பொதுநலவாய நாடுகளின் தலைவராகும் ஜனாதிபதி வீட்டின் தலைவராக செயற்பட முடியாது: ஐ.தே.க - Sri Lanka Muslim

பொதுநலவாய நாடுகளின் தலைவராகும் ஜனாதிபதி வீட்டின் தலைவராக செயற்பட முடியாது: ஐ.தே.க

Contributors

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை சந்தித்து பேச முடியுமானால், அவர்களால் ஏன் வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச முடியாது என ஐ. தே.கவின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.

சுற்றுலா வீசாவில் இலங்கை வந்த இரண்டு வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீசா நடைமுறைகளை மீறியதாக கூறி அரசாங்கம் அவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை நடத்தியது.

ஆனால் அதே வீசா அனுமதியில் இலங்கை வரும் கசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பாக்கருக்கு எதிராக அப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.

அதேவேளை இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவி கிடைக்க உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் அந்த பதவியில் அவர் மெதமுலன (மெதமுலன என்பது ஜனாதிபதியின் குடும்ப மாளிகை) தலைவராக செயற்படாது பொதுநலவாய நாடுகளின் தலைவராக செயற்பட வேண்டும்.

பொதுநலவாயத்தின் கொள்கைகளின்படி முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டமை அதன் இணக்கப்பாடுகளை மீறியது என்பதை ஜனாதிபதி உணர்ந்து கொள்வார்.

ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா இரண்டு சுயாதீன அறிக்கைகளை பெற்றுள்ளார். அந்த அறிக்கைள் அவரது மேசையில் இருக்கின்றன என்றார்.lw

Web Design by Srilanka Muslims Web Team