மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு இறுதியில் நடத்த நடவடிக்கை: அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு..! - Sri Lanka Muslim

மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு இறுதியில் நடத்த நடவடிக்கை: அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு..!

Contributors
author image

Editorial Team

தேர்தலொன்றை நடத்தக் கூடிய சூழல் நாட்டில் இல்லையெனினும் இவ்வாண்டு இறுதியில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைகளின் பதவி காலத்தை நீடித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்க்கப்பட்ட போது அவர் இதனைக் கூறினார்.

“நாட்டில் தேர்தல்களை நடத்தக் கூடிய சூழல் இல்லை. இவ்வாறான நிலைமைகளை கருத்திற் கொண்டே உள்ளூராட்சி சபைகளின் பதவி காலத்தினை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் இரண்டு வருட காலம் கடந்த ஆட்சியிலேயே கழிந்தது. அப்போது அவர்களால் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது.

அதன் பின்னர் கடந்த இரு ஆண்டுகள் கொவிட் பரவல் தாக்கம் செலுத்தியது. எனவே உள்ளூராட்சி மன்றங்களுக்கான நியாயமான கால அவகாசத்தை வழங்க வேண்டியது அவசியமாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பான சட்டத் திருத்த நடவடிக்கைள் கடந்த அரசாங்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன. எனவே அந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாமல் தேர்தல்களை நடத்த முடியாது.

அரசாங்கம் இது தொடர்பிலும் அவதானம் செலுத்தி இவ்வாண்டுக்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team