
பிரான்ஸை போலவே நெதர்லாந்திலும் நெருக்குதலை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள்
பிரான்ஸை போலவே நெதர்லாந்திலும் நெருக்குதலை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள்
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மெக்ரோன் அறிமுகம் செய்த பிரிவினைவாத சட்டத்தின் தொடர்ச்சியாக அந்த நாட்டில் முஸ்லிம்களுக்கான சுதந்திரம் மேலும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே நெதர்லாந்து பாராளுமன்றமும் அந்த நாட்டில் வெளிநாட்டு உதவிகள் மற்றும் செல்வாக்குடன் செயற்படும் பள்ளிவாசல்களின் செயற்பாடுகளைத் தீவிரமாகக் கண்கானிக்க முடிவு செய்துள்ளது.
நெதர்லாந்தில் இஸ்லாம் கிறிஸ்தவ மதத்தை அடுத்து இரண்டாவது பெரிய மார்க்கமாகும். அந்த நாட்டின் சனத்தொகையில் ஐந்து வீதமானவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றனர். நாட்டின் பிரதான நான்கு நகரங்களான அம்ஸ்டர்டாம், ரொடர்டாம், ஹேக் மற்றும் உட் ரெடச் ஆகிய நகரங்களில் அவர்கள் பரந்து வாழ்கின்றனர்.
நெதர்லாந்தில் இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப தடங்களை 16ம் நூற்றாண்டு காலப்பகுதியில் இருந்து காண முடிகின்றது. துருக்கி சாம்ராஜ்ஜியத்தின் ஒரு சிறிய வர்த்தக குழு தான் அங்கு துறைமுக நகரங்களில் முதலாவதாக கால் பதிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக அங்கு மதலாவது பள்ளிவாசல் அம்ஸ்டர்டாம் நகரில் 17ம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் கட்டப்பட்டது.
1960 களிலும் 1970களின் ஆரம்ப பகுதியிலும் மொரோக்கோ, துருக்கி, அல்ஜீரியா மற்றும் டியுனீஷியா ஆகிய நாடுகளில் இருந்து குடியேற்றவாசிகள் வந்து இங்கு வாழத் தொடங்கினர். 1980 களிலும் அதன்பிறகு விஷேடமாக 1990 களிலும் அகதிகளாகவும் புகலிடம் கோருபவர்களாகவும் பொஸ்னியா, சோமாலியா, ஈரான், பாகிஸ்தான், அப்கானிஸ்தான் மற்றும் ஈராக் அகிய நாடுகளில் இருந்தும் முஸ்லிம்கள் இங்கு வரத் தொடங்கினர்.
தற்போது அங்குள்ள முஸ்லிம்களின் நிலைபற்றி பத்தி எழுத்தாளரும், மனித உரிமை செயற்பாட்டாளரும், தேசிய மாணவர் யூனியனின் முன்னாள் தலைவியுமான மாலி பொயோடியா குறிப்பிடுகையில் முஸ்லிம் சனத்தொகையின் சிவில் உரிமைகளைப் பறிப்பதற்காக நெதர்லாந்து தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாத முற்பகுதியில் அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் பள்ளிவாசல்களின் வெளிநாட்டு செல்வாக்கு பற்றி கண்கானிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த நெதர்லாந்து பாராளுமன்றம் முடிவு செய்துள்ளதாகவும் தீவிர வலது சாரிப் போக்கு வாக்குகளை அரசியல் கட்சிகள் குறிவைத்துள்ள நிலையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் வகுத்த அதே திட்டங்களைப் போலவே நெதர்லாந்தில் உள்ள முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் இப்போது எந்த நேரத்திலும் மூடப்படலாம். அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கைகள் என ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து அவற்றுக்கான நிதிகள் தடுக்கப்படலாம். இந்த அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான வெளிநாட்டு செல்வாக்கை மட்டுப்படுத்தும் மேலதிக நடவடிக்கைகளுக்கு தற்போது டச்சு அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு எதிராகத் தடைகளைக் கொண்டு வந்து தண்டப் பணங்களையும் விதிக்கலாம்.
முஸ்லிம்களை காட்டுமிராண்டிகளாக சித்தரிக்கும் நடவடிக்கைகள் அங்கு மீண்டும் தொடங்கி உள்ளன. அவர்கள் நாகரிகம் குறைவானவர்கள் டச்சுப் பெறுமானங்களை மதிக்க அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இதுவரை எந்தத் தவரும் செய்யாத நிலையில் சமய ரீதியான வாழ்வை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தேவையில்லாத அரசியல் செல்வாக்கு பள்ளிவாசல்கள் மீது திணிக்கப்படுகின்றன. அபாயகரமான வெளிநாட்டு செல்வாக்கின் கீழ் அவை இருப்பதாகக் காட்டப்பட்டு அதன் அடிப்படையிலான இனவாத போக்கு தலையெடுக்கத் தொடங்கி உள்ளது. சிவில் உரிமைகள் நசுக்கப்படுவதை நியாயப்படுத்த பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.
ஐரோப்பா முழுவதும் உள்ள அரசுகள் இப்போது இவ்வாறான போக்கினை தான் பின்பற்றி வருகின்றன. அவர்களது சமூகங்களுக்குள் வேரூன்றிப் போயுள்ள பொருளாதார அரசியல் மற்றும் சமூகப் பின்னடைவுகளைப் புறந்தள்ள இஸ்லாத்தை ஒரு காரணியாகப் பயன்படுத்துகின்றனர். தமது பின்னடைவுகளை மறைப்பதற்காக சமயம் கண்கானிக்கப்பட வேண்டும் அது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற முடிவுகளுக்கு அவர்கள் வந்துள்ளனர். இதற்காக தமது பூமிகளின் நம்பிக்கையை ஆதரிக்கும் வகையில் தத்துவார்த்த சிந்தனைகளையும் அரசுகள் வடிவமைக்கின்றன. ஆனால் அந்த நம்பிக்கைகள் எவை என்பது தான் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
முஸ்லிம் குடியேற்றவாசிகள் இலகுவான இலக்கு மட்டும் அல்ல அவர்கள் தான் அவசியமானவர்களும் கூட கொவிட்-19 நோய்ப் பரவலை மோசமாகக் கையாண்டு வருகின்ற நிலையில் அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சிகள் மூலம் இது தெரிகின்றது.
நெதர்லாந்தின் ஆளும் கட்சியான வி.வி.டி அந்த நாட்டின் தேசியவாத சுதந்திரக் கட்சித் தலைவரான கீர்ட் வில்டர்ஸ் போன்றவர்களின் வளர்ச்சியை மிகக் கடுமையான போட்டியாகப் பார்க்கின்றனர். 2019ல் பெண்களுக்கான இஸ்லாமிய ஆடைகள் தடை செய்யப்பட்டது முதல் வில்டர்ஸின் கண்ணோட்டங்களையும் கொள்கை முன் மொழிவுகளையும் இயல்பான ஒன்றாகவே அரசாங்கமும் நோக்கி வருகின்றது.
உதாரணத்துக்கு வெளிநாடு என்று ஏதாவது ஒன்றில் பெயர் இருக்குமானால் அதை வைத்து மக்கள் குறி வைக்கப்படுவதோடு ஆயிரக்கணக்கான யூரோக்களை மீளச் செலுத்துமாறு வற்புறுத்தும் தவறான ஒரு போக்கும் அங்கு கடைப்பிடிக்கப்படுகின்றது. இதனால் பல குடும்பங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துள்ளன. சிலர் தமது வீடுகளை விற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்கொலை முயற்சிகள் விவாகரத்துக்கள் என இன்னும் பல சமூகப் பிரச்சினைகளும் அதனால் தலைதூக்கி உள்ளன. இந்தப் பிரச்சினைகள் நாடு முழுவதும் தீவிரமடைந்ததன் விளைவாக டச்சு அiசாங்கம் இராஜினாமா செய்யும் நிலையும் ஏற்பட்டது.
எவ்வாறாயினும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் இடம்பெற்ற இந்தப் பாரிய அளவிலான நடவடிக்கையானது இனவாதமாகவும், வெளிநாட்டவர்கள் மீதான ஒரு வெறுப்பு நிலையுமாகவே நோக்கப்பட்டது. கடந்த மாதம் இந்தப் பிரச்சினை நெதர்லாந்தில் அவதானிக்கத்தக்க அளவு மோசம் அடைந்தது. ஆனால் இந்த நிலையிலும் கூட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்கக் கேடான விதத்தில் இப்போது உள்ளதை விட மோசமான பாரபட்ச கொள்கைகளுக்கு வாக்களித்தனர். அதை அவர்கள் தவிர்த்துக் கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமடையவில்லை. டச்சு ஊடகங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட இனவாதம், அதே முறையில் நிறத்தின் அடிப்படையில் மக்கள் இலக்கு வைக்கப்படுகின்றமை என்பன அரச ஊழல்களின் பின்னணியில் உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளன.
மகிழ்ச்சியான காலகட்டத்தில் டச்சு மொரோக்கோ மாணவிகள் தமது பாடசாலைக்கு முன்னாள்.
சில மாதங்களுக்கு முன் டச்சு பாராளுமன்றத்துக்கு முன் திரண்ட சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் தமது அரசியல் சாசன உரிமைகளைப் பாவித்து இஸ்லாத்தின் இறைதூதர் அவமானப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அது சம்பந்தமாகப் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் வற்புறுத்தினர். உள்ளுர் சமயத் தலைவர் ஒருவரின் தலைமையின் கீழ் அவர்கள் இது சம்பந்தமான மகஜர் ஒன்றிலும் ஒப்பமிட்டனர். இதனால் அவர்கள் பயங்கரமான இஸ்லாமியவாதிகள்; என வர்ணிக்கப்பட்டனர். டச்சு தேசத்துக்கு எதிரானவர்கள் எனவும் முத்திரை குத்தப்பட்டனர். இந்த மகஜரில் ஒப்பமிட்டவர்கள் நெதர்லாந்துக்கு சொந்தமானவர்கள் அல்ல என வில்டர்ஸ் பிரகடனம் செய்தார்
ஜனநாயக நிறுவனங்கள் ஒரு சிலருக்கு மட்டுமே என்பது போன்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மொரோக்கர்ளும், துருக்கியர்களும் வேலை செய்வதற்காக வந்தவர்கள் அவர்கள் ஒரு சிறு சம்பளத்தைப் பெறும் கூட்டம். தமது வாய்களை மூடிக் கொண்டு மௌனமாக இருக்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து அரசியல் அரங்கில் தீவர வலது சாரி முதல் தீவிர இடது சாரி வரை அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நிற அடிப்படையிலும், குடியேற்ற அடிப்படையிலும் மற்றும் முஸ்லிம்களையும் பகடைக் காய்களாக்கத் தயார் என்பதை வெளிப்படுத்தி வந்துள்ளனர். இது வலது சாரி தேர்தல் தொகுதிகள் ரீதியான அரசியல் முறையை வளர்ச்சி அடையச் செய்துள்ளதோடு மட்டும் அன்றி இந்த இனங்களுக்கு இடையில் மோதல்களுக்கும் வழியமைத்துள்ளது. தீவிர வலது சாரிப் போக்கு தெருக் குழுக்கள் இந்த வெறுப்புணர்வு அதிகரிப்பின் காரணமாக நன்மைகளை அடைந்து வருகின்றனர்.
றொட்டர்டாம், அம்ஸ்டர்டாம் உற்பட நூற்றுக்கணக்கான நகரங்களில் தீவிர வலது சாரி ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. ஊரடங்குச் சட்டங்களை மீறல், கடைகள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளை உடைத்தல், கொவிட் முடக்கநிலை விதிமுறைகளை மீறல் என இந்த அட்டகாசங்கள் தொடருகின்றன. இவர்கள் தான் மக்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் கோஷமிடுகின்றனர். முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டும், அவர்களைக் கொல்ல வேண்டும், சமூகங்களுக்கு இடையிலும் குடியேற்றவாசிகளுக்கு இடையிலும் கலகங்களைத் தூண்டி விட வேண்டும், அவர்களுக்கான சுதந்திரங்களை மட்டுப் படுத்த வேண்டும் எனவும் இவர்கள் தரப்பில் இருந்து தான் கோஷங்கள் எழுகின்றன.
பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் அதற்கு வெளியேயும் வளர்ச்சி கண்டு வரும் இனவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டிய பொறுப்பு இப்போது இந்த சமூகங்களிடமே விடப்பட்டுள்ளது.
லத்தீப் பாரூக்