மக்காவில் யாத்ரீகர்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு; மக்கா கவர்னர் உத்தரவு! - Sri Lanka Muslim

மக்காவில் யாத்ரீகர்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு; மக்கா கவர்னர் உத்தரவு!

Contributors
author image

அபுசாலி முகம்மட் சுல்பிகார்

முஸ்லிம்களின் புனித பூமியான மக்காவில் றமலான் மாதத்தில் லைலத்துல் கத்ர் இரவு காலங்களில் யாத்ரீகர்களுக்கு சஹர் உணவு வழங்க மக்கா கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

றமலான் மாதத்தில் உம்ரா புனித யாத்திரை மேற்கொள்ள உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் மக்காவில் குவிந்துள்ளனர். ரம்ஜான் மாதத்தின் இறுதி பத்தில் க்யாமுல் லைல் என்னும் அதிகாலை தொழுகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்நிலையில் க்யாமுல் லைல் தொழுகைக்கும். சுபுஹு தொழுகைக்கும் இடையே நேர அளவு குறுகியதாக இருப்பதால் அவர்களுக்கு சஹர் உணவு வழங்க வேண்டும் என்று மக்கா கவர்னர் காலித் அல் ஃபைசல் உத்தரவிட்டுள்ளார்.

அங்கீகரிக்கப் பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலம் சஹர் உணவு வழங்கப்படும் என்றும் மக்கா கவர்னர் தெரிவித்துள்ளார். மக்கா பள்ளியின் வெளிப்பகுதி, பேருந்து நிலையங்கள், மற்றும் வாகன நிறுத்தங்களில் சஹர் உணவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித றமலான் நோன்பு இன்னும் சில தினங்களில் முடிவுறும் நிலையில் யாத்ரீகர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே இஃப்தார் நோன்பு திறப்பதற்கு மக்காவில் உணவு வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team