
மியன்மாருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை அரசாங்கம் உடனடியாக மீளப் பெற வேண்டும் – சர்வதேச தொடர்பு பற்றிய தெளிவின்மையால்தான் இது போன்ற பாரிய தவறுகள் இடம்பெறுகிறது : சஜித் பிரேமதாச
எம்.மனோசித்ரா
இலங்கையில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டுக்கு மியன்மாருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை அரசாங்கம் உடனடியாக மீளப் பெற வேண்டும். அத்தோடு இலங்கை ஜனநாயக ரீதியான நாடு என்ற வகையில் மியன்மார் இராணுவ மயமாக்கலை எதிர்ப்பதாகவும் பகிரங்க நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
அவ்வாறில்லை எனில், ஜனநாயக ரீதியில் வெற்றி பெற்றுள்ள ஆங் சான் சூகி மற்றும் அவரது தரப்பினரை நிராகரித்து, இராணுவமயமாக்கலை இலங்கை ஏற்றுக் கொண்டதைப் போன்றாகி விடும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மியன்மாரில் ஜனநாயக ரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்திடமிருந்து பலவந்தமாக அதிகாரத்தை பறித்து சர்வாதிகார இராணுவ ஆட்சி முன்னெடுக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், சர்வதேச தொடர்புகள் பற்றி சிறிதளவும் புரிதல் அற்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மியன்மாரின் இராணுவ ஆட்சியின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு இலங்கை அரசாங்கம் கடிதம் அனுப்பி வைத்துள்ளமையானது அந்நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற இராணுவ ஆட்சியை ஏற்றுக் கொண்டதைப் போன்றுள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு சிறிதளவும் சர்வதேசத்தைப் பற்றிய தெளிவின்மையால்தான் இது போன்ற பாரியதொறு தவறு இடம்பெற்றிருக்கிறது.
மியன்மாரில் ஏற்பட்டுள்ள இராணுவ மயமாக்கலுக்கு எதிராக இலங்கை பகிரங்கமான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டியதே சரியான செயற்பாடாகும். ஜனநாயக ரீதியில் தேர்தல் மூலம் மீண்டும் வெற்றி பெற்ற ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சி முன்னெடுக்கப்படுவதற்கு ஆதரவளிக்கும் வகையில் குறைந்தது ஒரு நிலைப்பாட்டையேனும் அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதற்கு பதிலாக, மியன்மாரில் இடம்பெறுகின்ற இராணுவமயமாக்கலை தற்போதைய இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதன் காரணமாகவா அமைச்சர் தினேஷ் குணவர்தன அந்நாட்டு இராணுவ பிரதிநிதிக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் ? எவ்வாறிருப்பினும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டுக்கு மியன்மாருக்கு அழைப்பு விடுப்பதற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.
இதனை சிறு பிள்ளைத்தனமான ஒரு செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். எனவே விடுக்கப்பட்ட அழைப்பினை துரிதமாக மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
அத்தோடு மியன்மாரில் இடம்பெறுகின்ற இராணுவமயாக்கல் செயற்பாடுகளை ஜனநாயக நாடு என்ற ரீதியில் இலங்கை எதிர்ப்பதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோருகின்றோம். அவ்வாறு செய்யவில்லை எனில், தற்போதைய இலங்கை அரசாங்கமும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனநாயக ரீதியில் வெற்றி பெற்றுள்ள ஆங் சான் சூகி தரப்பினரை நிராகரித்து, இராணுவ மயமாக்கலை ஆதரிப்பதைப் போன்றாகிவிடும் என்றார்.