மியான்மாரில் ஆயுதமுனையில் ஆல் சால் சூகிக்கு ஆபத்து;இலங்கையில் ஆணைக்குழு முனையில் சம்பந்தன், றஊப் ஹக்கீம், சுமேந்திரன், அனுரகுமார திசாநாயகவுக்கு ஆபத்து.. - Sri Lanka Muslim

மியான்மாரில் ஆயுதமுனையில் ஆல் சால் சூகிக்கு ஆபத்து;
இலங்கையில் ஆணைக்குழு முனையில் சம்பந்தன், றஊப் ஹக்கீம், சுமேந்திரன், அனுரகுமார திசாநாயகவுக்கு ஆபத்து..

Contributors

மியான்மாரில் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்பட்டு – சதி மூலம் அதிகாரத்தைக் கையிலெடுத்துள்ளது அந்நாட்டு இராணுவம். ஜனநாயக பண்பியல்புகளும் இராணுவமும் எப்போதும் முரண்பாடானவைதான். ஆகவே அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஆனால், இலங்கையிலும் இதுபோன்று ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படும் ஒரு நகர்வு – யாரும் பெரியளவில் கவனிக்காத வகையில் அரங்கேறிக்கொண்டிருப்பதை கவனிக்கலாம். அதாவது, இன்றைய ஆட்சியாளர்களுக்கு தலைவலியாக இருக்கும் – சம்பந்தன், றஊப் ஹக்கீம், சுமேந்திரன், அனுரகுமார திசாநாயக போன்றோரின் குரல்வளையை நசுக்கும் பாரிய சதி அரங்கேற்றப்படுவதைக் காணலாம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 நவம்பர் வரும் வரைக்குமான காலப்பகுதியில் நடந்த – அரசியல் பழிவாங்கல்களை ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு – ரணில், சம்பந்தன், றஊப் ஹக்கீம், சுமேந்திரன், அனுரகுமார திசாநாயகமங்கள சமரவீர, ஜே.சி. வெலியமுன போன்றோர் – யாப்பு மீறல் தொடக்கம் மேலும் பல சட்ட மீறல்களை செய்துள்ளனர் என்ற அடிப்படையில் – அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளது.

அதன் அடிப்படையில் அவர்களின் பரிந்துரை மீது எவ்வாறான நடவடுக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து பரிந்துரை செய்ய – மற்றுமொரு ஆணைக்குழு;
1. இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிமொழிகளை மீறுவதன் ஊடாக, அரசியலமைப்பின் விதிகளை மீறுதல்
2. அதிகார துஸ்பிரயோகம், குறுக்கீடு, மோசடி, ஊழல், நம்பிக்கையை மீறுதல்,
3. ஒருவர் மீது அரசியல் ரீதியாகப் பழிவாங்கல்
4. எந்தவொரு நியமனம்,இடமாற்றம்,பதவி உயர்வு, பணி நீக்கம் அல்லது ஏதாவது முறைகேடு, எழுதப்பட்ட சட்டத்தை மீறுதல் என்பவை இடம்பெற்றிருப்பின், பிரதிவாதிகள் இந்த விடயங்களுக்கு எத்தகைய பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்பது குறித்து, மேலதிக விசாரணை செய்து, அறிக்கையிடுதல் ஆணைக்குழுவுக்கு பகிரப்பட்டுள்ளது.
5. இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 8ஆவது உறுப்புரையின் ஏற்பாடுகளின் படி, அந்த அறிக்கைக்கமைய, நபரொருவரின் குடியியல் உரிமையை இல்லாமல் செய்வதற்கும் பரிந்துரைகளை முன்வைக்கமுடியும் போன்ற அதிகாரங்களை உள்ளடக்கியுள்ளது.

இதில் கூறப்பட்டுள்ளவர்களில், தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதும் – அரசின் தவறுகளையும், முறைகேடுகளையும் துணிவோடு எதிர்கொள்வதோடு அவை பற்றிய காத்திரமான விமர்சனங்களை நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் வைப்பவர்கள் – சம்பந்தன், றஊப் ஹக்கீம், சுமேந்திரன், அனுரகுமார திசாநாயக போன்றோரே.

அண்மைக்காலமாக அரசாங்கம் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கும் – ஜனாஸா எரிப்பு எதிர்ப்பு – ஜனாஸா எரிப்பிற்கு எதிரான முஸ்லிம் நாடுகளின் கவனம் – யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுதூபி உடைப்பு – சிவன் சிலை உடைப்பும் விதுரவிக்ரம ரத்னவின் பிரசன்னத்துடனான புத்தர் சிலை நிர்மானமும் – காணமல் போனவர்களின் குடும்பங்கள் மீதான மிரட்டல் – இராணுவத்தினரின் விவசாய பிரிவினால் தமிழர் நிலங்களில் பயிரிடுதல் – ஐ.நா மனித உரிமை ஆணைய அங்கத்துவ நாடுகளுக்கான கடிதம் – கொழும்பு துறைமுக கிழக்கு இறங்கு துறை விற்றல் எதிர்ப்பு என – அரசிற்கு பெரும் தலையிடி கொடுப்பது சம்பந்தன், றஊப் ஹக்கீம், சுமேந்திரன், அனுரகுமார திசாநாயக போன்றோர்தான்.

அதனால், அவர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு – ஏதாவது ஏற்பாடுகளை அவசரமாகச் செய்ய வேண்டிய தேவை அரசிற்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஒன்றும் முடியாமல் போனால் – அவர்களின் குடியியல் உரிமையை பறித்தாவது – அவர்களை மொத்தமாக முடக்குவது என்ற கட்டத்திற்கு வந்துள்ளனர். அதற்கான அடித்தளம் மேற்கூறப்பட்ட ஆணைக்குழு மூலம் இடப்பட்டுள்ளது.

சம்பந்தன், றஊப் ஹக்கீம், சுமேந்திரன், அனுரகுமார திசாநாயக போன்றோரை முடக்கி – ஒன்றில் தாங்கள் இலகுவாக கையாளக்கூடியவர்களை இவர்களின் கட்சிகளுக்கு தலைவர்களாக்குவது அல்லது முதிர்ச்சியற்றவர்களை தலைவர்களாக்குவதன் மூலம் கட்சிகளில் அதிகாரப்போட்டியை உண்டாக்கி கவனத்தை திசை திருப்புவதன் மூலம் – தமது ஆட்சியை நிம்மதியாக செய்வதை பற்றி அரசாங்கம் திட்டமிடுகின்றது.

சுருக்கமாகக் கூறினால், மியான்மாரில் ஆயுதமுனையில் சதி நடக்கிறது. இலங்கையில் ஆணைக்குழு முனையில் சதி நடக்கிறது. ஆனால், இரண்டும் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குவதுதான்.

Web Design by Srilanka Muslims Web Team