பரீட்சைக்கு இடையுறு விளைவிக்கும் சகல நிகழ்வுகளும் முற்றாக கட்டுப்படுத்தப்படும். - Sri Lanka Muslim

பரீட்சைக்கு இடையுறு விளைவிக்கும் சகல நிகழ்வுகளும் முற்றாக கட்டுப்படுத்தப்படும்.

Contributors

-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

 

 

டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த.சாதாரணப் பரீட்சைக் காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் பரீட்சைக்கு இடையுறு விளைவிக்கும் சகல நிகழ்வுகளும் முற்றாக கட்டுப்படுத்தப்படும்.
இவ்வாறு கல்முனை கல்வி மாவட்ட பரீட்சை நிலைய இணைப்பாளர்கள் , உதவி இணைப்பாளர்கள் , மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவி மேற்பார்வையாளர்களுக்கு இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தால் திங்கட் கிழமை ( 2 ) அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மகா வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அறிவுறுத்தல் கருத்தரங்கில் கலந்து கொண்ட
கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் தெரிவித்தார்.
இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கு எவ்வித இடையுறுமின்றி மிகவும் சுதந்திரமாக நடத்தப்படுவதனை அனைவரும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பரீட்சை நிலையங்கள் , பரீட்சை இணைப்பு நிலையங்கள் மற்றும் வீதிகளில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இம்மாதம் 5 ஆம் திகதியிலிருந்து பரீட்சை முடியும் வரை க.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கான எந்தவொரு தனியார் வகுப்புகளோ கருத்தரங்குகளோ ஏனைய செயற்பாடுகளோ இடம்பெறுவதற்கு பரீட்சைத் திணைக்களம் முற்றாக தடை விதித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தம்மை பரீட்சைக்கு தயாராக்கும் விதத்தில் வீடுகளிலோ சூழலிலோ ஏற்படும் இடையுறுகளை கட்டுப்படுத்த பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பரீட்சைக் காலங்களில் ஒலிபெருக்கி பாவிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி பாவிப்போர் அதற்கான அனுமதியினை என்னிடம் இருந்தே பெறவேண்டியுள்ளது. அதனை பரீட்சைக்காலங்களில் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதே வேளையில் மிகவும் அத்தியவசியமான சில நிகழ்வுகளுக்கான சத்தத்தை குறைத்து பயன்படுத்தும் சாதனங்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். இருந்தும் இவை மாணவர்களுக்கு இடையுறு ஏற்படும் பட்டசத்தில் செயற்பட்டால் அதிலும் கட்டுப்பாடு விதிக்கப்படும்.
வீடுகளிலுள்ள சில தந்தையர்கள் மதுபோதையில் இரவு வேளைகளிலும் பகலிலும் வீடுகளில் கல்விபயிலும் மாணவர்களுக்கு இடையுறு விளைவித்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த விடயத்தில் சிவில் பாதுகாப்பு குழுவினரும் , கிராம சேவக உத்தியோஸ்தர்களும் , மத ஸ்தாபனங்களும் , ஆசிரியர்களும் மிகவும் அவதானமாகவிருந்து அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
மாணவர்கள் அச்சம் , பயம் மற்றும் வேறு அழுத்தங்கள் அற்ற சூழலில் பரீட்சை எழுத வேண்டும். அவர்களது வாழ்க்கையில் நடைபெறும் மிகவும் முக்கியமான நிகழ்வின் போது அவர்கள் சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும்.
பரீட்சைக் காலங்களில் பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்கள் பற்றியும் ஊருக்கு புதிதான நபர்கள் பற்றியும் அவதானமாகவிருப்பதுடன் பரீட்சை நிலையங்களில் ஆள்மாறாட்டம் , பரீட்சா்திகளுக்கு விடை எழுதுவதற்கு உதவி புரிதல் , பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோஸ்தர்களுக்கு இடையுறு ஏற்படுத்தல் போன்ற விடயங்களில் பிரதேச மக்கள் விழிப்பாக இருப்பதுடன் பரீட்சைக்காலங்களில் நேரத்திற்கு பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்கள் செல்வதிலும் பரீட்சை முடிந்த பின்னர் வீடு திரும்புவதிலும் பெற்றோர்கள் தமது கவனத்தை திருப்பிக் கொள்ள வேண்டும்.
கடந்த வருடங்களில் எமது பிரதேசங்களில் நடைபெற்ற பரீட்சைகளின் போது குறிப்பிடத்தக்க எந்தவொரு முறைப்பாடும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை. அதே போன்று இவ்வருடம் நடைபெறவுள்ள பரீட்சையின் போதும் சகல தரப்பினரும் ஒத்துழைத்து பரீட்சை சுமூகமாகவும் அமைதியாகவும் நடைபெற ஒத்துழைக்க வேண்டும். என்று தெரிவித்தார்.

 

Web Design by Srilanka Muslims Web Team