மஹிந்தவும் கோட்டாபயவும் ரணிலின் படத்திற்கு காலை, மாலை மலர்தூவி வணங்க வேண்டும்! - Sri Lanka Muslim

மஹிந்தவும் கோட்டாபயவும் ரணிலின் படத்திற்கு காலை, மாலை மலர்தூவி வணங்க வேண்டும்!

Contributors

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படத்தை வைத்து காலையும் மாலையும் மலர்தூவி வணங்க வேண்டும் என ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

 

ரணில் விக்ரமசிங்க அன்று ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடாதிருந்தமை அதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றம் புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றுக்கு அழைத்துச் செல்ல முடியும் என அந்த பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் அதில் கைச்சாத்திட ரணில் விக்ரமசிங்க அன்று மறுப்பு தெரிவித்ததாகவும் கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மங்கள சமரவீர தெரிவித்தார்.

பொதுநலவாய மாநாட்டிற்கு 15 பில்லியன் இந்த அரசாங்கம் செலவிட்டாலும் அமைப்பின் உண்மையான தலைவர் பங்குபற்றவில்லை என மங்கள தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத மாநாடு ஒன்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக கூறி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாட்டு மக்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஏமாற்றியுள்ளதாக அவர் கூறினார்.

மாநாட்டில் 31 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றதாக அரசாங்கம் பொய் கூறுவதாகவும் உண்மையில் 27 நாட்டுத் தலைவர்களே கலந்து கொண்டதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

ஆப்பிரிக்க நாடுகளின் ஆதரவைக்கூடப் பெற முடியாத ஜீ.எல்.பீரிஸ் கௌரவமுள்ள பிரஜை எனில் பதவி விலக வேண்டும் என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் 18ம் திருத்தச் சட்டத்தை ஒழிக்கவும் சுயாதீன பொலிஸ், அரசசேவை ஆணைக்குழுக்களை அமைக்க வலியுறுத்தியும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என மங்கள சமரவீர தெரிவித்தார்.

அத தெரண

Web Design by Srilanka Muslims Web Team