பொன்சேகா மகிந்தரின் காலடியில் சரனாகதி அரசியல்? - Sri Lanka Muslim

பொன்சேகா மகிந்தரின் காலடியில் சரனாகதி அரசியல்?

Contributors

முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவை அரசாங்கத்துடன் இணைத்து கொள்வதற்கான முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமாக கடந்த சில நாட்களாக சில சுற்று பேச்சுவார்த்தைகள் அரசாங்க தலைவர்களுக்கும் பொன்சேகாவுக்கு இடையில் நடைபெற்றுள்ளதாக பேசப்படுகிறது.

சரத் பொன்சேகாவை அரசாங்கத்துடன் இணைக்கும் முயற்சி தோல்வியடைந்தால், அவரை அரசியல் ரீதியாக வலுப்படுத்தி ஏனைய எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் அளவில் அவரது கட்சியை வளர்த்தெடுப்பது தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் பெப்ரவரி மாத இறுதிக்குள் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய அரசாங்கம் எண்ணியுள்ளதாக அறியகிடைத்துள்ளது.

அத்துடன் மார்ச் மாதத்திற்கு முன்னதாக சரத் பொன்சேகாவின் குடிரிமையை மீண்டும் அவருக்கு வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றிக்கு பின்னர் அரசாங்கத்திற்கும் பொன்சேகாவுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின.

முரண்பாடுகள் முற்றிய நிலையில், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பொன்சேகா, 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவே வெற்றிப்பெற்றதாகவும் அரசாங்கத்தின் கம்பியூட்டார் சித்து விளையாட்டுகள் காரணமாக அவரது வெற்றி தோல்வியாக மாற்றப்பட்டதாகவும் அப்பொழுது பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் காலத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த பொன்சேகா, வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை பாதுகாப்புச் செயலாளரே சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதாக கூறியிருந்தார்.

எனினும் தான் அவ்வாறு கூறவில்லை. தனது கருத்து திரிபுப்படுத்தப்பட்டதாக பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

என்றபோதிலும் சர்ச்சைக்குரிய வெள்ளைக்கொடி கருத்து தொடர்பில் பொன்சேகா கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

இராணுவ நீதிமன்றம் நடத்திய விசாரணைகளில் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டதை அடுத்து அவரது இராணுவ ஜெனரல் பதவி அந்தஸ்து, ஓய்வூதியம், இராணுவப் பட்டங்கள் பதக்கங்கள் உட்பட அனைத்தும் பறிக்கப்பட்டதுடன் வெள்ளைக் கொடி வழக்கில் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

அத்துடன் குடியுரிமையும் பறிக்கப்பட்டது. வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த பொன்சேகா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலையானார்.mahinda-rajapaksa

Web Design by Srilanka Muslims Web Team