
மாலைதீவில் புதிய தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு! – முன்னாள் அதிபருக்கு பின்னடைவு.
மாலைதீவு அதிபர் தேர்தலை அக்டோபர் 20க்குள் மீண்டும் நடத்த வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாலைதீவில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க முதல்கட்ட தேர்தல் கடந்த செப்டம்பர் 7ம் தேதி நடைபெற்றது. அதில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் 45.45 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மாலைதீவு சட்டப்படி 50 சதவீத வாக்குகள் எந்த வேட்பாளரும் பெறாததால் 2ம் கட்டத் தேர்தல் நடைபெறவிருந்தது. இந்நிலையில், அதிபர் தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என ஜுமூரே கட்சித் தலைவர் குவாசிம் இப்ராஹிம், மாலைதீவு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து செப்டம்பர் 28ம் தேதி நடைபெற இருந்த 2ம் கட்ட தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்ராஹிம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிபர் தேர்தலை அக்டோபர் 20க்குள் மீண்டும் நடத்த வேண்டும் எனவும், 2ம் கட்ட அதிபர் தேர்தலுக்கு அவசியம் இருப்பின் நவம்பர் 3ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாலைதீவின் இந்திய தூதரக அதிகாரி முகமது நசீர் கூறுகையில், முன்னதாக நடைபெற்ற அதிபர் தேர்தலில், 5,623 போலி வாக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கருத்தில் கொண்டு அதிபர் தேர்தலை மீண்டும் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.