மதுரையில் பட்டப்பகலில் வங்கிக்குள் நுழைந்த சிங்க முகமூடித் திருடன்! - 10 இலட்சம் ரூபாவை அபகரித்துச் சென்றதால் பரபரப்பு. - Sri Lanka Muslim

மதுரையில் பட்டப்பகலில் வங்கிக்குள் நுழைந்த சிங்க முகமூடித் திருடன்! – 10 இலட்சம் ரூபாவை அபகரித்துச் சென்றதால் பரபரப்பு.

Contributors

மதுரையில் வங்கிக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையன் கத்திமுனையில் பெண் ஊழியரை பிணைக் கைதியாக்கி ஊழியர்களை மிரட்டி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து டூவீலரில் தப்பினான். இந்த துணிகர சம்பவம் மதுரையில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மகாத்மா காந்திநகர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாடி கட்டிடத்தில் கார்ப்பரேஷன் வங்கி இயங்கி வருகிறது. கீழ்தளத்தில் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இங்கு நேற்று மாலை 4 மணிவரை வழக்கமான வாடிக்கையாளர் சேவை நடந்தது.

பின்னர் மேலாளர் சதீஷ்குமார், உதவி மேலாளர் திருநாவுக்கரசு, பெண் கேஷியர் பானுமதி, உதவியாளர் ராமன் உள்பட 6 பேர் மட்டும் வங்கியில் இருந்தனர். வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செலுத்திய பணத்தை ஊழியர்கள் எண்ணி கட்டுகள் போட்டுக் கொண்டிருந்தனர். நேற்றைய வசூல் பணம் 10.60 லட்சத்திற்கும் அதிகமிருந்தது. இந்த பணத்தைக் கட்டி லாக்கரில் வைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். மாலை 5.30 மணியளவில் வங்கி கிரில் கதவை மூட பானுமதி முயன்றார். அப்போது வாசல் அருகில் தயாராக நின்றிருந்த வாலிபர் ஒருவர் முகமூடி அணிந்த நிலையில் கத்தியுடன் ஊழியர் பானுமதியின் கையைப் பிடித்து தள்ளியபடி உள்ளே நுழைந்தான்.

அதிர்ச்சியடைந்த பானுமதி மற்றும் ஊழியர்கள் சத்தம் போட முயன்றனர். அப்போது கொள்ளையன் பானுமதி கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியபடி, எனக்கு பணம் வேண்டும். பணம் எங்கே இருக்கிறது. எல்லோருடைய செல்போனையும் ஆப் பண்ணுங்க. யாராவது போனை எடுத்தீங்கன்னா கொன்னுடுவேன் என மிரட்டினான். பானுமதியின் கையை இறுக்கிப் பிடித்தபடி வங்கிக்குள் வந்தான். பணம் எங்கே இருக்கிறது எனக் கேட்டான். பணம் இருந்த இடத்தை உதவி மேலாளர் திருநாவுக்கரசு காட்டினார். உடனே அந்த பணத்தை எடுத்து தான் வைத்திருந்த பையில் போடுமாறு மிரட்டினான். உதவியாளர் ராமன் கேஷியர் அறையில் இருந்த பணத்தை எடுத்து கொள்ளையன் பையில் போட்டார். பணப்பையை எடுத்துக் கொண்டு பானுமதியை கத்திமுனையில் மிரட்டியபடியே வங்கியிலிருந்து வெளியேற முயன்றான்.

அப்போது ஊழியர் பானுமதி திடீரென கீழே விழுந்தார். அவரை மீண்டும் கத்தி முனையில் கையைப் பிடித்துக் கொண்டு கொள்ளையன் தூக்கினான். அப்போது பானுமதி கதறி அழுதார். என்னை எதுவும் செஞ்சிடாதே என்று கெஞ்சினார். எனக்கு பணம்தான் முக்கியம் எனக் கூறியபடி கொள்ளையன் வாசல் வரை பானுமதியை பிணைக் கைதியாகப் பிடித்தபடி வந்தான். வாசல் கதவிற்கு வந்ததும் பானுமதியை உள்ளே தள்ளிவிட்டு கதவை பூட்டி விட்டு மின்னல் வேகத்தில் கீழே இறங்கினான். அங்கு ஏற்கனவே தயாராக நிறுத்தி வைத்திருந்த டூவீலரில் ஏறித் தப்பினான். கொள்ளையன் தப்பிச் சென்ற சிறிது நேரத்திற்கு பின்பே ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசாரும் விரைந்து வந்தனர். நகர், புறநகரில் உள்ள அனைத்து போலீஸ் செக்போஸ்ட்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு, வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வங்கியில் கண்காணிப்பு கேமரா, அபாயமணி, பாதுகாவலர் உள்ளிட்ட எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லை. இதை முன்கூட்டியே அறிந்திருந்த கொள்ளையன் நோட்டமிட்டு, திட்டமிட்டே இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. வங்கிக்குள் புகுந்து ஒரு கொள்ளையன் கத்தியை மட்டும் வைத்துக்கொண்டு 6 ஊழியர்களை மிரட்டி 5 நிமிடத்தில் கொள்ளையடித்துவிட்டு சென்றது போலீசாரிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களாக முன்கூட்டியே நோட்டமிட்டு திட்டமிட்டே இந்த கொள்ளையில் அவன் ஈடுபட்டிருக்க வேண்டும். மாலை 5.30 மணிக்குத் தான் பணத்தை லாக்கரில் வைப்பார்கள் என்பதும், நேற்று லாக்கரில் பணம் வைக்க சில நிமிடங்களே உள்ள நிலையில் சரியான நேரத்தில் கொள்ளையன் உள்ளே புகுந்தது என பல்வேறு காரணங்களால் கொள்ளையனுக்கு வங்கி ஊழியர்கள் யாரும் உதவியிருக்கிறார்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி ஊழியர்களின் செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

வங்கியின் உதவி மேலாளர் திருநாவுக்கரசு கூறுகையில், பெண் ஊழியரை பிணைக்கைதியாக பிடித்துக் கொண்டதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எங்களால் கொள்ளையனை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கொள்ளையன் அணிந்திருந்த முகமூடி சிங்கப்பல் வைத்து, பார்த்தாலே பயப்படும் வகையிலும், அடையாளம் கண்டுபிடிக்க முடியாதவாறும் இருந்தது. வங்கியின் வாசலில் வந்துதான் முகமூடி அணிந்து உள்ளே வந்துள்ளான். கொள்ளையடித்துவிட்டு கீழே இறங்கும்போது முகமூடியைக் கழற்றி விட்டு சாவகாசமாகச் சென்றுள்ளான் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team