மலாலா எழுதிய புத்தகத்தில் சல்மான் ருஷ்டியின் கருத்துகளுக்கு ஆதரவு - Sri Lanka Muslim

மலாலா எழுதிய புத்தகத்தில் சல்மான் ருஷ்டியின் கருத்துகளுக்கு ஆதரவு

Contributors

பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது.

தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் இங்கிலாந்து பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.

பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ள மலாலாவின் பெயர் உலகின் உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை ‘நான் மலாலா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு  ஒப்பந்தம் செய்தது.

இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள ‘நான் மலாலா’ என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது.பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் ரூ.595க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த புத்தகத்தில், மேற்கத்திய சக்திகளின் தூண்டுதலால் முஹம்மது நபியை பற்றி சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம் பெற்றிருப்பதால் ‘நான் மலாலா’ புத்தகத்தை பள்ளி பாடதிட்டம் மற்றும் நூலகங்களில் தடை விதித்துள்ளதாக அனைத்து பாகிஸ்தான் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் மிர்சா காஷிப் அலி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

கோடிக்கணக்கான மாணவிகளுக்கு சுமார் 7 லட்சம் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் பெண் ஆசிரியைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலாலா எழுதிய புத்தகத்தில் சல்மான் ருஷ்டியின் கருத்துகளுக்கு வலுசேர்க்கும் வகையிலான சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

எனவே, பாகிஸ்தானில் இயங்கும் சுமார் 1/2 லட்சம் பள்ளிகளின் பாடதிட்டமாகவோ, கட்டுரை தொடர்பான போட்டிகளிலோ, பள்ளி நூலகங்களிலோ அந்த புத்தகத்தை பயன்படுத்திக் கூடாது என்று நாங்கள் தடை விதித்துள்ளோம்.

பெண்களும் கல்வி கற்று அதிகாரம் பெறுவதை உறுதிபடுத்துவதற்காக நாங்கள் முழு மூச்சுடன் பாடுபட்டு வருகிறோம். அதற்காக, மேற்கத்திய சக்திகளின் தூண்டுதலின்படி எங்கள் மத நம்பிக்கையின் மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ள மலாலாவின் புத்தகத்தை எங்கள் பள்ளிகளில் அனுமதித்து விட முடியாது.Malaimalar

Web Design by Srilanka Muslims Web Team