
போர் மூண்டால் அமெரிக்காவே பொறுப்பு! – வடகொரியா எச்சரிக்கை.
தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா நடத்தவிருக்கும் கடற்போர் ஒத்திகை காரணமாக போர் மூண்டால், அதற்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும் என்று என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தேவைப்பட்டால் அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது அணு ஆயுதத் தாக்குதல் தொடுப்போம் என்று சமீபத்தில் வட கொரியா மிரட்டல் விடுத்திருந்தது.மேலும், தனது பழைய புளூட்டோனியம் அணு உலை ஒன்றையும் அந்நாடு மீண்டும் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
இதற்கு பதிலடி கொடுப்பதற்காக கடந்த வாரம் அமெரிக்காவும், தென் கொரியாவும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டன.அதன்படி, கொரிய தீபகற்பத்துக்கு அருகில் தென் கொரியா, ஜப்பான் நாட்டு போர்க் கப்பல்களுடன் இணைந்து அமெரிக்காவின் அணுசக்தி விமானந்தாங்கி கப்பல் போர் ஒத்திகையில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, வட கொரியா செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன. எதிர்பாராத விதமாக ஏற்படும் எந்தவொரு பேரழிவுக்கும் அமெரிக்கா தான் பொறுப்பேற்க வேண்டும். எங்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட முயன்றால், அதற்கு தக்க பதிலடி கொடுக்க வட கொரிய மக்களும், ராணுவத்தினரும் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எனினும், மீட்புப் பணிகளுக்காக ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் சாதாரண ஒத்திகைதான் இது என்று அமெரிக்க – தென் கொரிய கூட்டுப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை தொடங்குவதாக இருந்த இந்த ஒத்திகை, பருவநிலை காரணமாக தள்ளி வைக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.