மண்டேலா இறுதிச் சடங்குகள் வரும் 15-ம் திகதி - Sri Lanka Muslim

மண்டேலா இறுதிச் சடங்குகள் வரும் 15-ம் திகதி

Contributors

தென்னாப்ரிக்காவிலும்,உலகெங்கும் பல கோடிக்கணக்கானோர், நெல்சன் மண்டேலாவின் மறைவு செய்தி கேட்டு, துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

ஜோஹனிஸ்பர்கில் அவரது இல்லத்துக்கு வெளியே ஏராளமான மக்கள் மெழுகுவர்த்திகளையும், மலர்களையும் வைத்துப் பிரார்த்தனைகளை இரவு முழுவதும் நடத்தினர்.

அவரது வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் வேறு பலர், நிறவெறிக்கெதிரான போராட்டத்திலிருந்து பாடல்களைப் பாடி, நடனமாடினர். சிலர் தங்கள் சிறு குழந்தைகளுடன் வந்திருந்ததைக் காண முடிந்தது.

தென்னாப்ரிக்காவில் எல்லாக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கின்றன.

எதிர்வரும் 15-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அரச மரியாதையுடன் மண்டேலாவின் இறுதிச் சடங்கு நடக்கவுள்ளதாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா அறிவித்துள்ளார். 10 நாட்களுக்கு கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும்.

துக்க அனுஷ்டிப்புக் காலம் தென்னாப்ரிக்காவில் துவங்கிய நிலையில், தென்னாப்ரிக்காவின் அனைத்துப் பொது, அரசு கட்டிடங்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தென்னாப்ரிக்கத் தூதரகங்கள் அனைத்திலும், அஞ்சலிக் குறிப்புகளை மக்களும் பிரமுகர்களும் எழுத உதவும் வகையில், அஞ்சலிப் புத்தகங்கள் வைக்கப்படுகின்றன.

ஜோஹனஸ்பர்கின் புறநகர்ப்பகுதியில் உள்ள எப்.என்.பி அரங்கத்தில், தேசிய துக்கப் பிரார்த்தனை நிகழ்வு ஒன்று நடத்தப்படவிருக்கிறது.

அதன் பின்னர், பிரிட்டோரியாவில் மூன்று நாட்கள் நெல்சன் மண்டேலாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.

நெல்சன் மண்டேலாவின் உடல் கிழக்கு கேப் பகுதியில் அவர் வளர்ந்த குனு கிராமத்தில் அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படும்.

Web Design by Srilanka Muslims Web Team