பொதுநலவாய மாநாட்டில் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு - Sri Lanka Muslim

பொதுநலவாய மாநாட்டில் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Contributors

இலங்கையில் நடந்த இறுதி போரில் ஏராளமான  தமிழர்கள் கொல்லப்பட்டனர், அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்றும், அதனால் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால் இந்திய அரசு சார்பில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இப்போது சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வக்கீல்கள் சுந்தரவதனம், ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்று மத்திய அரசு எடுத்த முடிவும், வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் மாநாட்டில் கலந்து கொண்டதும் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

1994–ம் ஆண்டில் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு அடிப்படை கட்டமைப்புகளை மீறாமல் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

அதன் பிறகும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், மக்களின் போராட்டங்களுக்கு பிறகும், மத்திய அரசு தமிழகத்தின் பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள முடிவெடுத்தது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது.

இனி இலங்கை குறித்த வெளியுறவு தொடர்பான விஷயங்களை தமிழ்நாடு அரசு அல்லது தமிழ் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்த பின்னரே முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகியிருக்கிறோம் என்றும் மனுதாரர் சுந்தரவதனன், மனுவை தாக்கல் செய்த வக்கீல் ராஜாராமன் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். இந்த வழக்கு இன்னும் இரண்டு வாரங்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team