பொலிவேரியனின் குறை தீர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : மழைக்காலங்களில் வீதிகள் குளமாகிறது என கவலை தெரிவிக்கும் மக்கள் ! - Sri Lanka Muslim

பொலிவேரியனின் குறை தீர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : மழைக்காலங்களில் வீதிகள் குளமாகிறது என கவலை தெரிவிக்கும் மக்கள் !

Contributors
author image

நூருள் ஹுதா உமர்

நூருல் ஹுதா உமர்

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததன் பின்னர் கடந்த மஹிந்த அரசினால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள் மூன்று ஜனாதிபதிகளை மூன்று பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்தும் இதுவரை தம்முடைய குறைபாடுகள் நிபர்த்திசெய்யப்பட வில்லை என ஏக்கம் தெரிவிக்கின்றனர்.

அங்குள்ள வீதிகள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளதையும், தரமற்ற அபிவிருத்திகள் மூலம் பாதைகள் உடைந்து காணப்படுவதையும் பலதடவைகள் அதிகாரிகள், அரசியல் வாதிகளுக்கு எடுத்துரைத்தும் எவ்வித பயனும் கிட்டவில்லை என்று தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் பாம்பு போன்ற நச்சு விலங்குகள் வீடுகளை நோக்கி படையெடுக்கும் நிலை உள்ளதாகவும் இரவில் பொதியளவிலான வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் இல்லாமையால் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருவதாகவும், இந்த பிரதேசத்தின் பிரதான நுழைவாயிலாக உள்ள பாலம் கூட மிகப்பெரிய சேதத்தை அடைந்துள்ளதாகவும் மக்கள் குறை கூறுகின்றனர்.

வீதிகளில் குளம் போன்று நீர் தேங்கி நிற்பனதால் பாதசாரிகளும், பாடசாலை மாணவர்களும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும் அடிக்கல் நடப்பட்டு பல வருடங்கள் மற்றும் பல மாதங்கள் கடந்தும் வீதியபிவிருத்திக்கு நடப்பட்ட எந்த அடிகற்களும் இன்னும் செயலுருவம் பெறவில்லை என்று தெரிவிக்கின்றனர். சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்களின் நிலையறிந்து அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி திட்டங்களில் இந்த வீதிகளை சீராக பாவனைக்கு உகந்தளவில் மாற்றித்தருமாறு அரசிடம் மக்கள் கோரிக்கை விடுப்பதுடன், கல்முனை மாநகர சபை பொதியளவிலான தெருவிளக்குகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team