பொலிஸ் உயர் அதிகாரி வீட்டில் காய வைக்க தயார்படுத்திய 650 கஞ்சா செடிகள் - CID இற்கு கைமாறிய வழக்கு! - Sri Lanka Muslim

பொலிஸ் உயர் அதிகாரி வீட்டில் காய வைக்க தயார்படுத்திய 650 கஞ்சா செடிகள் – CID இற்கு கைமாறிய வழக்கு!

Contributors

மொணராகலை பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) சிசிர குமார கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் (STF) கட்டளையிடும் அதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உலர்த்துவதற்காக தயார் படுத்தப்பட்ட 650 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் போது அங்கு நிலத்தடி உலோக கண்காணிப்பு (ஸ்கேனர்) கருவி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மொணராகலை பிரிவிற்கு பொறுப்பான SSP, அவரது சாரதியான கான்ஸ்டபிள், அவரது இல்லத்தில் பணியாற்றிய சார்ஜெண்ட் ஆகிய 3 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் மொணராகலை பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் மொரட்டுவை, எகொட உயன பிரதேசத்தை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 06 பேர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இச்சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஜீப் வண்டியொன்றையும் STF கைப்பற்றியுள்ளனர்.

மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கைது தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்கள குழுவொன்று மொணராகலை பகுதிக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இப்பொலிஸ் அதிகாரிகள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, நிஹால் தல்தூவ மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team