களில் இருந்து பாடம் பயிலாது, மீண்டும் இனவாதத்தை கையில் ஏந்தியுள்ளது. இந்த இனவாதமே இவர்களின் அரசியல் இறுதி மூச்சையும் எடுக்கப்போகிறது. இன்னும் அவர்கள் பாடம் பயிலவில்லை, மக்களால் இவர்கள் தகுந்த பாடம் பயிற்றப்பட போகிறார்கள்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Previous post அம்பாறையின் சகல பாகங்களிலும் பெற்றோல், டீசலை பெற நோன்புடன் வெயிலில் காத்திருக்கும் மக்கள்..!
Next post இலங்கை சீனாவை நம்பியிருக்கும் நிலையை முற்றாக குறைப்பதற்கு இந்தியா முயற்சி – மேலதிகமாக 2 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்க தயார் – ரொய்ட்டர்..!