பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின்..! மனம் திறந்தார் ரெய்னா - Sri Lanka Muslim

பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின்..! மனம் திறந்தார் ரெய்னா

Contributors

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் என்றால் சச்சின் 200 சதவீத சக்தியை வெளிப்படுத்துவார் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மும்பையில் வரும் 14ம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

இதை முன்னிட்டு “இந்தியா டுடே’ குழுமம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட “சலாம் சச்சின்’ என்ற நிகழ்ச்சியில் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், சச்சினைப் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

இதில் பங்கேற்ற ரெய்னா கூறியது:

2011 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி மொஹாலியில் நடந்தது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தைக் காண இரு நாட்டு பிரதமர்களும் வந்திருந்தனர். இரு அணி வீரர்களின் உடல் மொழியும் போராட்டத்துக்கு ஆயுத்த நிலையில் இருந்தது. நாங்கள் பதற்றத்துடன் இருந்தோம்.

நாணய சுழற்சியில் வென்றதும், “உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை நாம் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். நமது துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில் பலமாக உள்ளது. எனவே அனைவரும் அவரவர் செயலில் அக்கறை செலுத்தினால் போதும். நெருக்கடி சமயத்தில் அவர்கள் சொதப்பி விடுவர். எனவே, நாம் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தால் எளிதில் வெற்றி பெறலாம்’ என சச்சின் எங்களிடம் தெரிவித்தார்.

மற்ற போட்டிகளை விட, பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் 200 சதவீதம் சக்தியை வெளிப்படுத்துவார்.

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது, எங்கள் துவக்கம் சிறப்பாக அமையவில்லை. ஓய்வு அறையில் வீரர்கள் அங்குமிங்கும் உலாத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அனைவரையும் இருக்கையில் அமர்ந்து ஆட்டத்தைக் கவனிக்குமாறு சச்சின் வற்புறுத்தினார். வெற்றி பெற்றுதும் உணர்ச்சி பொங்க மைதானத்தில் வலம் வந்தார். இதில் இருந்து, இந்தியா கோப்பை வெல்ல வேண்டும் என்பதில் அவர் எவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தார் என்பது புரியும் என்றார் ரெய்னா.

Web Design by Srilanka Muslims Web Team