புனித கஅபாவின் திறவுகோல் பொறுப்பாளர் மறைவு - Sri Lanka Muslim

புனித கஅபாவின் திறவுகோல் பொறுப்பாளர் மறைவு

Contributors
author image

கான் பாகவி

திருமக்காவில் உள்ள புனித கஅபா ஆலயத்தின் திறவுகோல் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தாரிடமே காலங்காலமாக இருந்துவருகிறது. அதன் இன்றைய பொறுப்பாளர் ஷைகு அப்துல் காதிர் பின் தாஹா அவர்கள் இறந்துவிட்டார்கள்.

 

ஹிஜ்ரீ 8ஆம் ஆண்டு ரமளான் மாதம் (கி.பி. 630 ஜனவரி) புனித கஅபா முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. இரத்தமின்றி கத்தியின்றி பெற்ற வெற்றி இது. எதிரிகள் மன்னிக்கப்பட்டார்கள். அபூசுஃப்யான் (ரலி) அவர்களைப் போன்ற பெரும் தலைவர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள். மக்கா வெற்றி வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

 

ஏக இறை வழிபாட்டிற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஅபாவை ஆக்கிரமித்திருந்த சிலைகள் அகற்றப்பட்டன. கஅபா தூய்மை அடைந்தது. புனித கஅபாவின் திறவுகோல் உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் வசம் இருந்தது. சாவியைக் கொண்டுவரச் சொன்ன நபிகளார் கஅபாவைத் திறந்து உள்ளே சென்று இறையைத் தொழுதுவிட்டு வெளியே வந்தார்கள்.

 

அப்போது அலீ (ரலி) அவர்கள் (அல்லது அப்பாஸ் (ரலி) அவர்கள்) கஅபாவின் திறவுகோலுடன் நபியவர்களைச் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதரே! ஹாஜிகளுக்கு நீர் புகட்டும் பணியுரிமை, கதவு திறக்கும் உரிமை ஆகியவற்றை எங்களுக்குத் தாருங்கள் என்று கோரினார்கள். நபிகளார் மறுத்துவிட்டார்கள். உஸ்மான் பின் தல்ஹா எங்கே? என்று வினவிய நபியவர்கள், அவர் வந்தபின் அவரிடமே கஅபாவின் திறவுகோலை ஒப்படைத்து இவ்வாறு கூறினார்கள்:

 

உஸ்மான்! உங்கள் திறவுகோலை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள்! இது உங்கள் குடும்பத்தார் வசமே நிரந்தரமாக இருக்கும். அக்கிரமக்காரன்தான் அதை உங்களிடமிருந்து பறிப்பான். அல்லாஹ், தன் இல்லத்திற்கு உங்களைக் காப்பாளராக ஆக்கியுள்ளான். இன்று நன்மையின் நாள்; வாக்கை நிறைவேற்றும் நாள்.

 

இவருடைய வழித்தோன்றலில் 108ஆவதாக வந்த இன்றைய சாவி காப்பாளர் ஷைகு அப்துல் காதிர் பின் தாஹா அஷ்ஷைபி (74) அவர்கள்தான் 23.10.2014 அன்று இறந்துபோனார். 5 மாத காலம் நோயுற்று, ஜித்தாவில் மன்னர் காலித் மருத்துவமனையின் சிகிச்சை பெற்றுவந்தார். மஸ்ஜிதுல் ஹராமில் அஸ்ருக்குப்பின் இறுதித் தொழுகை நடந்தது. ‘அல்முஅல்லா’ அடக்கத் தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

கடந்த 16 நூற்றாண்டுகளாக ‘ஆலு ஷைபா’ குடும்பத்தாரே கஅபாவின் சாவி காப்பாளர்களாக இருந்துவருகின்றனர். குடும்பத்தில் வயதில் மூத்தவர் இப்பொறுப்பை ஏற்பார். இவருக்குமுன் காப்பாளராக இருந்த ஷைகு அப்துல அஸீஸ் பின் அப்தில்லாஹ் ஷைபீ 2010ஆம் ஆண்டு இறந்தார். அதையடுத்து ஷைகு அப்துல் காதிர் இப்பொறுப்பை ஏற்றார்.

 

இவரது மறைவை அடுத்து இதே குடும்பத்தில் மூத்தவராக இருக்கும் டாக்டர் ஸாலிஹ் பின் ஸைனுல் ஆபிதீன் அஷ்ஷைபீ இப்பொறுப்பை ஏற்கிறார்.

Web Design by Srilanka Muslims Web Team