மஹிந்தவுக்கு ஏற்பட்ட கதியே கோத்தாவுக்கு! ராஜித சேனாரத்ன - Sri Lanka Muslim

மஹிந்தவுக்கு ஏற்பட்ட கதியே கோத்தாவுக்கு! ராஜித சேனாரத்ன

Contributors

(நா.தனுஜா)

2024 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவது என்பது ராஜபக்ஷாக்களுக்கு வெறுமனே பகல் கனவாகவே அமையும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட கதி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுக்கு 2024 ஆம் ஆண்டு ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை கொழும்பு ஹைட்பார்க்கில் மக்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவது என்பது ராஜபக்ஷாக்களுக்கு வெறுமனே பகல் கனவாகவே அமையும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட கதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு 2024ஆம் ஆண்டு ஏற்படும்.

தற்போதைய பலவீனமான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு எவ்வித நலன்களும் கிடைக்கப் பெறவில்லை.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்த நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் தேசத்துரோகிகளாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலைகளை ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினர்களுக்கு மாத்திரம் குறைக்கும் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் தேசப்பற்றாளர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

அதுமாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இவ்வருட இறுதியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கும். எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டின் போது நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் நிலையே தோற்றம் பெறும்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களை ‘நாட்டின் வீரர்கள்” என்று தற்போதைய அரசாங்கம் கூறியது. ஆனால் இப்போது ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினர்களின் வியாபாரங்களுக்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள்.

நாட்டு மக்களுக்கு மாத்திரமன்றி, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் இந்த அரசாங்கம் துரோகமிழைத்துள்ளது. பல்வேறு வழிமுறை ஊடாக அரச நிதி மோசடி செய்யப்படுகிறது.

முஸ்லிம் வியாபாரிகள் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபடும்போது மாத்திரம் அரசாங்கம் பௌத்த தேசிய வாதம் தொடர்பில் பேசுவதில்லை. ஆனால் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும்போது மாத்திரம் அரசாங்கம் அதனை விரும்பவில்லை. அதுமாத்திரமன்றி ஜனாதிபதி இனவாதத்தை முன்னிறுத்தியே அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்கிறார்.

நாட்டு மக்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு, அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ஷாக்கள் தமது அதிகாரத்தைப் பிரயோகித்து முடக்குகிறார்கள். எனினும் நாம் இதற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.

Web Design by Srilanka Muslims Web Team