Video; மங்கள சமரவீரவிற்கு எதிராக இளைஞர் முறைப்பாடு » Sri Lanka Muslim

Video; மங்கள சமரவீரவிற்கு எதிராக இளைஞர் முறைப்பாடு

Contributors

பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவிற்கு எதிராக இளைஞர் ஒருவர் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

மங்கள சமரவீரவின் வீட்டிற்குள் நுழைந்து, பொருட்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞனே இவ்வாறு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண இன்று பிற்பகல் தெரிவித்தார்.

தன்னால் கொள்ளையிட்டதாக கூறப்படுகின்ற பொருட்கள் மங்கள சமரவீரவினால் வழங்கப்பட்டவை எனவும், வீட்டிலுள்ள ஊழியர் ஒருவரை வைத்து முறையிட்டுள்ளதுடன், தனக்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்ட மங்கள சமரவீரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, தன்னை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக இரத்மலானை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், சட்டத்தரணியுடன் நேற்றைய தினம் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை நடாத்தி, நியாயத்தை பெற்றுத் தருமாறு பொலிஸ் தலைமையகத்திடம் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஷெவான் பிரியங்கர தெரிவித்த கருத்து :-

“மூன்று வருடங்களுக்கு முன்பே மங்கள சமரவீரவை நான் அறிவேன். என்னை தன்னுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதற்கு அவர் என்னை அழைத்தார். எனக்கு படகை வாங்கி தருவதாக கூறினார். இறுதியில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்னை அவர் பொலிஸ் சிறையில் அடைத்தார்”

சட்டத்தரணி எச்.ஏ.பிரேமசிறி தெரிவித்த கருத்து :-

“முறைப்பாடொன்றை பதிவு செய்வதற்காகவே ஷெவான் பிரியங்கரவுடன் நாம் இன்று பொலிஸ் தலைமையகத்திற்கு சென்றோம். மங்கள சமரவீரவினால்,  ஷெவான் பிரியங்கரவிற்கு ஏற்படுத்தப்பட்ட ஓரின சேர்க்கை நடவடிக்கைகள் குறித்தே முறைப்பாடு செய்யவே பொலிஸ் தலைமயகத்திற்கு இன்று வந்தோம்”

மங்கள சமரவீரவின் வீட்டிற்குள் நுழைந்து, அவரது பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, குறித்த இளைஞன் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த இளைஞனை மங்கள சமரவீர, ஓரிண சேர்க்கைக்கு ஈடுபடுத்தி, பின்னர், போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக, இளைஞன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய கடந்த 13ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

களவாடப்பட்டதாக கூறப்படுகின்ற பொருட்கள் மங்கள சமரவீரவினால், குறித்த இளைஞனுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, குறித்த இளைஞனின் மனைவியது சத்திய கடதாசியை, ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தியுள்ளார்.

இதன்படி, இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், எதிர்வரும் வாரத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.(nf)

 

 

Web Design by Srilanka Muslims Web Team