மீழ் குடியேற்றம் தொடர்பில் விக்னேஸ்வரனுக்கு மறதி - ஜாதிக ஹெல உறுமய - Sri Lanka Muslim

மீழ் குடியேற்றம் தொடர்பில் விக்னேஸ்வரனுக்கு மறதி – ஜாதிக ஹெல உறுமய

Contributors

முஸ்லிம் மக்களை வடக்கில் மீள்குடியேற்ற ஆணைக்குழுவை நியமித்துள்ள விக்னேஸ்வரனுக்கு சிங்கள மக்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்பது மறந்து விட்டதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அந்த கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ரன்பத்வில விமலரட்ன தேரர் தெரிவிக்கையில்,

அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கும் சந்தர்ப்பத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தற்பொழுதுள்ள அதிகாரங்களுடன் மாகாண சபைகள் இயங்கினால் தனி நாடு உருவாகும் ஆபத்துள்ளது.

போர் வெற்றிக்கு பிறகு வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் தமிழர்களும், முஸ்லிம்களும் மட்டுமே மீள்குடியேற்றப்பட்டனர். வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை மீள்குடியேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தோம். எந்த பதிலும் கிடைக்கவில்லை.

போருக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 21 ஆயிரம் சிங்களவர்கள் வாழ்ந்தனர். அவர்களிடம் காணி உறுதிகள் இருந்தன. எவ்வாறாயினும் அண்மைய காலத்தில் இடம்பெயர்ந்த சிங்கள குடும்பங்களில் 150 குடும்பங்கள் சுயவிருப்பின் பேரில் நாவற்குழியில் குடியேறினர். இவர்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்கவில்லை. இதனால் 150 குடும்பங்களில் தற்பொழுது 10 குடும்பங்களே அங்கு உள்ளன.

வடக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்த குடும்பங்களை அச்சுறுத்துகின்றனர். நாவற்குழியில் உள்ள புத்தர் சிலை மீது குண்டு வீசி அழிக்கப்பட்டது. அங்கு வாழும் சிங்கள குடும்பங்களுக்கு தமிழ் அதிகாரிகள் உதவதில்லை. அதேவேளை காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கி விட்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு நாங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். அதற்கு செவி கொடுக்கவில்லை என்றார்.

 

Web Design by Srilanka Muslims Web Team