முஸ்லிம் சமூகத்தின் சனத்தொகை அதிகரிப்பதனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுப்பெறுகிறது..! » Sri Lanka Muslim

முஸ்லிம் சமூகத்தின் சனத்தொகை அதிகரிப்பதனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுப்பெறுகிறது..!

Contributors
author image

Editorial Team

– நன்றி வீரகேசரி –

பொலிஸ் பரிசோதகர் நியமனத்தில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது விசேட தகைமையாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை அரசியலமைப்பின்12(1) அத்தியாயத்திற்கு முரணாகும். மொழி அடிப்படையில் நியமனம் வழங்கினால் முஸ்லிம் இனத்தவர்கள் அதிகளவில் உள்வாங்கப்படுவார்கள். இது அரசியலமைப்பிற்கும், நாட்டு மக்களுக்கும் இழைக்கும் துரோகமாகும். இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என சுட்டிக்காட்டி, தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்க தேரர்  12 பேரின் கையொப்பத்துடன்  ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நீதியமைச்சர் அலிசப்ரி ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கமைய பொலிஸ் திணைக்களத்துக்காக பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு 150 வழக்கறிஞர்களை இணைத்துக் கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு இணைத்துக் கொள்ளப்படுபவர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றுள்ளமை  விசேட   தகைமையாக கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாத்துக்கு  சார்பான அமையும் மற்றுமொரு செயற்பாடாக இதனை கருத வேண்டும்.

பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக நாம் செயற்படவில்லை.முஸ்லிம் மக்களை கேடயமாக கொண்டு ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் பலத்தை பிரயோகித்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வலுப்படுத்த முனைகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளினால் சாதாரண முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டின் சனத்தொகை அடிப்படையில் பார்க்கையில் தமிழ், சிங்கள மக்களின் சனத்தொகையை காட்டிலும் முஸ்லிம் மக்களின் சனத்தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. சட்டத்துறையிலும் முஸ்லிம் சமூகத்தினர் அதிகளவில் ஈடுப்பட்டுள்ளார்கள். தமிழ் மொழியில் தேர்ச்சி விசேட தகைமை என்பதை நடைமுறைப்படுத்தினால் முஸ்லிம் சமூகத்தினரில் பெரும்பாலானோர் பொலிஸ் பரிசோதகர்களாக இணைத்துக் கொள்ள வாய்ப்புண்டு.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் நோக்கம் தற்போது வெளிப்பட்டுள்ளது.முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களுக்கு பொறுப்பான அமைச்சின் ஊடாக இலங்கை நுகர்வோர் அதிகார சபை, துறைமுக அதிகார சபை ஆகியவற்றுக்கு தமது இனத்தவர்களுக்கு அதிக தொழில் நியமனங்களை வழங்கியுள்ளார்கள். குறுகிய காலத்தில்  முஸ்லிம் சமூகத்தினர் சட்டக்கல்லூரிக்கு அதிகளவில் உள்வாங்கப்பட்மை சந்தேகத்துக்குரியது. அத்துடன் நீதிமன்ற சேவை மொழிப்பெயர்ப்பாளர்களாகவும் செயற்படுகிறார்கள். இவ்வாறன நிலையில் பொலிஸ் பரிசோதகர்களாக முஸ்லிம் சமூகத்தின் வழக்கறிஞர்கள் அதிகம் இணைத்துக் கொள்ளப்பட முயற்சிப்பதன் உள்நோக்கம் அவதானத்திற்குரியது.

அரசியலமைப்பு குறித்து போதிய தெளிவில்லாமல் நீதியமைச்சர் செயற்படுகிறார். பயங்கரவாதி சாஹ்ரானின் குண்டுத்தாக்குதலின் பின்னர் பள்ளிவாசல்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் எந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்பது இன்று வரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

மேலும், நீதி அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியலமைப்புக்கு முரணான மற்றும் மக்களுக்கு துரோகமிழைக்கும் செயற்பாடுகளை செயற்படுத்த வேண்டாம் என ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்களின் ஒருவராக கோரிக்கை விடுக்கிறோம்

Web Design by The Design Lanka