பொதுநலவாய மாநாடு முடிவில் மக்களுக்கு கிடைத்திருப்பது சோகம் - Sri Lanka Muslim

பொதுநலவாய மாநாடு முடிவில் மக்களுக்கு கிடைத்திருப்பது சோகம்

Contributors

CHOGM முடிவடைந்த கையோடு நாட்டு மக்களுக்கு மிஞ்சுவது சோகம் தான் என்பதை நாம் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளோம். அதை இப்போது அரசாங்கம் நிரூபித்துள்ளது என்று தெரிவித்துள்ளார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி.

 

அவர் இது பற்றி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இரண்டு நாற்களாக இடம்பெற்ற கேலிக் கூத்துக்காக செலவழிக்கப்பட்ட மொத்த தொகை இன்னும் மர்மமாகவே உள்ளது. தேசிய ரீதியாக பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்த நிவாரணத்தையும்,நிம்மதியையும் பெற்றுத் தராத வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட கையோடு அரசாங்கம்CHOGM செலவுகளை சமாளிப்பதற்காக கிட்டத்தட்ட 109 கோடி ரூபா குறை நிரப்பு பிரேரணை ஒன்றையும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த 109 கோடி ரூபா CHOGM க்காக செலவழிக்கப்பட்ட மொத்த தொகை அல்ல. செலவழிக்கப்ட்டுள்ள தொகையில் பாராளுமன்றத்தில் இருந்து மேலதிகமாக வேண்டப்படும் தொகைதான் இது.

 

எனவே செலவழிக்கப்பட்ட மொத்த தொகை என்ன? என்பது இன்னமும் இந்த நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இது மிகவும் தவறானதாகும். குறை நிரப்பு பிரேரணை, 2014 வரவு செலவுத் திட்டம் என்பனவற்றை சமர்ப்பிப்பதற்கு முன் CHOGM க்கு செலவான மொத்த தொகை என்ன? என்ன என்ன பிரிவுகளில் எவ்வளவு பணம் செலவானது? என்பது போன்ற முழுமையான விவரங்களை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். அது தான் ஜனநாயக முறையாகும்.

 

ஆனால் அதை செய்ய அரசு தவறிவிட்டது. 2013ல் இடம்பெற்ற ஒரு முக்கியமான நிகழ்வின் கணக்கு வழக்குகளில் தெளிவில்லாமல் அரசு எப்படி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்களைத் தயாரிக்க முடியும்? மொத்த செலவுத் தொகை எவ்வளவு என்று வெளிப்படுத்தாமல் எப்படி குறைநிரப்பு பிரேரணை கொண்டு வர முடியும்? என்ற கேள்விகள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இதனிடையே பிரதான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த மாநாட்டுக்காக 1508 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதற்கான சில வவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

 

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் ஆரம்ப தினத்தில் பேசும் போது தான் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இது மிகவும் ஆழமாக கவனம் செலுத்த வேண்டிய ஒரு விடயமாகும். இதை அப்படியே விட்டு விட முடியாது. இந்த தகவலின் உண்மை நிலையை அரசு மக்களுக்கு விளங்க வைக்க வேண்டும். அதை தெரிந்து கொள்ளும் முழுமையான உரிமை இந்த நாட்டின் சகல பிரஜைகளுக்கும் உள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு தலைமை தாங்கும் நாடு என்ற ரீதியில் இலங்கை அரசு மக்களின் இந்த உரிமையை தட்டிக் கழிக்க முடியாது.

 

இது பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கணக்கு.ஆனால் பாராளுமன்றத்துக்கு வெளியே கொழும்பு மாநகர சபை CHOGM க்காக மேலும் சுமார் 110 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக மாநகர நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதுவும் ஊர்ழுபுஆ கணக்கில் சேர்க்கப்பட வேண்டியது அல்லவா?அப்படியானால் CHOGM இன் மொத்த செலவுதான் என்ன? எண்ணிப் பார்த்தாலே தலை சுற்றுகின்றது. நிதியியல் வரைமுறைகள் எதையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு பெருந் தொகை பணத்தை கண்டபடி செலவு செய்யும் உரிமையை இந்த அரசுக்கு யார் வழங்கினார்கள்? இந்த அரசாங்கம் பொறுப்புக் கூறல் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் நடந்து கொள்வது மிகவும் வேதனைக்கு உரியதாகும்.

 

இந்த அர்த்தமற்ற அனுமதியற்ற செலவுகளின் பாதிப்பு சமர்ப்பிக்கப்ட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டது. கூமார் 4440 கோடி ரூபாவை அடுத்த ஆண்டில் வரி வருமானமாகத் திரட்டுவதை இலக்காகக் கொண்டே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளனர். இதற்காக எல்லா பொருட்கள் மீதுமான எல்லாவிதமான வரிகளும் மக்கiளால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

 

சாதாரண மக்களின் அன்றாட தேவையான தொலைபேசி கட்டணங்களைக் கூட அரசு விட்டு வைக்கவில்லை. இந்த சுமைகளைத் தாங்க முடியாமல் மக்கள் ஆத்திரமடைந்து நடு வீதிகளில் இறங்கி போராடத் தயாராகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகின்றது. இதனால் தான் CHOGM முடிந்தால் அடுத்து மக்களுக்கு சோகம் தான் என்பதை நாம் ஆரமபத்தில் இருந்தே கூறி வருகின்றோம்.(m)

Web Design by Srilanka Muslims Web Team