பெண் கொலை : பொலிஸாருக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

Read Time:1 Minute, 46 Second

லண்டனில் சாரா எவரார்ட் என்னும் பெண் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சாராவைக் கொலை செய்ததாக பொலிஸ் அதிகாரி மீது கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்குச் சில மணி நேரத்துக்குப் பின்னர் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

திரண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் பெண்களாவர். நகரில் இரவு நேரங்களில் எப்படிப் பாதுகாப்பாகச் செல்வது என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

33 வயது சாரா இம்மாதம் 3 ஆம் திகதி காணாமல் போனார். பொலிஸ் அதிகாரி வேய்ன் காவ்ஸேன்ஸ் வீட்டுக்கு அருகே அந்தப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிஸ் அதிகாரி, சாராவை கடத்திக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

வைரஸ் தொற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக இங்கிலாந்தில் மக்கள் ஒன்றுகூட அனுமதியில்லை. அதைப் பொருட்படுத்தாமல் சாராவின் கொலையைக் கண்டித்து மக்கள் திரண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பது பற்றிக் பொலிஸார் தகவல் வெளியிடவில்லை.

Previous post ஊடகவியலாளர் கடத்தப்பட்டு வீதியோரத்தில் தூக்கி வீசப்பட்டார் – ஹர்ஷ Mp யும், கருவும் டுவிட்டர் பதிவுகள்..!
Next post இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம்..!