மக்கா நகரில் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சிறப்­பான சேவையை வழங்க 95 ஆயிரம் தொண்­டர்கள் - Sri Lanka Muslim

மக்கா நகரில் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சிறப்­பான சேவையை வழங்க 95 ஆயிரம் தொண்­டர்கள்

Contributors
author image

Editorial Team

இந்த வருட ஹஜ் யாத்­திரை தொடர்பில் சவூதி அர­சினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள யாத்­தி­ரிகர் பரா­ம­ரிப்பு முகவர் நிறு­வ­னங்கள் தமது திட்ட வரை­பு­களை மக்கா ஆளுநர் காலித் அல்-­ப­ஸா­லிடம் கடந்த சனிக்­கி­ழமை சமர்ப்­பித்­துள்­ளன. ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் தங்­கு­மிட வச­திகள், சௌக­ரி­யங்கள், நலன்கள் உயர்­த­ரத்தில் இருப்­பதை உறு­திப்­ப­டுத்தும் வகையில் மேற்­படி திட்ட வரை­புகள் அமைந்­துள்­ள­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

ஹஜ் மற்றும் உம்­ரா­வுக்­கான சவூதி அமைச்சு தமது செயற்­திட்டம் 95,000 பணி­யா­ளர்­களை வேண்டி நிற்­ப­தாக குறிப்­பிட்­டுள்­ளது. மேலும் “BE HELPFUL” எனும் தன்­னார்வ திட்டம் இதில் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இத்­திட்­டத்தின் மூலம் மக்கா நகர் முழு­வ­து­மான யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட வழி­காட்டல் சேவை வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அரபு மற்றும் ஏனைய மொழி­களில் மொழி­பெ­யர்க்­கப்­பட்­டுள்ள அல்­குர்ஆன் பிர­தி­களை இல­வ­ச­மாக வழங்­குதல், பெண் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு பிரத்­தி­யேக உள்­ளக வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்தல், மக்கா பள்­ளி­வா­சலின் தூய்மை மற்றும் பரா­ம­ரிப்பை உயர் நிலையில் பேணுதல், ஸம் ஸம் புனித நீரை இல­குவில் பெற்றுக் கொள்ள உரிய கொட்­ட­கை­களை நிர்­மா­ணித்தல் போன்ற பல்­வேறு செயற்றிட்­டங்­க­ளுக்­கான திட்ட வரை­புகள் மஸ்­ஜிதுன் நபவி மற்றும் மக்கா பள்­ளி­வாசல் சம்­மே­ள­னத்­தினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் பிரத்­தி­யே­க­மாக 10,000 பணி­யா­ளர்­களை நிய­மிக்­க­வுள்­ள­தாக சம்­மே­ளனம் தெரி­வித்­துள்­ளது.

மக்கா மாந­கர சபை சமர்ப்­பித்­துள்ள திட்ட வரைபின் பிர­காரம் உணவு தரக் கட்­டுப்­பாடு, பெருந்­தெ­ருக்கள், பாலங்கள், சுரங்­கப்­பாதை ஆகி­ய­வற்றின் பரா­ம­ரிப்பு உள்­ள­டங்­க­லாக பொது இடங்­களின் சுகா­தா­ரத்­தையும் தூய்­மை­யையும் உயர்­நி­லையில் பேண­வென 23,000 பணி­யா­ளர்­களை இணைத்துக் கொள்­ள­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

மேலும் மக்கா சுகா­தார திணைக்­களம் 12.7 மில்­லியன் சவூதி ரியால்கள் செலவில் பல்­வேறு சுகா­தார செயற்­றிட்­டங்­களை இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை தொடர்பில் முன்­வைத்­துள்­ளது. தீவிர சிகிச்­சைக்­கான உயர் மருத்­துவ வச­தி­க­ளுடன் கூடிய 4,000 படுக்­கை­ய­றை­களை மருத்­து­வ­ம­னை­களில் மேல­தி­க­மாக நிர்­மா­ணிக்க உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் 128 தற்­கா­லிக, நிரந்­தர மருத்­துவ முகாம்கள், கள விஜயம் செய்­வ­தற்­கான 39 மருத்­துவ குழுக்கள் மற்றும் நோயா­ளி­களை இட­மாற்­று­வ­தற்­கான 100 அம்­பி­யூலன்ஸ் வாக­னங்கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

10,000 முத­லு­த­வி­யா­ளர்கள், தன்­னார்­வ­லர்கள், 3 வான்­வழி அம்­பி­யூலன்ஸ் விமா­னங்கள் உள்­ள­டங்­க­லாக 1,245 தற்­கா­லிக, நிரந்­தர மருத்­துவ நிலை­யங்­களை நிர்­மா­ணிக்க சவூதி செஞ்சிலுவைச் சங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாத்திரிகர்களின் தேவை நிமித்தம் 18,150 மில்லியன் கன மீற்றர் கொள்ளளவுடைய நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாக சவூதியின் தேசிய நீர் வடிகாலமைப்பு சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 21 சதவீதம் அதிகம் ஆகும்.

Web Design by Srilanka Muslims Web Team