புத்தளத்தில் கடலரிப்பினால் காவு கொள்ளப்படும் கரையோர பிரதேசம்! - Sri Lanka Muslim

புத்தளத்தில் கடலரிப்பினால் காவு கொள்ளப்படும் கரையோர பிரதேசம்!

Contributors

இலங்கையில் கடலரிப்பு இன்று முக்கியமானதொரு பிரச்சினையாக உள்ளது. கடலை அண்டியுள்ள பல பிரதேசங்கள் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பிரதேசங்களை சிறிது சிறிதாக அரித்து கடலானது தன்வசப்படுத்துவதன் மூலமாக நீர்ப் பிரதேசம் அதிகரிக்கப்பட்டு நிலப்பிரதேசம் குறைவடைகின்றது.

புத்தளம் மாவட்டத்தின் உடப்பு, சிலாபம், மாரவில, தொடுவாவ போன்ற கடலை அண்டிய பிரதேசங்கள் அன்றாடம் கடலரிப்புக்கு முகங்கொடுத்து வருகின்றன. குறிப்பாக மாரவில் முகுதுகொட்டு பகுதியில் 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கடலரிப்பினால் வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதுடன் 32 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக் காலமாக கடலரிப்பினால் கடலோரத்தில் வாழும் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதுடன் அவர்களுடைய இருப்பிடங்கள் முற்றாக அழிந்து விடும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளன. மேற்கூறிய பிரதேசங்களை அண்டி சுமார் 300 குடும்பங்களுக்கும் அதிகமான மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் கடலரிப்பினால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகியும் வருகின்றது.

தற்போது மீனவ மக்களின் படகுகளைக் கூட கரையோரங்களில் வைக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இரவில் கரையில் படகை ஒதுக்கிக் கட்டினால் மறுநாள் காலை படகு கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றது. இவ்வாறான நேரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லப் புறப்படும் காலமும் தாமதமாகின்றது. அத்தோடு பல படகுகள் கடலின் ஆழத்திற்குள் மாயமாய் போன சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துள்ளமையையும் அறிய முடிகின்றது.

சுனாமி ஏற்பட்ட போது பாதுகாப்புக்காக இப்பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளில் சவுக்கு மரங்கள் நடப்பட்ட போதிலும் தற்போது கடலரிப்பினால் அந்த மரங்கள் சரிந்து விழுகின்றன. குறிப்பாக உடப்பில் முகத்துவாரம் இல்லாத காரணத்தினால் கடலின் சீற்றம் அதிகமாயுள்ளது. அதனால் உடப்பு கடலரிப்பால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகும் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாரவில, தொடுவாவ, சிலாபம் ஆகிய கடலை அண்டிய பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்காக கற்கள் போடப்பட்டுள்ள போதிலும் கடலரிப்பின் தீவிரம் இதுவரை குறைந்தபாடில்லை. சிலரது வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு நிலப்பரப்பும் கடலுக்குள் சென்றுள்ளது. மீனவர்களின் வாடிகள் மற்றும் தென்னை மரங்கள் கடல் அரிப்பினால் கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. மாரவில, சிலாபம் உள்ளிட்ட இடங்களில் உள்ள வாடிவீடுகள் அமைந்துள்ள இடங்களும் அரிப்பிற்கு உள்ளாகின்றன.இந்நிலையில் குறித்த கடற்பப்பிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருகின்றது.

மீனவர்களின் தொழில் பகுதிகள் கடலால் ஆக்கிரமிக்கப்படுவதால் அவர்கள் தொழிலுக்காக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் தமது குடும்பங்களை விட்டு நீண்ட தூரம் சென்று தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடலரிப்பின் காரணமாக உப்புநீர் உட்புகுவதால் நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டதாக ஆகின்றது. இதனால் இப்பிரதேசங்களில் வாழும் மக்களின் குடிநீர் ஆதாரமானது முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு வருகின்றது.

உடப்பு மீனவர் சங்கத்தின் உறுப்பினரான கண்ணபிரான் கருத்துத் தெரிவிக்கையில், “10 வருடங்களுக்கு முன்னர் கடலரிப்பினால் 15 வீடுகள் கடலோடு அள்ளுண்டன. அவர்களுக்கான மீள்குடியேற்றத்தை அப்போதைய கடற்தொழில் பிரதிப்பணிப்பாளர் மிள்ரோய் ​ெபர்ணான்டோ அமைத்துக் கொடுத்துள்ளார். தற்போது கடலுடன் போராடி வாழும் நிலை எமக்கு ஏற்பட்டு உள்ளது. கடற்றொழில் அமைச்சிடம் முறைப்பாடுகள் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என மனவேதனையுடன் தெரிவித்தார்.

கடலரிப்பிற்கு மக்களின் செயற்பாடுகளும் காரணங்களாக அமைகின்றன. ஆற்று மணல் அகழ்தல், மணற் கொள்ளை, தூண்டில் வளைவு அமைத்தல், பவளப்பாறைகள் அழிப்பு, கரையோரங்களில் முருகைக் கற்களைச் சேகரித்தல், முறையற்ற கடற்கரையோரக் கட்டட நிர்மாணம், கரையோரத் தாவரங்களை அகற்றுதல் போன்ற செயற்பாடுகளை சுட்டிக் காட்டலாம். மாரவில, தொடுவாவ போன்ற இடங்களில் கடற்கரையோரத்தில் கற்கள் போடப்பட்டுள்ள போதிலும் கல்வேலிகள் உடைந்து போயுள்ளன. கல்வேலிகள் சரிவர அமைக்கப்படவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இப்பிரதேச மக்கள் பல முறை உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரையும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தினமும் அம்மீனவ மக்களின் குடியிருப்புக்கள் சேதமாகிய வண்ணமே உள்ளன.

எனவே உடப்பு, தொடுவாவ, மாரவில, சிலாபம் ஆகிய கடற்பிரதேசங்களை அண்டி வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

செ. ரமேஷ் மதுசங்க

Web Design by Srilanka Muslims Web Team