பனிப்பாறை உடைந்து பெரு வெள்ளம் : உத்தராகண்டில் இதுவரை 14 சடலங்கள் மீட்பு, 170 பேர் மாயம் – தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் 2,000 பேர்

Read Time:3 Minute, 28 Second

இமயமலையில் ஒரு பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து இரண்டு நீர் மின்சார ஆலைகளில் விழ்ந்து நீர் மற்றும் குப்பைகளை வெளியிட்டதையடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்க இந்திய மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்.

இந்த அனர்த்தத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், 170 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் உள்ள ரெய்னி கிராமத்தில் உள்ள மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து தெளளிகங்கா ஆற்றின் நீர் மட்டம் திடீரென உயர்ந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த பல வீடுகள் சேதமானதோடு, பலர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

170 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளப் பெருக்கை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றுமாறு சமோலி மாவட்ட நீதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லிக்கு வடக்கே 500 கிமீ (310 மைல்) தொலைவில் இந்த பேரழிவு நிகழ்ந்துள்ளது.

இராணுவம், துணை இராணுவ குழுக்கள் மற்றும் காவல்துறையின் 2,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

இதில் மலையேறுதலில் நிபுணர்களான வீரர்கள், பிரகாசமான ஆலசன் விளக்குகளின் கீழ் இரவு முழுவதும் பணியாற்றினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது பற்றி இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘பல்வேறு பகுதிகளில் மீட்பு பணி நடைபெறுகிறது. நேற்று ஒரு சுரங்கத்தில் இருந்து 12 பேர் மீட்கப்பட்டனர். மற்றொரு சுரங்கத்தில் சுமார் 30 பேர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் சுமார் 300 வீரர்கள் ஈடுபட்டுள்னர். சுமார் 170 பேரை காணவில்லை என உள்ளூர் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது’ என்றார்.

ஜோஷிமாத் பகுதியில் சிக்கி உள்ளவர்களை மீட்டு அழைத்து வருவதற்காக விமானப் படையின் ஹெலிகொப்டர்கள் இன்று டேராடூனில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளன.

Previous post பாடசாலை போக்கு வரத்து சேவையில் ஈடுபடுவோருக்கு அன்டிஜன் பரிசோதனை – தனிமைப்படுத்தலை கண்காணிக்க சுற்றுவளைப்புக்கள்
Next post இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.