பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் : பலமறியாது பிளிறும் யானை…? பட்ஜட் பாடலா…? - Sri Lanka Muslim

பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் : பலமறியாது பிளிறும் யானை…? பட்ஜட் பாடலா…?

Contributors

பொத்துவில் வைத்தியசாலை A தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதுவே சில நாட்களாக பா.உ முஷர்ரபின் ஆதரவாளர்களால் பகிரப்படும் செய்தியாக உள்ளது. எமது சகோதரன் ஒருவன் மகிழ்வுறுவதை கண்டு, பொறாமை கொள்ளும் மனநிலை எம்மிடமில்லை. எமது சமூகத்தையே அடமானம் வைத்து, செய்யப்படும் விடயங்களை பொறுமையாக கடந்து செல்லவும் முடியவில்லை.

பாராளுமன்ற உறுப்புருமை என்பது சாதாரணமாக மட்டிடக் கூடிய ஒன்றல்ல. அது பலமான பதவி. அது பெரும் பேரம் பேசும் சக்தியை கொண்டது. தகுந்த நேரத்தில் காயை நகர்த்தினால், நினைத்ததை அடையலாம். பாராளுமன்ற பதவியை வைத்துக்கொண்டு எத்தனையோ சாதனைகளை நிலைநாட்டலாமென்றிருக்க, ஒரு வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவதை விழா எடுத்துக் கொண்டாடுவதே இவர்கள் அரசியல் ஆளுமை. இதனை தவிர விழா எடுக்க ஏதுள்ளது? சாதித்ததாக கூற ஏதுள்ளது..?

ஜனாஸா எரிப்பை சகித்தமை, 20க்கு ஆதரவளித்தமை, உதய கம்பன்பிலவுக்கு வாக்களித்தமை, அரச சார்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்தமை, ஞானசாரரின் தலைமைக்காக அரசோடு முரண்படாமை உட்பட எத்தனையோ விடயங்களில் அரசை தூக்கி நிலை நிறுத்தியுள்ள இவர், எத்தனையோ விடயங்களை சாதித்திருக்கலாமல்லவா…? ஒரு ஆதரவுக்கு, ஒரு பாரிய சேவை என கணக்கு போட்டிருந்தாலும், பொத்துவில் கடலை தங்கத்தால் நிரப்பி இருக்கலாம். ராஜபக்ஸ குடும்பத்தவர் ஒருவரே தேர்தல் நடந்தால், தாங்கள் தோல்வியுறுவோம் என ஏற்றிருக்க, இவ் ஆட்சியை ஒரு பேதும் மாற்ற முடியாது எனும் வகையில் பகிரங்கமாக ஊடகங்களில் கூறும் பா.உறுப்பினர் முஷர்ரபின் அளவு கடந்த விசுவாசத்திற்கு எத்தனையோ கொடுக்கலாமல்லவா? பெற்றது என்னவோ இத் தரமுயர்த்தல் மட்டுமே!

இன்று பாராளுமன்றத்தில் பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் பா.உ முஷர்ரப் உறுதியாக இருப்பதாக அவரை சூழவுள்ள வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. வேறு சில வழிகளில் உறுதி செய்த போதும் இம் முடிவையே பெற முடிந்தது. இம் முறை பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்கும் முடிவை அ.இ.ம.கா உறுதியாக எடுக்கும். இதனை பா.உறுப்பினர் முஷர்ரப் மீறுவாராக இருந்தால், அவர் கட்சியை விட்டும் நீக்கப்படுவதற்கான சாத்தியத்தையே அவதானிக்க முடிகிறது. தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களிப்போரை மக்கள் எள்ளி நகையாடுவார்கள் என்பதை எமது அரசியல் வாதிகள் நன்கறிவர். இதனை சமாளிக்க தன்னை மக்கள் மத்தியில் நிலை நிறுத்த வேண்டும். அதற்கு இப்படியான செய்திகள் அவசியம். இவர்களது பாடல் எதற்கு என்பதெல்லாம் நாம் அறியாததல்ல.

யானையை பிடித்து கட்டிப்போட வேண்டியவர், பூனையை பிடித்து கட்டி படம் காட்டுகிறார். இவர் இத் தரமுயர்த்தலை செய்ததன் மூலம் இலாபம் பெறப்போவது சில ஆயிரம் மக்களே! இவரின் இச் செயலால் அரசிடம் முஸ்லிம் சமூகமே அடமானம் வைக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். இவர் அரசுக்கு பாரிய பலத்தை கொடுக்கின்றார். மக்களுக்கோ சிறிய உதவியையே செய்கிறார். இதனை முஸ்லிம் சமூகம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

கால்களை வெட்டிவிட்டு, நடப்பதற்கு பஞ்சு மெத்தைகளால் ஆன பாதையிட்டு பயனேதுமாகுமோ? ஞானசார தேரர் ஒரே நாட்டுக்கு ஒரே சட்டத்தை முன்மொழியப் போகிறார். அதில் என்ன வரப்போகிறதோ..? அது எத்தனை கலவரங்களுக்கு அடிப்படையாக அமையப்போகிறதோ..? இத்தனை காலமும் நாம் பொத்தி, பாதுகாத்து வந்த முஸ்லிம் தனியார் சட்டம் பறிபோகப் போகிறது. இதனை யாரும் சாதாரணாமாக கடந்து செல்ல வேண்டாம். முஸ்லிம் என்றால் விரும்பியோ அல்லது விரும்பாமலோ, இஸ்லாம் பற்றிய அறிவு இருந்தாலோ அல்லது இல்லாமல் விட்டாலோ ஹலாலான விவாக, விவாகரத்து செய்யும் நிலை இச் சட்டத்தின் மூலம் இருந்தது. இது நீக்கப்பட்டால் இஸ்லாம் பற்றிய அறிவுடையவன் மாத்திரமே ஹலாலான விவாக, விவாகரத்து செய்யும் நிலை ஏற்படும். இது சாதாரணமான ஒன்றா? இது போன்ற இஸ்லாத்துக்கு சவால் விடுக்கும் விடயங்களை தடுக்க வக்கற்றவர்கள், ஒரு ஊர் வைத்தியசாலையை மாத்திரம் தயமுயர்த்தி தங்களை சரி செய்யப்பார்க்கின்றார்கள். இது தொடர்பில் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுமக்கள் பட்ஜட் போன்ற சந்தர்ப்பங்களின் போது குறுகிய ஊர்ச் சிந்தனைகளை விடுத்து, முஸ்லிம் சமூகத்துக்கு பாதகமான விடயங்களை எதிர்கொள்ள பா.உறுப்பினர்களை உந்துங்கள். குறுகிய ஊர் வாதத்தை விதைத்து, சுயநல அரசியல் வாதிகள் அதற்குள் முக்காடு இட்டுக்கொள்கிறார்கள். இஸ்லாத்தை சவாலுக்குட்படுத்திய எந்த அபிவிருத்தியையும் எந்த முஸ்லிம் ஏற்கமாட்டான் என நான் உறுதியாக நம்புகிறேன். இது வைத்தியசாலையை தரமுயர்த்தும் நேரமல்ல. ஒரு முஸ்லிமாக வாழும் நிலையை உறுதி செய்யும் நேரம். இவ்வரசு எமது இஸ்லாமிய வாழ்வுக்கு தடை ஏற்படுத்தாது போனால், நாம் ஏன் இவர்களை இத்தனை தூரம் விமர்சிக்கப் போகின்றோம்.

பா.உறுப்பினர் பதவி பலமிக்கமிக்கது. அது அடிமையாய் கிடந்து சாதிக்கும் பதவியல்ல. யானை, தன் பலத்தை உணரும் வரை அடிமையாகவே வாழ்வது அதன் விதி. பலமறிந்தும் அடிமைப்பட்டால் அது வேறு. பா.உறுப்பினர் முஷர்ரப் தனது பாராளுமன்ற பலத்தை நன்கு உணர வேண்டும். சுயநலங்களுக்கு பொதுநல சாயம் பூசி மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். உங்கள் சுயநலத்துக்காக நீங்கள் செய்யும் காரியம் எமது சமூகத்தை அடமானம் வைக்கப்போவதை உணர்ந்து செயற்படுங்கள்.

இது வைத்தியசாலையை தரமுயர்த்தும் நேரமல்ல. ஒரு முஸ்லிமாக வாழும் நிலையை உறுதி செய்யும் நேரம். ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாத்தை விட பெறுமதியானது ஏதுண்டு?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team