மீள முடியாத சோகத்தில் பிலிப்பைன்ஸ் - Sri Lanka Muslim
Contributors

12s4

பிலிப்பைன்ஸ் நாட்டில் மத்திய பகுதியில் உள்ள சமர், லிஸ்தே தீவுகளை ‘ஹையான்’ புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 313 முதல் 378 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கடலில் 20 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன.

பலத்த மழையும் கொட்டியது. இவை அனைத்தும் சேர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் கோரத்தாண்டவமாடி துவம்சம் செய்தது. புயல் கரையை கடந்து சென்ற வழியில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக அழிந்துவிட்டன.

புயல் தாக்குதலில் லிஸ்தே மாகாண தலைநகர் தக்லோபான் நகரம் பலத்த சேதத்துக்குள்ளாகி தரை மட்டமாகி விட்டது. சூறாவளி காற்றில் வீடுகள் அனைத்தும் நொறுங்கின. ஒரு சில கட்டிடங்களே உள்ளன.

ஹையான் புயல் தாக்குதலுக்கு 10 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். அவர்களின் பிணங்கள் தெருக்களிலும், ரோட்டோரங்களிலும் சிதறி கிடக்கின்றன. கடல் அலை ஊருக்குள் புகுந்ததாலும், மழை வெள்ளம் பெருக்கெடுத்ததாலும் அதில் சிக்கி பலர் இறந்தனர். அவர்களின் உடல்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பிணங்களை ரோட்டோரங்களில் அடுக்கி வைத்துள்ளனர். சில இடங்களுக்கு மீட்பு படையினர் செல்ல முடியாததால் பிணங்கள் அப்புறப்படுத்த முடியாமல் அழுகி துர்நாற்றம் வீசுகின்றது.

புயல் தாக்குதலில் பிலிப்பைன்ஸ்சின் 36 மாகாணங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. சுமார் 50 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். உறவினர்களையும் இழந்துள்ளனர்.

இவர்களை தேடி தெருக்களில் அலைந்து திரிகின்றனர். எங்கு பார்த்தாலும் அழுகுரலும், சோகமும் எதிரொலிக்கிறது. இது ஒரு புறம் இருக்க உயிர் பிழைத்தோர் சாப்பிட உணவும், குடிக்க தண்ணீரும் இன்றி பரிதவிக்கின்றனர். அவற்றை பெற தக்லோன் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ள முகாமில் நீண்ட கியூ வரிசையில் காத்து நிற்கின்றனர்.12s6பலர் உணவு பொருட்கள் கிடைக்காதா என அல்லாடுகின்றனர். கடைகள் மற்றும் ஓட்டல்களை உடைத்து அவற்றை கொள்ளையடித்து வருகின்றனர். உணவு கட்டுப்பாடு நிலை தொடர்ந்து நீடித்தால் பசியில் மேலும் பலர் மடியும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே மீட்பு பணிக்கு உதவ அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் முன் வந்துள்ளன. ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்களை அனுப்ப அமெரிக்கா முன் வந்துள்ளது. இதுகுறித்து அதிபர் ஒபாமா விடுத்துள்ள அறிக்கையில் புயல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு உதவ ஐரோப்பிய யூனியனும் முன் வந்துள்ளது. இந்த தகவலை அதன் மனிதாபிமான உதவி கமிஷனர் கிறிஸ்மாலினா ஜியர் ஜிவா தெரிவித்துள்ளார்.

புகைப்படம் – (AFP)

Web Design by Srilanka Muslims Web Team