முஸ்லிம் காங்கிரஸ் மீட்கப்படும்! 'கிழக்கு தேசம்' நிறுவப்படும்! - Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரஸ் மீட்கப்படும்! ‘கிழக்கு தேசம்’ நிறுவப்படும்!

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருலாளரும் ‘கிழக்கின் எழுச்சி’யின் ஸ்தாபருமான அல்ஹாஜ் வபா பாறுக் அவர்களுடனான நேர்காணல்
———————————————————-
முஸ்லிம் காங்கிரஸ் மீட்கப்படும்!
‘கிழக்கு தேசம்’ நிறுவப்படும்!
===========================

கேள்வி: நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் பற்றியும் அதன் முடிவுகள் பற்றியும் உங்கள் அவதானங்கள் எவ்வாறு உள்ளது?

பதில்: நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் வெறுமனே ஊள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தலல்ல. அந்த தேர்தலின் முடிவுகள் தேசிய மட்டத்தில் பாரிய தாக்கம் செலுத்தும் என்பதை புரிந்து கொண்டவர்களாலும் புரியாதவர்களாலும் ஆணை வழங்கப்பட்ட தேர்தலாகும்.

இன்று நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகள் இத்தேர்தலின் முக்கியத்துவத்தை நிரூபிக்கின்றன.
நடாளாவிய ரீதியில் எதிர்பார்த்த முடிவுகளே வெளியாகியும் உள்ளது.
சிங்கள மக்களும், தமிழ் மக்களும் அவர்களின் எதிர்பார்ப்புகளை தெளிவாக வெளிக்காட்டியுள்ளனர்.

சிங்கள மக்களில்  பெரும்பாலானோர் மகிந்த ராஜபக்ஷை மீது என்ன குற்றச்சாட்டுகளை யார் சுமத்தினாலும் அவருக்கே எமது ஆதரவு தொடரும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தமிழ் மக்கள் யுத்தம் நிறைவுற்றதன் பின்னரான பல தேர்தல்களில் வெளிக்காட்டிய விருப்புக்கு சற்று வித்தியாசமான தெரிவை விரும்ப ஆரம்பித்துள்ளனர் என்பதை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

இதுவரை சம்பந்தன் ஐயா,.திரு. சுமந்திரன் போன்றோரின் நெகிழ்வுத்தன்மையை கண்டித்தும், விக்நேஷ்வரன் ஐயா, திரு. கஜேந்திரகுமார் போன்றோரின் தீவிரப்போக்கின் மீதான ஆர்வத்தை வெளிக்காட்டியும் உள்ளனர்.
இவ்விரண்டு சமூகங்களினதும் நிலைப்பாடுகளின் விழைவுகளில் ஒரு கட்டத்தை இப்போது நாம் மத்தியில் கண்டுகொண்டிருக்கின்றோம்.

துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்துக்கு முன்னால் எந்த கருத்தியல்வாதங்களும் முறையாய் முன்வைக்கப்படாமையால்  வெறும் ஹீரோயிச தேர்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இங்கு சிங்கள மக்களின் தேர்வை கிழக்கு, வடக்கு மாகாணங்களுக்கு அப்பாலான பெரும்பாண்மை சிங்களவர்களை உள்ளடக்கிய தேசமாகவும்,
தமிழ் மக்களை; கிழக்கிலுள்ள கணிசமானோரையும் உள்வாங்கிய ‘வடக்கு தேச’மாகவும்;  முஸ்லிம்களை கிழக்கை மையப்படுத்திய வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் உள்ளடக்கிய ‘கிழக்கு தேச’மாகவும் கருதிக்கொண்டே அவதானிப்பை கூறியுள்ளேன்.

கேள்வி: அண்மைக்காலமாக தாங்கள் ‘கிழக்கு தேசம்’ என்ற சொற்பதங்களை அதிகமாக பிரயோகிப்பதை முகநூலூடாகவும் ஏனைய ஊடகங்களூடாகவும் காணக்கிடைக்கிறது, அண்மையில்  ‘தினக்குரல் பத்திரிகையில் பிரசுரித்திருந்த தங்களுடனான நேர்காணலில் ‘கிழக்கு தேசத்தின் சுயநிர்னயம் புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படவேண்டும்’ என்றும் கூறியிருந்தீர்கள்.
‘கிழக்கு தேசம்’பற்றியும் அது எதை சுட்டுகின்றது என்பதையும் விளக்குவீர்களா?

பதில்: ‘கிழக்கு தேசம்’ என்பது முன் சொன்ன முஸ்லிம் மக்களின் சுய நிர்னயத்தின் அடையாளப்பதமாகும்.
இலங்கையின் மூன்றாம் பெரும்பாண்மையான முஸ்லிம்களும் மற்றைய இரண்டு பெரும்பாண்மை போன்றே சகல உரிமைகளுக்கும் உரித்தானவர்கள் என்பதை உரத்துச்சொல்லும் உரிமை கோசமாகும்.

புதிய அரசியலமைப்பினூடாக என்னென்ன உரிமைகள் மற்றைய சமூகங்களுக்கு உத்தரவாதப்படுத்தப்படுகின்றதோ அவற்றுக்கு எந்த வகையிலும் குறைவில்லாததும் நீதி நேர்மைமிக்க இஸ்லாமிய வழிகாட்டல்களை தங்குதடையின்றி  பின்பற்றுவதற்குமான பூரண உரிமையைக்கொண்ட அதிகார அலகின்  கருப்பெயரே ‘கிழக்கு தேசம்-EastLand ஆகும்.

கேள்வி: ‘EastLand’ என்ற ஆங்கிலப்பதத்தையும் ‘கிழக்கு தேச’த்துடன் இணைத்துக்கொண்டதற்கு ஏதேனும் காரணமுண்டா?

பதில்: ஆம் அது மிக முக்கியமானது. தமிழை பேசுவதால் முஸ்லிம்களும் தமிழ் தேசியத்தின் ஒரு அங்கமே என்று எமது மத அடையாளத்தை புறக்கணிப்பவர்களுக்கும் கிழக்கில் முஸ்லிம்களின் பெரும்பாண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்போருக்கும் ‘EastLand’ என்ற ஆங்கிலப்பதத்தில் ஒரு எச்சரிக்கையுள்ளது.

மொழி அடையாளத்தை எங்கள் மீது திணிக்க முயன்றால் நாங்கள் ஆங்கிலத்தை தத்தெடுத்துக்கொள்ளவும் தயங்கமாட்டோம் என்பதே அந்த செய்தியாகும்.
இதை சம்பந்தப்பட்டோர் இன்னும் விரிவாக புரிந்து கொள்வார்கள்.
மேலும் கிழக்கு மாகாணத்தை மொழிவாரியான வடக்கு தேசத்துடன்  இணைக்க முயல்வோர் ‘EastLand’ ஐ தவிர்ந்து கொள்ளவேண்டும் என்ற இன்னுமொரு செய்தியும் இதிலுண்டு.

கேள்வி:  ‘கிழக்கு தேசம் EastLand’ என்பது தமிழ் ஈழம் போன்றதோர் ஆபத்தான பிரிவினைவாதக் கோரிக்கையை ஒத்ததாக சிலரால் விமர்சிக்கப்படுகிறதே.
இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்:  கிழக்கு தேசம்’ என்பது சுயாட்சிக்கான சுய நிர்னய உரிமையை வேண்டிநிற்கும் கோட்பாடு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆனால், அது பிரிவினைக்கு பகரமாக சுயாட்சிகளின் கூட்டாட்சியை பரிந்துரைக்கும் ஒரு கோட்பாடாகும்.

காலப்போக்கில் நிலைமைகளுக்கு ஏற்றால்போல் மாற்றங்களுக்கு இசைந்து கொடுக்கவும் இணங்கக்கூடியது.
United Lands of Sri Lanka என்ற ஒரே நாட்டின் சம அடையாளத்தையும் அதிகாரத்தையும் கொண்ட ஓர் அலககாகவே இப்போதைக்கு இதை வரையறை செய்யலாம்.
இதற்கு அப்பாலான கருத்துக்கோடல்கள் எல்லாம் அவரவரின் தனிப்பட்ட எடுகோள்களே!

கேள்வி:  அப்படியாயின் முஸ்லிம் மாகாணம், கரையோர மாவட்டம்,  போன்றதோர் கோரிக்கை என்று இதை கூறலாமா?

பதில்: இல்லை, முஸ்லிம் மாகாணம், கரையோர மாவட்டக்கோரிக்கைகளிலுள்ள  குறைபாடுகளை நிபர்த்தி செய்யக்கூடிய விதமாக கட்டமைக்கப்பட்ட கோட்பாடே கிழக்கு தேசமாகும்.
கரையோர மாவட்டமென்று முஸ்லிம்களின் நிலப்பரப்பை கரையோரங்களுக்குள் சுருக்கி நிலமற்றோராக ஆக்குவதிலிந்தும் பாதுகாப்பதுடன் நிலத்தொடர்பற்ற பிரதேசங்களை உள்ளடக்கிய சாத்தியமற்ற முஸ்லிம் மாகாணக்கோரிக்கையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி சாத்தியமான சமத்துவமிக்க நெகிழ்வுத்தன்மை கொண்ட காத்திரமான கோட்பாடே ‘கிழக்கு தேச’மாகும்.

கிழக்கு தேசத்தின் ஆள்புல எல்லைகளை உள்ளடக்கிய விரிவான விபரங்கள் அடங்கிய நூலொன்று தயாராகின்றது.
விரைவில் அதை வெளியீடு செய்யவுள்ளோம்.
அதன் பின் சமூகத்தின் எல்லா தரப்புகளின் கருத்தாடல்களையும் எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திலிருந்து ரஊப் ஹகீம் அவர்கள் விலகவேண்டும் என்ற உங்களது ‘கிழக்கின் எழுச்சி’ என்ற கோசத்துக்கு என்ன நேர்ந்தது?

பதில்:  சமுகத்தின் அத்தனை இழப்புகளுக்கும் கேவலத்துக்கும் காரணமாயிருந்த ஹகீம் அவர்கள்  முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திலிருந்து ஒதுங்க வேண்டும் என்ற கிழக்கின் எழுச்சியெனும் கோசம் கிழக்கு தேசமெனும் உயர் இலட்சியத்தினூடாக இன்னும் உரத்துக்கோசிக்கப்படுகிறது.

வடக்கிலிருந்து புலிகளால் பலவந்தமாய் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் உள்வாங்கி கிழக்கில் போதுமான நிலப்பரப்பு இல்லாத முஸ்லிம்களின் இருப்பையும் ஒன்றிணைத்து  மறு சீரமைக்கும் கிழக்கு தேசத்தை நிறுவுவதற்கும், கிழக்கு, வடக்குக்கு வெளியில் பரந்து வாழும் முஸ்லீம்களின் இருப்பு, பாதுகாப்பு, அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்தத் தேவையான  சர்வதேச, தேசிய அங்கீகாரத்தை நீண்டகாலமாய் பெற்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெறுமானம் அதன் தற்போதைய தலைமைத்துவத்தால் சிதைக்கப்பட்டுக்கொண்டு வருவதை எந்தக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.

முஸ்லிம் காங்கிரஸை ரஊப் ஹகீமிடமிருந்து மீட்டெடுத்து முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பேரியக்கமாக மீள்கட்டமைப்பதில் கிழக்கு தேசம் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது.

முஸ்லிம்களின் விடுதலை ஹகீமிலிருந்து முஸ்லிம் காங்கிரஸை விடுவிப்பதிலிருந்தே தொடங்கும் என்பதில் நாம் தெளிவாய் உள்ளோம்.

ஹகீமிடமிருந்து முஸ்லிம் காங்கிரஸ் எனும் எமது பேராயுதத்தை மீட்கும் போராட்டம் வெவ்வேறான வழிமுறைகளிலும் தொடரும்.
முஸ்லிம் காங்கிரஸ் மீட்கப்படும்.
கிழக்கு தேசம் நிறுவப்படும்.

அடுத்த தலைமுறைக்கு ஹீரோயிஸத்தில் ஊறிய கட்சியை விட்டுச்செல்லாமல்  தெளிவான இலக்குகளைக்கொண்ட பேரியிக்கத்தை விட்டுச்செல்லவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
முழு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுடன் இதை சாத்தியமாக்குவோம் இன்ஷா அழ்ழாஹ்.

Web Design by Srilanka Muslims Web Team