பதின்மூன்றை வைத்து கருட வியூகங்கள் வரையப்பட்டுள்ளதா?

Read Time:10 Minute, 32 Second

இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் கருக்கொள்ள ஆரம்பித்துள்ளன. இலங்கையின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்களை அவதானிக்க முடிகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் 13ஐ எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மிகவும் அவதானமாக நோக்க வேண்டிய தேவையுள்ளது. இவ் விடயத்துக்காக பௌத்த மஹா சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்திருந்தன. சுமார் 5000 பௌத்த மதகுருக்கள் ஒன்றிணைந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியான ஒன்றை சாதாரணமாக கடந்து செல்ல முடியாதல்லவா?

13ஐ அமுல்படுத்துவதன் பின்னால் இந்தியாவின் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் உதவியை பெற, இந்தியாவின் சொல்லை கட்டாயம் கேட்க வேண்டிய தேவையும் இலங்கைக்குள்ளது. தற்போது இலங்கைக்குள்ள ஒரே நம்பிக்கை இந்தியாவே! 13ஐ அமுல்படுத்த பௌத்த பேரினவாதம் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. பௌத்த மகா சங்கங்களே எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. களத்திலிறங்கி போராடவும் தயாராகிவிட்டன. எல்லாம் குழப்பமே! குழம்பிய குட்டையிலேயே லாவகமாக மீனை பிடிக்கலாம் என்பதை மறந்துவிடலாகாது.

இனி இலங்கையானது இந்தியாவிடம் 13ஐ நிறைவேற்றிவிட்டே செல்ல வேண்டும். இனியும் இந்தியா தமிழர்கள் தீர்வு விடயத்தில் இலங்கையை ஒருபோதும் நம்ப போவதில்லை. அதே நேரம் 13ஐ நிறைவேற்றினால் ஜனாதிபதி ரணிலின் நிலை அவ்வளவு தான். ஏற்கனவே கோத்தாவை விரசிய பயிற்சிலும் மக்கள் உள்ளனர். அவருக்கு சொல்லுமளவு மக்களாதரவுமில்லை. பேரினத்தின் பாரிய அழுத்தத்திற்கு மத்தியிலும் நில அதிகாரத்தை வழங்குவது போன்ற தொணியிலேயே ஜனாதிபதி ரணில், தனது அக்கிராசன உரையை அமைத்திருந்தார். இது இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணிலின் உறுதியை வெளிப்படுத்துகிறது. ஜனாதிபதி ரணிலை பொறுத்தமட்டில், இவ் ஆட்சியில், தான் எடுத்த எந்த தீர்மானத்திலும் அவர் பின்வாங்கவில்லை என்பதை இங்கே கோடிட்டுகாட்டுவது பொருத்தமானது.

ஜனாதிபதி ரணில் இனவாத கொள்கையற்றவர். இலங்கை நாடு இனவாதத்தில் மிதக்கின்றது. ஆட்சியாளர்களும், மக்களும் ஒருமித்து பயணிக்காது இந் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது. நாட்டை முன்னேற்றும் திட்டம் ஏதோ ஒரு அடிப்படையில், இனவாத அடிப்படையிலாவது சரி ஒரு பாதையில் அமைதல் மிக முக்கியமானது. இந் நிலை தொடர்ந்தால் நாடு நாசமடைவதை தவிர்க்க முடியாது. ” இனி நான் என்ன செய்ய முடியும் ” என கூறி இந்தியாவிடமிருந்து தப்பிக்க முனைவார் ரணில். இது இந்தியாவுக்கும் புளித்து போன ஒன்றே!

இதனை ஜனாதிபதி ரணில் இந்தியாவுக்காக மாத்திரம் செய்வதாக தெரியவில்லை. த.தே.கூவையும் வளைத்து போடவே செய்கிறார் என்பதாகவே தோன்றுகிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் த.தே.கூவின் ஆதரவு மிக முக்கியமானது. தற்போது தேசிய கட்சிகள் பல கூறுகளாக பிரிந்துள்ளதனால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மை கட்சிகளே இருக்கும். த.தே.கூட்டமைப்பு தவிர்ந்த, ஏனைய சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ரணிலுடன் நெருங்கிய தொடர்பிலேயே உள்ளன. த.தே.கூவையும் வளைத்துவிட்டால், இலகுவாக ரணிலால் ஜனாதிபதி கதிரையை நோக்கி காய் நகர்த்த முடியும்.

தற்போது நடைபெற திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மொட்டு அணியினர் ரணிலை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஒரு சில இடங்களில் மாத்திரமே ஒன்றாக பயணிக்க தீர்மானித்துள்ளனர். நிலை இப்படியிருக்க, அவர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஜனாதிபதி வேட்பளராக களமிறக்குவார்கள் என நம்பலாமா? அது சாத்தியமில்லை. மொட்டு அணியினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி பதவியை வெற்றிகொள்ள ரணிலை களமிறக்கியாக வேண்டிய நிலைக்கு, ரணில் அவர்களை தள்ள வேண்டும். அதுவே ரணிலின் பிரதான உபாயமாக அமையும். இவ்வாறே அவர் ஜனாதிபதி பதவியையும் அடைந்தார் என்பதையும் மறத்தலாகாது. ” வெற்றியை தீர்மானிக்கும் சிறுபான்மை கட்சிகள் என்னிடமுள்ளன. நீங்கள் சிறிய ஆதரவு தந்தாலே வெற்றிபெற முடியும் ” என ரணில் மொட்டுவிடம் கூறலாம். தோற்பதை விட, ரணிலை வெல்ல வைக்கும் முடிவை மொட்டு எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்களுக்கு வேறு வழியுமில்லை. இவ்வாறான முடிவையே ஜனாதிபதியாக ரணில் தெரிவானதிலும் நடந்திருந்தது.

உறங்கிகொண்டிருந்த இனவாத பேய்களனைத்தும் பதிமூன்றால் ஓலமிட ஆரம்பித்துள்ளன. எலும்பை வீசினால் நாய்கள் வளையும். இனவாதம் எழுந்தால், இன்றுள்ள நிலையில் அது ராஜபக்ஸவினருக்கே சாதகமாக அமையும். மீண்டும் ராஜபக்ஸவினர் மக்களிடையே கால் பதிக்க இவ்விடயம் சாதகமாக போகிறது. இதனை வைத்து ராஜபக்ஸவினர் அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளதையும் அறிய முடிகிறது. மக்களிடையே செல்லவே முடியாத ராஜபக்ஸவினர் மீண்டும் களம் பதிப்பர். இவ்வாறான இனவாதம் பற்றி பேசும் தகுதி ராஜபக்ஸவினருக்கு அதிகமுண்டு. இதனை யாரும் கேள்விக்குட்படுத்தவும் முடியாது. இதன் மூலம் ஒரு சிறிய தொகை மக்களை மொட்டணி, தங்கள் பக்கம் சேர்க்கும். ரணிலும் தமிழர்களை வளைத்து போடுவார். இப்படி செய்து மொட்டணியினர் ரணிலை பொதுவேட்பாளராக்கினால்..?

நாடு முழுவதும் இலங்கை எனும் அழகிய நாட்டை மொட்டணியினர் நாசமாக்கிவிட்டனர் என்ற பேச்சையே அவதானிக்க முடிகிறது. இந்த பேச்சை வேறுபக்கம் திருப்பாது மொட்டணியினர் மக்களிடம் செல்ல முடியாது. இந்த பேச்சையெல்லாம் பதின்மூன்று ஒரு குறித்தளவு வேறு பக்கம் திருப்பியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. ராஜபக்ஸவினர் நாட்டை நாசமாக்கிவிட்டனர் எனும் தொணியில் காணப்பட்ட விவாத களம், தற்போது பதின்மூன்று பற்றியதாகவே உள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் களத்துக்குள் மொட்டுவின் பிரச்சாரத்திற்கு இது வழிசமைத்து கொடுக்க போகிறது. இது தொடர்பான பேச்சு வராது போனால், எம் முகத்தை வைத்துக்கொண்டு மொட்டணி மக்களிடம் செல்லும். தான் வெல்ல வேண்டும் அல்லாது போனால் மொட்டு வெல்ல வேண்டும் என்பதே ரணிலின் எண்ணமாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.

நாட்டில் பதின்மூன்று பற்றிய பாரிய விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. சஜித் மௌனியாகவே உள்ளார். இதனால் தமிழ் மக்களும் சஜிதை வெறுப்பார்கள். அதே நேரம், இதற்கு பேசாத சஜித், எதற்கு பேச போகிறாரேன சிங்கள மக்களும் வெறுப்பர். இதனை சஜிதால் சமாளிக்கவே முடியாது. இதுவரை அவர் சமாளிக்கும் வண்ணம் எதனையும் குறிப்பிடாமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் விடயத்தில் ஜே.வி.பி, அவர்கள் பாணியில் ஏதோ கூறி சமாளித்துக்கொண்டிருக்கின்றது. அவர்களது கொள்கைக்கு அவர்களது சமாளிப்பு ஏற்கும் வகையிலேயே உள்ளது.

இவ்வாறான விடயங்கள் அனைத்தையும் வைத்து சிந்திக்கும் போது தற்போது தூண்டப்பட்டுள்ள 13 தொடர்பான இனவாதம் மொட்டுக்கும், ஜனாதிபதி ரணிலுக்கும் சாதகமாகவே உள்ளது. இது அரசியலை மையமாக கொண்ட ஒரு தந்திர வியூகம். தற்போதைக்கு இது பற்றிய பேச்சுக்களை மூட்டை கட்டி வைப்பதே அனைத்துக்கும் சரியான தீர்வாக அமையும்.

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 
Previous post “தேரவாத பௌத்தத்தை பாதுகாக்க முழு அரச அனுசரணை வழங்கப்படும்” – ரணில்!
Next post தலைகீழாகத் தொங்கும் விஞ்ஞானத்தின் செருக்கு! -சுஐப் எம்.காசிம்-