தெஹிவளை பாத்தியா பள்ளிவாசலுக்கு மூடுவிழா - நடந்தது இதுதான் - புலனாய்வு ரிப்போட் - Sri Lanka Muslim

தெஹிவளை பாத்தியா பள்ளிவாசலுக்கு மூடுவிழா – நடந்தது இதுதான் – புலனாய்வு ரிப்போட்

Contributors
author image

Office Journalist

முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், வணக்க ரீதியான இடையூறுகள் மகிந்த ஆட்சி தொடக்கம் இன்று நல்லாட்சி வரையில் முஸ்லிம்களின் புனித நோன்பு காலங்களில் தலை தூக்கி வருவது முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் மிகவும் வேதனையையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை வருகின்ற நோன்பு காலம் என்பது முஸ்லிம்களை பொறுத்தவரை மிகவும் புனித மிக்க ஒரு காலமாகும். இந்தக் கால கட்டத்தில் முஸ்லிம்கள் மீது இடையூறுகள் விளைவிப்பது மூலம் முஸ்லிம் சமுகத்தின் ஆவேசத்தை தோற்றுவிக்கலாம் அல்லது எதிர் விளைவுகளை எதிர்பார்க்கலாம் என்றொரு எண்ணப்பாடு இனவாத சக்திகள் மத்தியில் உள்ளது.

மகிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அநியாயங்களில் பல முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்திலேயே அரங்கேறியிருந்தன. கிரிஷ்மேன் தொட்டு தராவிஹ் தொழுகைக்கான இடையூறு வரை பல விடயங்கள் நோன்பு காலத்திலேயே தலைதூக்கியிருந்தன.

அந்த வகையில் போர்க்களம் மாறினாலும் போர்கள் இன்னும் மாறவில்லை என்பது போல் மகிந்த ஆட்சியில் நடத்தப்பட்ட அநீதியும் அட்டூளியங்களும் இன்று மைத்திரி ஆட்சியிலும் தெஹிவளை பாத்தியா பள்ளிவாசல் வரை நீண்டு கொண்டே செல்கின்றது.

தெஹிவளை பாத்தியா பள்ளிவாசல் என்பது இலங்கை சட்டத்திற்கு உட்பட்டு முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலாகும்.

பாத்தியா பள்ளிவாசல் என்பது நீண்ட காலமாக முஸ்லிம்களினால் தொழுகைக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு இடமாகும்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியொன்றிலேயே இந்தப் பள்ளிவாசலும் நிறுவப்பட்டுள்ளது.
சிங்கள பேரினவாதத்தின் ஒரு சில குழுக்கள் அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கையிலெடுக்கும்போது அதற்குள் அகப்பட்டுக் கொள்ளும் பள்ளிகளில் இந்த பாத்தியா பள்ளியும் அவ்வப்பொழுது அகப்பட்டுக் கொண்டதே வரலாறு.

பாத்தியா பள்ளியை விஸ்தரித்து எந்தவொரு சமுகத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளியை நிர்மானிக்க வேண்டும் என்பதில் பள்ளி நிர்வாகம் சிரத்தை மேற்கொண்டு வருகின்றது.

நோன்பு காலம் என்பது பள்ளிவாசல்களைப் பொறுத்தவரை மிகவும் சன நெருக்கடி மிக்க ஒரு காலகட்டமாகும். அந்தவகையில் இப்பள்ளியின் மேற்பகுதி விஸ்தரிப்பை மேற்கொள்ள பள்ளிநிர்வாகம் பல மாதங்களுக்கு முன்னர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

அப்போது கண்ணுக்கு படாத இந்த விஸ்தரிப்புப் பணி இன்று இந்த நோன்பு காலத்தில் பேரினவாதிகளின் கண்களுக்கு இரையாகியிருப்பதுதான் இன்று இந்த பள்ளி தொடர்பிலான சர்ச்சைக்குரிய காரணமாக உள்ளது.

பாத்தியா பள்ளி சர்ச்சை என்பது, இந்த நோன்பு காலத்தில் விஸ்வரூபம் எடுத்த போதிலும் வேறு ஏதோ ஒருவகையில் பிரச்சினை நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வந்தது.

இப் பள்ளிக்கு வரும் முஸ்லிம்களை ஏளனக் கண்கொண்டு நோக்குவது, அவர்கள் மீது வேண்டும் என்றே சண்டித்தனத்தை பிரயோகிக்க முனைவது, இனவாதமாக பேசுவது போன்றன அப்பகுதியில் உள்ள சிங்கள இனவாதிகளின் செயற்பாடாக இருந்து வந்துள்ளது.

பள்ளிக்கு தொழுகைக்காக வரும் முஸ்லிம்களின் வாகனங்களை தாக்குவது, அவ்வீதியில் பள்ளிக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு சேதங்களை ஏற்படுத்துவது என அவ்வப்போது சிங்கள இனவாதிகளின் செயற்பாடுகள் அரங்கேறியே வந்திருந்தன.

இவற்றுக்கெல்லாம் பொறுமை காத்து முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை மேற்கொண்டு வந்த போதிலும், பொறுமை காத்த போதிலும், அதற்கு மேலாக ஒரு படி மேல் சென்ற இனவாதிகள் அருகில் உள்ள விகாரைக்கு சென்று முஸ்லிம்களுக்கு எதிரான, பள்ளிக்கு எதிராக திட்டமிட்டு பொய்களைப் பரப்பி வந்ததன் எதிரொலிதான் இன்று பாத்தியா பள்ளிவாசல் பேசு பொருளாக மாறியிருக்கின்றது.

இவ்வாறான ஒரு கட்டத்தில் தான் பாத்தியா வீதியில் உள்ள இனவாதிகளும் பிக்குகளும் இணைந்து விஸ்தீரனப் பணியை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் பள்ளிவாசலை முற்றாக இழுத்து மூடுவதற்குமான முயற்சிகளிலும் இறங்கி தவறான வகையில் பொலிசாரையும் பயன்படுத்தினர் .

பிக்குகள் என்றால் அடங்கி ஒடுங்கும் சிங்கள பொலிசார் அடுத்த பக்கத்தை விசாரணை செய்யாது பள்ளி நிர்மானத்திற்கென கொண்டு வரப்பட்டிருந்த பல சீமெந்து மூடைகள் உட்பட நிர்மானப் பொருட்களை பலவற்றை பலாத்காரமாக எடுத்துச் சென்றிருந்தனர்.

இந்த இடத்தில் பள்ளி நிர்வாக ஊழியர் ஒரவரின் கருத்தை பதிவிடுகின்றோம் –

“பள்ளிவாசலில் பாஸ்மார்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது பொலிசார் வந்தார்கள். வேலை செய்து கொண்டிருந்த பாஸ்மார்களை கீழே இறங்குமாறு உத்தரவிட்டார்கள்.

இவர்கள் பயத்தில் கீழே இறங்கி நிற்கும் போது பள்ளிவாசலிலிருந்த சீமெந்து மூடைகளையும் பள்ளிவாசலில் குவிக்கப்பட்டிருந்த மண் லோட்டையும் இங்கு வேலை செய்து கொண்டிருந்த பாஸ்மார்களைக் கொண்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு பொலிசார் சென்றனர்.

மண்ணையும் சீமெந்தையும் எங்கு கொண்டு சென்றார்கள் என்று எமக்கு தெரியாது.. இங்கு வந்த பொலிசார் எமக்கு கெட்ட வார்த்தைகளினால் ஏசினார்கள். கொஹூவலையில் இருந்த ஒரு ஜீப்பில் வந்த நான்கு பொலிசாரே இவ்வாறு நடந்து கொண்டனர்.

இந்த விடயத்தை உடனே நிர்வாக சபைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தோம்.
இதன் பின்னர் இரண்டு நாட்கள் பள்ளிவாசல் திருத்த வேலையை நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் வேலை ஆரம்பிக்கப்பட்டு இப்போது மெது மெதுவாக வேலை நடந்து கொண்டு போகின்றது.

இப்பள்ளிவாசலுக்கு பக்கத்திலிருக்கும் சில சிங்கள குடும்பங்கள் முஸ்லிம்களை கண்டால் துவேசமாக பேசுவார்கள் ,ஏளனமாக நடந்து கொள்வார்கள்.

கேவலமாக பேசி சண்டைக்கு இழுப்பது போல் நடப்பார்கள். அதனால் நாங்கள் இந்த வீதியில் நடமாடுவதைக் கூட கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம்.

பள்ளிவாசலில் தொழக் கூடாது என்று எம்மை எவரும் தடுக்கவில்லை. எனினும் ஏதாவது ஆபத்து நடந்து விடும் என்ற அச்சத்தினால் முஸ்லிம்கள் இப்பள்ளிவாசலுக்கு தொழ வருவது குறைந்து விட்டது.

தொழும் நேரத்தை தவிர மற்றைய நேரங்களில் பள்ளிவாசல் கதவை வேற்று நபர்கள் தட்டினால் கூட திறக்க வேண்டாம் என எங்களுக்கு நிர்வாக சபை கேட்டுள்ளது. அத்துடன் எங்களையும் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர்கள் சொல்லியுள்ளார்கள். – இவ்வாறு கூறினார் பாத்தியா பள்ளியில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர்.”

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் பள்ளி நிர்வாகமும் பிக்குகளும் முட்டி மோதும் ஒரு நிலை தோற்றிவிக்கப்பட்டது.

பள்ளி நிர்வாகத்தினரை நோக்கி பாத்தியா பள்ளி பதிவுசெய்யப்பட்டதற்கான ஆதாரத்தினை பிக்குகள் பொலிசாருக்கு முன்னிலையில் கோருமளவுக்கு பிக்குகளுக்கு சுதந்திரமும் அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட இவ்விடயத்தில் தலையிட்டு பள்ளி ஆதாரத்தினை பிக்குகளிடம் காட்டுவதற்கு, அந்த பிக்குகள் யார் என்று கர்சிக்குமளவுக்கு எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் திராணியுடன் செயற்படவில்லை.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

முஸ்லிம் அமைச்சர்களில் ஒருவர் பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மன்றாட்டமாக வேண்டி நின்ற மறுநாளே பள்ளி நிர்மானிப்புக்காக கொண்டுவரப்பட்ட சீமெந்து பேக்குகள், மண் மற்றும் உபகரணங்கள் பலாத்காரமாக பள்ளிவாசல் வளவிலிருந்து கொண்டு செல்லப்பட்டது என்பது இங்கு ஒரு மேலதிக தகவலாகும்.

தெஹிவளை பாத்தியா பள்ளியின் இருப்புக்காக அப்பகுதி முஸ்லிம்கள் எவ்வாறான தியாகங்களை செய்யமுடியுமோ அத்தனை தியாகங்களையும் செய்திருப்பதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்டியே ஆகவேண்டும்.

சிங்கள வெசாக் தினத்தின் போது தெஹிவளை – கல்கிஸை மாநகர அரசியல் வாதிகளினால் இப்பள்ளி நிர்வாகத்திடம் பணம் கோருவது இடம்பெற்றுள்ளது. அதற்கமைய சுமார் மூன்று தொடக்கம் நான்கு இலட்சம் ரூபா வரை வருடா வருடம் வெசாக் தினத்திற்கு என பள்ளி நிர்வாகம் வழங்கி வந்துள்ளது.

கடந்த வருட வெசாக் தினத்தன்று தெஹிவளையில் ‘கடலை தன்சலை’ வழங்கப்பட்டதும் முஸ்லிம்களினால் வழங்கப்பட்ட அந்த மூன்று லட்சம் ரூபாய்க்களினாலாகும்.

பாத்தியா பள்ளிக்கு சுமார் 300 மீட்டர் அருகில் உள்ள விகாரைக்கு செல்வதற்கான பாலமொன்றும் இப்பள்ளி நிர்வாகத்தினாலேயே நிர்மானித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அருகில் உள்ள விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் பள்ளிக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் குறித்த பாலத்தினை நிர்மானித்து தரவேண்டும் என வேண்டியதன் பேரீலேயே பள்ளி நிர்வாகம் அந்தப் பாலத்தினை பலஆயிரம் ரூபாய் செலவில் நிர்மானித்து வழங்கியிருந்தது.

பாத்தியா பள்ளிக்கு சற்று தொலைவில் உள்ள மேற்குறிப்பிட்ட விகாரைக்கு அருகில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான பெறுமதிவாய்ந்த காணியொன்று இருந்துள்ளது. இந்தக் காணியையும் பலாத்காரமான முறையில் விகாரை நிர்வாகம் விலைபேசியுள்ளது.

ஆனால் அதனை விற்பதற்கு குறித்த முஸ்லிம் நபர் விரும்பாததினால் – சிங்கள அரசியல் பிரமுகர்களை தொடர்பு கொண்ட விகாரை நிர்வாகம் அக்காணியை பெற்றுக் கொள்ள பெரும் முயற்சியை மேற்கொண்டது.

அதற்கும் அந்த முஸ்லிம் நபர் இடம்கொடுக்காத பட்சத்தின் போது தான் மேற்சொன்ன பாத்தியா பள்ளி தற்போது உள்ள இடத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் குறித்த விகாரைக்கு அந்தக் காணியை விற்பனை செய்ய வேண்டும் என முஸ்லிம் நபரை நிர்ப்பந்திக்குமாறு இப்பள்ளி நிர்வாகத்திற்கு நெருக்கடியை கொடுத்தனர் சிங்கள அரசியல் வாதிகள்.

இதனை அடுத்து பள்ளியின் இருப்புக்காக தமது விருப்பத்திற்குரிய காணியையே குறித்த முஸ்லிம் நபர் விகாரை நிர்வாகம் குறிப்பிட்ட விலைக்கு விட்டுக் கொடுத்தார்.

அதுமாத்திரமல்ல, ஸம் – ஸம் என்னும் முஸ்லிம் நிறுவனம் ஒன்று இப்பகுதி முஸ்லிம்களுக்கென வருடா வருடம் நோன்பு காலத்தில் தலா 8,000/= ருபாய் பெறுமதியான 100 உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருவது வழமையாகும்.

அந்த வகையில் கடந்த முறை உட்பட இதுவரை காலமும் வழங்கப்பட்ட அத்தனை உணவுப் பொதிகளையும் பள்ளியின் இருப்பை கருத்திற்கொண்டு அப்பகுதியில் வசிக்கும் சிங்கள சமுகத்தினருக்கே அவற்றை வாரி வழங்கி வந்தனர்.

விரும்பியோ விருப்பமின்மையோ பள்ளியை பாதுகாக்கும் நோக்கில் அப்பகுதி சிங்கள சமுகத்தினருடன் இவ்வாறான உணவுப்பொதிகளை வழங்கி நல்லுறைவைப் பேணவே முயற்சித்துள்ளனர் முயற்சித்துள்ளனர்.

இந்த வருடமும் அவ்வாறான உணவுப்பொதிகள் முஸ்லிம்களுக்கு வந்த போதிலும் அவற்றை வழமைக்கு மாறாக வெல்லம்பிட்டி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிங்கள சமுகத்தினர்க்கே வழங்கியுள்ளனர். இவ்வாறு பல இலட்சங்களை பள்ளிவாசலின் இருப்புக்காக நன்கொடையாகவும், உதவியாகவும் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு நல்லெண்ணத்தை சிங்கள இனவாதிகள் மத்தியில் வெளிப்படுத்திய போதிலும் அதையும் மீறியே இவ்வாறான இடைஞ்சல்கள் முஸ்லிம் சமுகத்தை ஆட்கொண்டு வருகின்றது.

நல்லாட்சியில் இவ்வாறு பாத்தியா பள்ளி மீதான அட்டூழியமும், அநாச்சாரமும் பள்ளியை மூடுமளவுக்கு சிங்கள இனவாதிகள் கோலோச்சுவதற்கு பிரதான காரணம் இப்பள்ளி தொடர்பான பிரச்சினை வெளிக்கொணரப் படாமையாகும்.

மகிந்த ஆட்சியில் தம்புள்ளை தொட்டு அளுத்கமை வரை அத்தனை அட்டூழியங்களுக்கும் எதிராகவும் அவ்வப்போது ஏற்பட்ட சின்ன சின்ன கண்ணாடி உடைவுகளுக்கும் கூக்கிரலிட்டு ஆர்ப்பரித்த முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்த பாத்தியா பள்ளி விடயத்தில் கடுமையாக மௌனம் காப்பதுதான் முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள கவலையாகும்.

அதாவது பள்ளியை பாதுகாப்பதை விட இந்த நல்லாட்சியை பாதுகாக்கவா முஸ்லிம் அரசியல் வாதிகள் இவ்வாறு மௌனம் காக்கின்றார்கள் என்ற தோரணையில் தான் முஸ்லிம் சமுகம் இந்த பாத்தியா பள்ளி விவகாரத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளை நோக்குகின்றது.

பாத்தியா விவகாரத்தை பள்ளி நிர்வாகம் ஆரம்பத்திலேயே வெளிக்கொணர முற்பட்ட போதிலும் முஸ்லிம் அரசியல் வாதிகளில் சிலர் அப்பிரச்சினையை ஊடகங்களுக்கு தெரியாமல் மூடிமறைக்கும் செயற்பாட்டிலேயே இறங்கியிருந்தனர்.

அதைவிடுத்து, அப்போதே ஜனாதிபதி பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் அந்த நிமிடமே இவ் விவகாரத்தை முளையிலேயே கிள்ளியெறிந்திருக்க முடிந்திருக்கும்.

இன்று இந்த விவகாரம் இவ்வளவு தூரம் விஷ்வரூபம் எடுத்திருப்பதற்கான முழுப் பொறுப்பையும் அந்த சில முஸ்லிம் அரசியல் வாதிகளே பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் உள்ள கருத்தாக உள்ளது.

தம்புள்ளை பள்ளிவாசலுக்கு பிறிதொரு இடத்தில் காணி தருவதாகவும் அந்தக் காணியில் புதிய பள்ளிவாசல் நிர்மானிப்பதற்கான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்றுக் கொள்வதாகவும் அன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய கூறிய போது கொதித்தெழுந்த அன்றிருந்த , இன்றும் இருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் – இந்த நல்லாட்சியில் அதே தம்புள்ளை பள்ளி, கோட்டாபாய கூறியது போல் பிறிதொரு இடத்திற்கு இடமாற்ற முடிவு செய்யப்பட்ட போது பொட்டிப் பாம்பாக அடங்கி மௌனம் காத்ததையும் இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமுகம் நினைவு கூறத்தவறவில்லை.

தம்புள்ளைப் பள்ளி போன்றில்லாமல் நல்லாட்சியில் மூடப்படும் இரண்டாவது பள்ளிவாசலாக பாத்தியா பள்ளி அமையக்கூடாது என்பதில் இன்று முஸ்லிம் சமுகம் மிகவும் விழிப்பாக உள்ளது..

பாத்தியா பள்ளி போன்று இனிவரும் காலங்களில் வேறு ஏதும் முஸ்லிம் சமுகம் சார்ந்த பிரச்சினைகள் தோற்றம் பெறும் போது தனிப்பட்ட அரசியல் வெறுப்பு விருப்புக்களை தூக்கியெறிந்து விட்டு முஸ்லிம் அரசியல் வாதிகள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணிகளை உள்ளடக்கிய குழுவொன்று பொதுவான அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். அக்குழுதான் அனைத்து பேச்சுவார்த்தைகளுக்கும் முன்னிற்க வேண்டும் என்றும் அதே முஸ்லிம் சமுகம் கோரி நிற்கின்றது.

a2 a3 a4 a6 a7 a8 a10 a11 a13 a15 a16

Web Design by Srilanka Muslims Web Team