பல்கலைக்கழகங்கள் சமூகத்துடன் ஒன்றித்து சென்று சமூக பிரச்சினைகளையும் பேச வேண்டும் : சம்மாந்துறை தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாத்..! - Sri Lanka Muslim

பல்கலைக்கழகங்கள் சமூகத்துடன் ஒன்றித்து சென்று சமூக பிரச்சினைகளையும் பேச வேண்டும் : சம்மாந்துறை தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாத்..!

Contributors
author image

நூருள் ஹுதா உமர்

நூருல் ஹுதா உமர்

ஒலுவிலில் அமைந்துள்ள இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் முஸ்லிங்களுக்கு மட்டுமான பல்கலைக்கழகமல்ல. அது போன்றே ஏனைய பல்கலைக்கழகங்களும் ஒரு தனி இனங்களுக்கான பல்கலைக்கழகமல்ல. தென்கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள இந்த பிரதேசங்களில் இனமுரண்பாடுகள் அதிகமாக உள்ளது. அதிலும் சம்மாந்துறையில் சற்று அதிகமாக உள்ளது. அப்படியாயின் பல்கலைக்கழகம் தன்னுடைய சமூக பொறுப்பிலிருந்து வெளியேறியுள்ளதா என்று சிந்திக்க தோன்றுகிறது. அங்கிருந்து பல்வேறு ஆய்வுகள் வெளியாகிக் கொண்டிருந்தாலும் பல நூறு வருட வரலாற்றை கொண்ட முஸ்லிங்களின் காணி, பூர்விகம், பொருளாதாரம், பௌதிக வரலாறு என எதுவும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்பது உருவாகி 25 வருட காலத்தை கொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் தவற விட்ட ஒரு குறையாகவே பார்க்கிறேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.எம். நௌசாத் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி விளையாட்டரங்கில் வரலாற்றில் ஓர் ஏடு புகழ் மௌலவி ஏ.சி.ஏ. எம். புஹாரி தலைமையில் தென்கிழக்கு பல்கலையின் புதிய உபவேந்தரை சம்மாந்துறை மண்ணும் மக்களும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

முஸ்லிம் சமூகத்தை பற்றிய சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் உலமாக்களோ அல்லது அரசியல்வாதிகளோ விளக்கம் கூற முன்னர் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அது பற்றிய தெளிவை சக பெரும்பான்மை இன மாணவர்களுக்கு விளக்க முன்வரவேண்டும். இப்படியான சூழ்நிலையை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விச்சமூகம் செய்ய முன்வர வேண்டும். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மாணவர்களே உருவாக்க வல்லவர்கள். இப்படியான நிலையொன்றை புதிய உபவேந்தர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அவருடைய கல்வித்தராதரம், பட்டங்கள், ஆய்வுகள் என்பன அது தொடர்பிலையே அமைந்துள்ளது.

சமூக மாற்றங்களை கல்விமான்கள், புத்திஜீவிகள் நிறைந்த பல்கலைக்கழகங்களே உருவாக்க வேண்டும். இப்போதைய காலகட்டங்களில் பல்கலைக்கழகங்களுக்கும் சமூகத்திற்குமிடையிலான தொடர்பு குறைவாகவே காணப்படுகிறது. தென்கிழக்கு பல்கலைக்கழகம் எங்கள் பிரதேசத்தில் அமைந்துள்ள சமூக நல கல்விக்கூடம் என்று பெருமைப்படும் நிலை எதிர்காலத்தில் உருவாகவேண்டும். இவற்றையெல்லாம் சாத்தியப்படுத்தும் திறமையும், தகுதியும் புதிய உபவேந்தருக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையில் அவரை சிபாரிசு செய்துள்ளேன். அர்ப்பணிப்பு, கடின முயற்சியே அவரை இந்த இடத்திற்கு கொண்டுவந்துள்ளது. மேலும் தானும் வளர்ந்து தன்னுடைய சமூகத்தையும் வளர்க்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team