மன்மோகன் சிங் முடிவு எமக்கு பின்னடைவு அல்ல’: இலங்கை! - Sri Lanka Muslim

மன்மோகன் சிங் முடிவு எமக்கு பின்னடைவு அல்ல’: இலங்கை!

Contributors

‘எங்களுக்குத் தோல்வியில்லை’: ஜி.எல். (படம்: அண்மையில் இலங்கை சென்றிருந்த சல்மான் குர்ஷித், ஜீ.எல். பீரிஸை சந்தித்தபோது)

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாதது தமக்கு தோல்வி இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

உள்நாட்டு அரசியல் காரணங்களினாலேயே கொழும்பில் நடக்கும் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதிருக்க முடிவுசெய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பிபிசியிடம் கூறினார்.

தொடர்புடைய விடயங்கள்

‘மன்மோகன் சிங் வராமல் இருக்க முடிவு செய்திருப்பது எங்களின் மாநாட்டின் வெற்றியைப் பாதிக்காது. அதனை நாங்கள் ஒரு பிரச்சனையாகக் கருதவில்லை’ என்றும் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

‘அவரது முடிவு எங்களுக்கு தோல்வி அல்ல, நாங்கள் அவரை அழைத்தோம், அவர் வந்திருந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம்’ என்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடக்கும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாதிருக்க இந்தியப் பிரதமர் எடுத்துள்ள முடிவு இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவாக கருதப்பட முடியுமா என்று பிபிசியின் கொழும்பு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஜி.எல். பீரிஸ் இந்தப் பதிலைக் கூறினார்.

‘எல்லா காமன்வெல்த் மாநாட்டுக்கும் பிரதமர் போவதில்லை’- குர்ஷித்

இதனிடையே, மன்மோகன் சிங்கின் முடிவுக்கு பல காரணங்கள் இருக்க முடியும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

‘எல்லா காமன்வெல்த் மாநாட்டுக்கும் பிரதமர் போவதில்லை என்பதை மறந்துவிடக்கூடாது’ என்று சல்மான் குர்ஷித் உள்ளூர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் இலங்கை மாநாட்டில் கலந்துகொள்வாரா இல்லையா என்ற கேள்விகள் வலுத்திருந்த நிலையில், தான் கலந்துகொள்வது உறுதி என்று வெளியுறவு அமைச்சர் குர்ஷித் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்தியா காமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணிக்க வேண்டுமென்று தமிழக அரசு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team