முயற்சித்தால் எந்த உயரத்தையும் தொடலாம் என்பதற்கு ஏழ்மையின் விதையில் பிறந்தே நானே உதாரணமாக உள்ளேன் : தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்..! - Sri Lanka Muslim

முயற்சித்தால் எந்த உயரத்தையும் தொடலாம் என்பதற்கு ஏழ்மையின் விதையில் பிறந்தே நானே உதாரணமாக உள்ளேன் : தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்..!

Contributors
author image

நூருள் ஹுதா உமர்

நூருல் ஹுதா உமர்

எங்களின் வீட்டுக்கு அருகில் மு.கா வின் தற்போதைய தவிசாளர் முழக்கம் மஜீட் அவர்களின் வீடுள்ளது. அந்த வீட்டுக்கு மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஸ்ரப் அடிக்கடி வருவார். நாங்கள் காற்சட்டைகளை போட்டு கொண்டு தெருவில் விளையாடிக்கொண்டிருந்த போது அப்படி ஒருநாள் வந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஸ்ரப் என்னிடம் ஆங்கில நாளிதழை தந்து வாசிக்க கூறினார். நான் பிழையாக வாசித்ததும் என்னை ஆங்கில வகுப்புக்கு சேருமாறு கூறி பிரபல ஆங்கில ஆசிரியர் வை.எல்.எஸ். ஹமீட்டிடம் சேர்த்துவிட்டார். அப்போது ஆங்கிலத்தை வெள்ளையனின் மொழியென எல்லோரும் புறக்கணித்த சூழ்நிலையிலும் எனக்கு ஆங்கிலம் மீது விருப்பம் இருந்தது. இருந்தாலும் குடும்ப நிலை காரணமாக அந்த வகுப்பை என்னால் தொடர முடியவில்லை. கடுமையாக முயற்சிகள் செய்து பின்நாட்களில் ஆங்கிலத்தை கற்றுக்கொண்டேன். ஏழ்மையின் விதையில் பிறந்த நான் இவ்வளவு தூரம் உயரக்காரணம் விடாமுயற்சியும், அர்ப்பணிப்புமே தவிர வேறில்லை. கல்விக்கு ஏழ்மை தடையல்ல. முயற்சித்தால் எந்த உயரத்தையும் தொடலாம் என இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் அமைந்துள்ள  ஜனாதிபதி விளையாட்டரங்கில் வரலாற்றில் ஓர் ஏடு புகழ் மௌலவி ஏ.சி.ஏ. எம். புஹாரி தலைமையில் தென்கிழக்கு பல்கலையின் புதிய உபவேந்தராக தெரிவானமையை பாராட்டி  சம்மாந்துறை மண்ணும் மக்களும் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை மருத்துவ கல்வித்துறைகளை ஆரம்பிக்க கேட்கிறார்கள். ஆனால் முன்னாள் இந்திய முதல்குடிமகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறிய பொன்மொழியை போன்று எனது இலக்கை மருத்துவ பீடத்தை நோக்கி நிர்ணயித்துள்ளேன். அதுமாத்திரமின்றி விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத் துறையை அதிகமாக கொண்ட பிரதேசமாக காணப்படும் இந்த பிரதேசத்தில் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத் துறை தொடர்பிலான கற்கைநெறிகளை உருவாக்கி அந்த துறைகளையும் மேம்படுத்த திட்டமிட்டு அதற்கான திட்ட வரைபுகளையும் நானே முன்னின்று செய்துவருகிறேன்.

பல்கலைக்கழக சூழலையும், சமூகத்தையும் ஒன்றித்து கொண்டுசெல்ல எதிர்காலத்தில் பல்வேறு திட்டமிடல்களை செய்ய உள்ளேன். வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள் போன்ற பலரும் பல்கலைக்கழகமூடாக நிறைய அறிவை வளர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க எண்ணியுள்ளேன். இனவாதம், பிரதேசவாதம் இல்லாத ஒருவனாக நான் எப்போதும் இருந்துள்ளேன். முரண்பாடுகள் இல்லாத பல்கலைக்கழக சூழலை உருவாக்கி மேலும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்வேன். அதற்கு சகலருடைய ஒத்துழைப்பையும் எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team