முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை பயங்கரவாத பட்டியலில் சேர்த்தமை தவறு! - Sri Lanka Muslim

முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை பயங்கரவாத பட்டியலில் சேர்த்தமை தவறு!

Contributors

‘2009இல் யுத்தம் முடிவடைந்ததாலும், மீண்டும் போரிடுவதற்கான தேவை இல்லாததாலும் நீண்ட காலமாக நிலவிய இனங்களுக்கிடையிலான மோதல் தீர்த்து வைக்கப்பட வேண்டும்’ என அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில்வாண்மையாளர்களின் வருடாந்த மாநாட்டில் தெரிவித்த கருத்தை வரவேற்கின்ற அதேவேளை, தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் சிறுபான்மையினரின் சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை அடைவதற்கு தற்போது அவசரத் தேவையாக இருப்பது, அனைத்து இனங்களின் ஒற்றுமையும் சகல நாடுகளது பொருளாதார ஒத்துழைப்பும் ஆகும். வெளிவிவகார அமைச்சு அதன் பொறுப்பு வாய்ந்த (competent authority) அதிகாரி ஊடாக வெளியிட்ட 2022ஓகஸ்ட் 1ஆம் திகதி பட்டியலிடலில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் 1999இன் 1267ஆவது பிரேரணை மற்றும் 2015இன் 2253பிரேரணை உள்ளிட்ட பிரேரணைகள் அடங்கலாக அதன் பின்னர் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட 8பிரேரணைகள் என்பன தவறாக பயன்படுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதததாகும்.

பாதுகாப்பு கவுன்சிலின் பிரேரணைகளது தெளிவான நோக்கம், முன்னைய தலிபான் மற்றும் அதன் பின்னரான அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எல். போன்ற பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுவதனைக் கட்டுப்படுத்துவதாகும்.

அந்த வகையில் எந்தவொரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கும் நிதி உதவி அளித்ததாகவோ ஒத்துழைப்பு நல்கியதாகவோ எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் இலங்கையின் 6அமைப்புக்களையும் 156நபர்களையும் எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்?

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன 2019.04.21ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில், இலங்கையின் ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலின் குண்டுதாரிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எல், அல்கொய்தாவுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று சாட்சிமளித்திருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும்.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் இவ்வாறான தொடர்பு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் இதற்கு முன்பு தெரிவித்த குற்றச்சாட்டுகளை இலங்கை பாதுகாப்பு அமைச்சு பல சந்தர்ப்பங்களில் மறுத்திருந்தது.

41ஆவது பிரிவின்படி ஐ.நாவின் மிகவும் தெளிவான நோக்கமாவது, நாடுகளுக்கு இடையிலான யுத்தம், மோதல்களை தவிர்ப்பதற்கேயன்று ஐ.எஸ்.ஐ.எல் அல்லது அல்கொய்தாவுடன் சம்பந்தப்படாத நபர்களுக்கும் அமைப்புக்களுக்கும் இடையூறு விளைவிப்பதோ அவமானப்படுத்துவதோ அச்சுறுத்துவதோ அல்ல என்பதும் தெளிவு.

இதற்கு மேலாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகளின் சில உறுப்புரிமைகள் சர்வதேச சட்டங்கள், இலங்கையின் அரசிலமைப்பு உறுப்புரைகள் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் 2015இன் 2253பிரேரணைகளுடன் முரண்படுவதாக உள்ளன.

அதனால் முஸ்லிம் அமைப்புக்கள், தனிநபர்கள் பட்டியலிடப்பட்டுள்ளமையை விரைவாக மீள்பரிசீலனை செய்து செல்லுபடியற்றதாக்காவிடின், ஹேக் சர்வதேச நீதின்றத்திலும் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் கீழும் கொழும்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணக்குழுவிலும் அது பிரச்சினைக்குரியதாக மாற முடியும்.

இவ்வாறு அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team