பிரதேச வாதத்திற்கு இடமில்லை என்கிறார் ஹக்கீம்! மக்கள் தனக்களித்த ஆணையை மீறமாட்டேன் என்கிறார் சிராஸ்

Read Time:9 Minute, 50 Second

பிரதேச வாதத்திற்கு இடமில்லை என்கிறார் ஹக்கீம்!
மக்கள் தனக்களித்த ஆணையை மீறமாட்டேன் என்கிறார் சிராஸ்!

-சுஐப் எம். காசிம்

கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாதெனவும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கல்முனை மாநகர மு.கா. உறுப்பினர்கள் எவராவது சிராஸ¤க்கு ஒத்துழைப்பு வழங்கினால் அவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் படுமெனவும் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில் தான் தொடர்ந்தும்பதவி வகிக்கப் போவதாக சிராஸ் மீராசாஹிப் சூளுரைத்துள்ளார்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் மு.கா.வில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சிராஸ் மீராசாஹிப், கட்சியின் தீர்மானத்துக் கமைவாக மேயராகப் பதவியேற்றார். எனினும் மேயர் வேட்பாளராகப் போட்டியிட்டு அதற்கடுத்த விருப்பு வாக்குகளைப் பெற்ற சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அடுத்த இரண்டு வருடங்கள் பதவி வகிப்பாரென கட்சித் தலைமை அப்போதே அறிவித்திருந்தது. தற்போது முதல் இரண்டு வருடம் முடிவடைந்த நிலையில் மேயர் சிராஸை பதவி விலகுமாறு ரவூப் ஹக்கீம் நேரடியாகக் கேட்டுக் கொண்டதுடன் அது தொடர்பான கட்சியின் முடிவான முடிவையும் அறிவித்திருந்தார்.

கட்சியினது தீர்மானத்துக்கு மாற்றமாக எந்த ஓர் உறுப்பினரும் செயற்பட முடியாதெனவும் கட்சிக் கட்டுப்பாட்டை எவரும் மீற முடியாதெனவும் மு.கா. தலைவர் ஹக்கீம் ஆணித்தரமான அறிவிப்பையும் வெளியிட்டார்.

எனினும் சிராஸ் மீரா சாஹிப் தனக்கு வாக்களித்த மக்களின் தீர்மானத்துக்கு மாற்றமாக தான் செயற்பட முடியாதெனவும் அவர்களின் அபிப்பிராயங்களை கேட்டறிந்த பின்னரே உரிய முடிவை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்து சாய்ந்தமருது மக்களுடனான ஒரு சந்திப்பையும் ஏற்படுத்தியிருந்தார்.

சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனப் பிரதிநிதிகள், உலமாக்கள், மக்கள் அமைப்புக்கள், மு.கா. ஆதரவாளர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், இந்த விவகாரத்தைக் கையாளும் பொறுப்பு சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் சம்மேளனத்திடம் ஒப்படைக்கப்பட்டு பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன.

மு.கா. தலைவருக்கும் சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை 10 மணியளவில் ஏற்பாடாகியிருந்த நிலையில் மு.கா. தலைவர் ஹக்கீம் நேற்று முன்தினம் கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் சிராஸின் பதவி வறிதாகும் பகிரங்க அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமின் தீர்க்கமான, அதிரடியான இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மு.கா. உறுப்பினர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமின் இந்த அறிவிப்பு மிக மிகச் சரியானதென்பதைத் கோடிட்டு காட்டும் வகையில் செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி., கிழக்கு மாகாண சபையின் மு.கா. உறுப்பினர்கள் மற்றும் கட்சி அங்கத்தவர்கள் சிராஸ் மீராசாஹிபுடன் எத்தகைய தொடர்புகளையும் வைத்திருக்க கூடாதென அறிவித்துள்ளார்.

கல்முனை மேயர் விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்களில் மாத்திரமின்றி அம்பாறை அரசியலிலும் தற்போது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் இதயம் என வர்ணிக்கப்படும் கல்முனையை மையமாகக் கொண்ட கல்முனை மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமமாக சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய நான்கு பிரதான கிராமங்களும் அடங்குகின்றன. இதனைத் தவிர தமிழர் பெரும்பான்மையாக வாழும் பாண்டிருப்பு, கல்முனை தமிழ்ப் பிரதேசங்களும் உள்ளடங்குகின்றன.

கடந்த மாநகர சபைத் தேர்தலில் சுமார் 8 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட மருதமுனையில் 4 பேரும், சுமார் 18 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட சாய்ந்தமருதுவில் 4 உறுப்பினர்களும், சுமார் 4000 வாக்காளர்களைக் கொண்ட நற்பிட்டிமுனையில் ஓர் உறுப்பினரும், சுமார் 17 ஆயிரம் வாக்குகளைக் கொண்ட கல்முனைக்குடியில் நிசாம் காரியப்பர் உட்பட 2 உறுப்பினரும் மு.காவில் தெரிவாகினர்.

இந்த நான்கு கிராமங்களில் சிராஸின் சொந்த ஊரான சாய்ந்தமருது சுமார் 80 சதவீத முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களைக் கொண்ட பிர தேசமாகும். மேயர் சர்ச்சைக்குப் பின்னர் மு.கா மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் வெளிப்படையாக சிராஸ¤க்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் ஏனைய உறுப்பினர்கள் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடாது மெளனமாகவே இருந்து வந்தனர் – வருகின்றனர்.

மு.கா. தலைவரின் உறுதியான இந்த அறிவிப்பையடுத்து மாநகர சபை உறுப்பினர் பிர்தெளஸ் தலைமையிலான சாய்ந்தமருது மு.கா. மத்திய குழு உறுப்பினர்களின் முக்கியஸ்தர்கள் அவசரமாக மு.கா. தலைவர் ஹக்கீமை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

கட்சித் தலைவர் மேற்கொண்டுள்ள தீர்மானம் எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட அரசியலுக்கு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாதென்பதே தமது அவாவென அவர்கள் கூறுகின்றனர்.

கல்முனை மேயர் விவகாரத்தால் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ¤க்குள் பிரதேச வாதம் தலைதூக்கக்கூடாது என மு.கா. உயர் பீட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பிரதேச வாதத்தை அனுமதிக்க முடியாதெனவும் கட்சியின் கட்டுப்பாட்டை எவரும் மீறமுடியாது எனவும் கட்சியின் தலைவர் ஆணித்தரமாக தெரிவிக்கின்றார். கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் பதவி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முடிவு எதிர்வரும் தினங்களில் அம்பாறை மாவட்ட அரசியலில் மிகவும் சூடுபிடிக்கும் எனவும் அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

மு.கா.வின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் தலைவரின் இந்த முடிவு தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க மறுக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் ஏதாவது சமரச முயற்சிக்கு இடமுண்டா என கட்சித் தலைவருக்கு மிக நெருக்கமான அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஒருவரிடம் வினவிய போது,

தலைவர் ஹக்கீம் இந்த விடயத்தில் தெளிவான உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், சமரசத்துக்கான வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளதெனவும் தெரிவித்தார்.

-Tinakaran

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காட்டிக் கொடுப்பதில் போட்டியிடும் கட்சிகள்-ஆசிரியர் தலையங்கம்!
Next post சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு ஒன் அரைவல் முறையில் வீசா!