முடிந்தால் சஜித் பிரேமதாசவை சிறையில் அடையுங்கள்… » Sri Lanka Muslim

முடிந்தால் சஜித் பிரேமதாசவை சிறையில் அடையுங்கள்…

Contributors
author image

Editorial Team

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில் தனது அமைச்சின் நிதியில் ஒரு பில்லியன் ரூபா கொள்ளையடித்துள்ளார் என ஆளும் கட்சியின் ஒரு சிலர் கூறினார். இன்று இருப்பது ராஜபக்ஷவினரின் சுயாதீன நீதிமன்றமே. முடிந்தால் சஜித் பிரேமதாசவை கைது செய்து சிறையில் அடையுங்கள். அவர் மீதான குற்றத்தை நிருபித்துக்காட்டுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக சபையில் தெரிவித்தார்.

இதன்படி பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்றத்தில் ஒரு நாளுக்காக மாத்திரம் 80 இலட்சம் ரூபா செலவாகின்றது, மக்களின் பணத்தில் நடத்தும் பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்கள் மக்களின் நலன் சார்ந்து பேசவில்லை, தமது தனிப்பட்ட விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தே வருகின்றனர்.

மேலும் ,இந்த நாட்டில் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையில் இருந்த நிறைவேற்று ஜனாதிபதிகள் அனைவருமே எதிர்பக்கத்தில் இருந்தவர்கள். அவர்களே இந்த நாட்டினை 14.5 ட்ரில்லியன் கடன் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர்.

இதனால் நாம்” பெயில் ” எனக் கூறுகின்றனர். சில விடயங்களில் நாமும் ” பெயில் ” தான். எமது ஆட்சியில் நாம் கள்ளர்களை தண்டிக்கவில்லை, எனவே நாமும் பலவீனப்பட்டு விட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, இந்த நாட்டில் கள்ளர்களை ஆட்சிக்கு கொண்டுவந்த மக்களும் ” பெயில் ” என்றே நான் கூறுவேன்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில் தனது அமைச்சின் நிதியில் ஒரு பில்லியன் ரூபா கொள்ளையடித்துள்ளார் என ஆளும் கட்சியின் ஒரு சிலர் கூறினர். இன்று இருப்பது ராஜபக்ஷாவினரின் சுயாதீன நீதிமன்றமே. முடிந்தால் சஜித் பிரேமதாசவை கைது செய்து சிறையில் அடையுங்கள். அவர் மீதான குற்றத்தை நிருபித்துக்காட்டுங்கள்.

மேலும் ,அரசாங்கத்திடம் சவால் விடுகிறேன். முடிந்தால் எம்மீது குற்றம் உள்ளதென நிருபித்து சிறையில் அடைத்துக்காட்டுங்கள். நிறைவேற்று ஜனாதிபதியும், நிறைவேற்று பிரதமரும் உள்ள ஆட்சியில் எமக்கு எதிராக முடிந்தால் குற்றங்களை நிருபித்துக்காட்டுங்கள். நாம் உண்மைகளை பேசுகின்றோம், எனவே நாம் எவருக்கும் அஞ்ச தேவையில்லை என்றார்.

Web Design by The Design Lanka