முஸ்லிம்களின் இரண்டு லட்சம் கையொப்பங்கள் குப்பைத்தொட்டிக்குள் போடப்பட்டனவா: முபாறக் - Sri Lanka Muslim

முஸ்லிம்களின் இரண்டு லட்சம் கையொப்பங்கள் குப்பைத்தொட்டிக்குள் போடப்பட்டனவா: முபாறக்

Contributors

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை தடைசெய்யும்படி ஜனாதிபதி செயலாளரிடம் வழங்கப்பட்ட முஸ்லிம்களின் இரண்டு லட்சம் கையொப்பங்கள் குப்பைத்தொட்டிக்குள் போடப்பட்டனவா என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி கேள்வி எழுப்பியுள்ளார்.

தாருள் குர்ஆனில் நடைபெற்ற கட்சியின் உயர் சபை கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கேள்வியெழுப்பியுள்ளார். அவர் தொடர்ந்து கூறியதாவது,
புதிய முஸ்லிம் இயக்கம் ஒன்று  பள்ளிவாயல்கள் முன்பாக சேகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் சுமார் இரண்டு லட்சம் கையொப்பங்கள் அடங்கிய பத்திரங்களை ஜனாதிபதி செயலரிடம் ஒப்படைத்து முஸ்லிம்களுக்கெதிரான இனவாத நடவடிக்கைகளை அரசு தடைசெய்ய வேண்டும் என கூறி மகஜர் ஒன்றையும் பல வாரங்களுக்கு முன் கையளித்திருந்தனர்.
மேற்படி முஸ்லிம் அமைப்பில் உள்ளவர்கள் பெரும்பாலும் அரசுக்கு ஆதரவான பல இயக்கத்தை சேர்ந்தவர்களாக  இருந்ததையும் காணக்கிடைத்தது. தங்களது சொந்த அமைப்புக்களால் இனி எதையும் இது விடயத்தில் செய்ய முடியாது என்பதாலேயே  புதிதாக அமைப்பொன்றை உருவாக்கி அதன் மூலம் ஜனாதிபதி செயலாளரை சந்தித்து இவர்கள் இதனை ஒப்படைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது.
   ஆக இன்னுமின்னும் முஸ்லிம்கள் மத்தியில் அதுவும் குறிப்பிட்ட ஒரு சிலரை மாத்திரம் நிர்வாகிகளாகக்கொண்ட பல பொது அமைப்புக்கள்தான் கொழும்பில் பல பெயர்களில் உருவாகின்றனவே தவிர முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை இவர்களால்; தீர்க்க முடியவில்லை என்பது தெளிவாகிறது.
ஆகக்குறைந்தது இரண்டு லட்சம் முஸ்லிம்களின் ஒப்பந்தங்களுடன் ஜனாதிபதியைக்கூட நேரடியாக சந்தித்து இதனை வழங்க முடியாத அளவுதான் இன்றைய முஸ்லிம் இயக்கங்களின் நிலை உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுவே முஸ்லிம்களின் ஓர் அரசியல் கட்சி இரண்டு லட்சம் கையொப்பங்களுடன் சென்றிருந்தால் நிச்சயம் ஜனாதிபதியின் நேரடி கவனத்தை ஈர்த்திருக்கும் என்ற யதார்த்தத்தைக்கூட இன்னமும் முஸ்லிம் சமூகமும் அதன் புத்திஜீவிகளும் புரிந்து கொள்ளாமல் உள்ளார்கள். அத்தகைய சாதுர்யம் பாராளுமன்றத்தில் இருக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் இல்லை என்பதையும் நாம் எற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதற்கு காரணம் இந்தக்கட்சிகள் முஸ்லிம்களின் வாக்குகளைத்தான் சிந்திக்கின்றனவே தவிர சமூகம் பற்றி சிந்திப்பதில்லை.
       இந்த நாட்டு முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சாரங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தாமல் அலட்சியமாக இருப்பதற்கான காரணம் முஸ்லிம்களும் முஸ்லிம் கட்சிகளும், பொது அமைப்புக்களும் அரசுக்கு ஜால்ரா அடிப்பபவர்களாக இருப்பதும், இலங்கை முஸ்லிம்களை ஜனநாயக இஸ்லாமிய அரசியல் மயப்படுத்தாததுமேயாகும்.
இவ்வாறான அமைப்புக்கள் அரசுக்கு ஆதரவான அமைப்புக்கள் என்பதால்; மேற்படி இரண்டு லட்சம் கையெழுத்துக்கள் எத்தகைய தாக்கத்தையும் அரசில் ஏற்படுத்தவில்லை  என்பதைத்தான் நாம் காண்கிறோம். இரண்டு லட்சம் கையெழுத்துக்களை வழங்கியும் அரசு முஸ்லிம்களை கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஜனநாயகமயப்படுத்தும் ஆன்மீக மற்றும் அரசியல் அறிவுள்ள உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சியை பலப்படுத்துவதன் மூலமே நமது பிரச்சினைகளை அரசாங்கம் கவனிக்க வழிவகுக்க முடியும் என்றார்.(v)

Web Design by Srilanka Muslims Web Team