‘பிம்ஸ்டெக்’ உச்சிமாநாடு இன்று!

Read Time:5 Minute, 53 Second

‘வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவுக்கான முன்னெடுப்பு’ (Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation_- BIMSTEC) அங்கத்துவ நாடுகளின் செயலாளர்கள் மாநாடு நேற்று முன்தினம் 28 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகியது. அதேவேளை ‘பிம்ஸ்டெக்’ உச்சிமாநாடு இன்று  30ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானது.

பிம்ஸ்டெக் அமைப்பின் தற்போதைய தலைமைப் பதவியை இலங்கை ஏற்கிறது. எனவே, இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆவார். எனவே இம்மாநாட்டை இலங்கை இம்முறை நடத்துகிறது. வங்காள விரிகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாட்டில் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த 05 ஆவது உச்சிமாநாடு உலகளாவிய கொவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக உரிய வேளையில் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இவ்வருடம் இதனை நடத்த இலங்கை இணக்கம் தெரிவித்திருந்தது.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சிலர் நேரடியாக வருகை தந்து கலந்து கொள்ளவிருப்பதுடன், சிலர் மெய்நிகர் முறையின் ஊடாக (ZOOM) இணைந்து கொள்ளவுள்ளனர்.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் இராஜதந்திர பயிற்சி அல்லது கல்வி நிறுவனங்களுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி, போக்குவரத்து இணைப்புக்கான திட்டம் உள்ளிட்ட ஆவணங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் கைச்சாத்திடப்படவுள்ளன.

‘பிம்ஸ்டெக் -மீள்திறன் கொண்ட பிராந்தியம், வளமான பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியமான மக்களை நோக்கி’ என்பது 5வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும்.

பிம்ஸ்டெக் அல்லது ‘வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு’ என்பது தென்கிழக்கு ஆசியாவிலும் அமைந்துள்ள ஏழு நாடுகளை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இந்த அமைப்பில் இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, மியன்மார், தாய்லாந்து, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன. இவை அனைத்தும் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளாகும்.

இந்த அமைப்பின் நிரந்தர செயலகம் டாக்காவில் அமைந்துள்ளது. கல்வி, தொழிற்கல்வி, தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி செய்வது மற்றும் பயிற்சியளிப்பது, கூட்டுறவை வளர்ப்பதும் இதன் நோக்கமாகும். இந்த நாடுகளின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு, சமூக, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் துறைகளில் ஒவ்வொரு நாடும் மற்றவற்றுக்கு உதவி செய்து எல்லோரும் நன்மையடைய வேண்டும் என்பதும் இதன் நோக்கம்.

பிம்ஸ்டெக் அமைப்பு, உலக சனத்தொகையில் 22 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்திய போதும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் மட்டுமே இவ்வமைப்பு பங்களிப்புச் செய்கிறது. எனவே, பிராந்தியத்தின் சவால்களை வெற்றி கொள்வதற்காக, உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை சிறந்த முறையில் பேணவும், பகிர்ந்த முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், உறுப்பு நாடுகளை பலமாக ஊக்குவிப்பதாக இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் போலவே, அனைத்து பிம்ஸ்டெக் முயற்சிகளுக்கும் இலங்கை முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும், மக்களுக்காக பகிரப்பட்ட சுபீட்சத்தையும் அமைதியையும் அடைந்து கொள்வதற்கு, அனைத்து பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளும் இணக்கமாகச் செயற்படுவோம் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். பல்வேறு சவால்களை இலங்கை சந்தித்திருக்கும் சூழ்நிலையில் இந்தியா உதவ முன்வந்துள்ளது. இவ்வாறான காலகட்டத்தில் கொழும்பில் நடைபெறவிருக்கும் பிம்ஸ்டெக் மாநாடு இலங்கைக்கு பல்வேறு வகைகளில் உதவிகளை வழங்குவதாக அமையும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நாடு மீண்டும் முடக்கப்படும் அபாயம்!
Next post கஷ்டங்களை வேடிக்கை பார்க்கிறது அரசாங்கம்!