. பல்வேறு மதங்களுக்கு அவமதிப்பை பௌத்த ஏற்படுத்தும் வகையில் செயற்படும் அடிப்படைவாத அமைப்புகளை நாங்கள் எதிர்க்கின்றோம். - Sri Lanka Muslim

. பல்வேறு மதங்களுக்கு அவமதிப்பை பௌத்த ஏற்படுத்தும் வகையில் செயற்படும் அடிப்படைவாத அமைப்புகளை நாங்கள் எதிர்க்கின்றோம்.

Contributors

இலங்கையில் உள்ள சில பௌத்த தீவிரவாத அமைப்புகள் ஹலால் எதிர்ப்பு எனக் கூறிக்கொண்டு செயற்படுத்தி வரும் நடவடிக்கைகளினால் மேற்குலக நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இலங்கையின் ஏற்றுமதி தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய ஐக்கியத்திற்கான அனைத்து மதங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தர்ம தஷ்மி மன்றத்தின் தலைவர் கலங்கம தம்மரங்சி தேரர்,  இலங்கையின் பௌத்த பிக்குகள் மேற்படி நாடுகளுக்கு செல்ல விசா அனுமதிகளை பெறுவதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு மதங்களுக்கும், இனங்களுக்கும் அவர்களின் கலாசாரங்களுக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் அடிப்படைவாத அமைப்புகளை நாங்கள் எதிர்க்கின்றோம்.

அந்திய மதங்களுக்கு எதிரான தவறான செயற்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் இலங்கையர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இலங்கையர்களை வெளிநாட்டவர்கள் இனவாதிகளாக பார்க்கின்றனர். நாட்டுக்கு கிடைக்க வேண்டிய அந்நிய செலாவணி கிடைக்காமல் போவதற்கு இப்படியான அடிப்படைவாத அமைப்புகள் காரணமாக இருப்பது கவலைக்குரியது என்றார்.

இங்கு கருத்து வெளியிட்ட கம்புறுகம்முவே வஜிர தேரர், பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு மதங்களுக்கோ, கலாசாரங்களுக்கு அழுத்தங்களை கொடுப்பதை நாங்கள் அனுமதிக்க போவதில்லை.

நாங்கள் அங்கம் வகிக்கும் அனைத்து மதங்களின் ஒன்றியம் இவ்வாறான செயற்பாடுகளை கடுமையாக எதிர்க்கின்றது. நாட்டில் தேசிய ஐக்கியத்தை காப்பதற்காகவே எமது அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சகல மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் எங்களுடன் இணைந்துள்ளனர் என்றார்.-TC

Web Design by Srilanka Muslims Web Team