
“மன்னார் – புத்தளம் பாதையினை திறக்க நடவடிக்கை எடுங்கள்” – பிரதமரிடம் ரிஷாட் எம்.பி எடுத்துரைப்பு..!
ஊடகப்பிரிவு-
மக்களின் தேவை கருதி பாவிக்கப்பட்டு வந்த மன்னார் – புத்தளம் (எலுவன்குளம் ஊடான) வரையிலான பாதையினை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோளினை முன்வைத்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான, உணவுப் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கட்சித் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பினையடுத்து, வெள்ளிக்கிழமை (17) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே, அவர் குறித்த வேண்டுகோளினை முன்வைத்தார்.
வடக்குக்கும், தெற்குக்கும் இடையிலான பொருளாதார ரீதியான தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கிலும், இப்பாதை ஊடாக அத்தியாவசிய தேவைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதனாலும், மக்களின் பாவனைக்கேற்றவாறு இப்பாதையினை புனரமைத்து, மீள திறந்துவிடுமாறு பிரதமரிடம், ரிஷாட் எம்.பி கேட்டுக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.