முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் பணியாற்றிய மர்ஹூம் அஸ்வர்! - Sri Lanka Muslim

முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் பணியாற்றிய மர்ஹூம் அஸ்வர்!

Contributors

மஹரகமையில் 1937- பெப்ரவரி 8 ஆம் திகதி பிறந்து தினகரன் செய்தியாளராக எழுத்துலகப் பயணத்தை ஆரம்பித்தவர் மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வர், பின்னர் அறிவிப்பாளர், நேரடி வர்ணனையாளர், மொழிபெயர்ப்பாளர் என்றெல்லாம் முத்திரை பதித்துள்ளார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமையோடு சகல இன, மத மக்களையும் அரவணைத்து அரசியல் வானில் சுடர் விட்டுப் பிரகாசித்தவர் அவர்.

முன்னாள் அமைச்சராகவும் சபாநாயகராகவும் விளங்கிய தேசமான்ய பாக்கீர் மாக்கார் மற்றும் அமைச்சராகவும் சபாநாயகராகவும் இருந்த மர்ஹூம் எம். எச். முஹம்மத் ஆகியோரின் பிரத்தியேக செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். அதன் மூலம் அரசியல் அனுபவத்தையும் ஆளுமையையும் வளர்த்துக் கொண்டதன் விளைவாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாரளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதன் விளைவாக தேசியப்பட்டியல் மூலம் ஐந்து தடவைகள் பாராளுமன்றம் பிரவேசித்த பெருமை இவரை சாரும்.

நாட்டின் முன்னாள் தலைவர்களான டட்லி சேனாநாயக்க, ஜே. ஆர். ஜயவர்த்தன மற்றும் சேர் ராஸிக் பரீத், ​ெடாக்டர் எம். ஸீ. எம். கலீல் போன்றோருடன் நெருங்கிப் பழகி அவர்களின் உரைகளை நேரடியாக தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து புகழ் பெற்றுள்ளார்.

புத்தளம் தேர்தல் தொகுதியில் முஸ்லிம் எம். பி. ஒருவர் இல்லாக் குறையை நிவர்த்திக்க இவர் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டார். அதன்மூலம் புத்தளத்தின் புத்தெழுச்சிக்காகத் தன்னை அர்ப்பணிப்புச் செய்தார்.

எம். பியாக இருந்து, முஸ்லிம் சமய, கலாசார இராஜாங்க அமைச்சராக பதவி உயர்வு கண்டார். அந்த அமைச்சு மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு அரும் தொண்டாற்றியுள்ளார். முஸ்லிம் கலைஞர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிக்கும், ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ விருது வழங்கும் விழாவை ஆண்டுதோறும் நடத்தினார். ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள், அகதிகளுக்கான நிவாரணப் பணிகள், மத்ரஸாக்களுக்கான நிவாரணப் பணிகள் என்று சமூக உணர்வுடன் பலதரப்பட்ட பணிகளையும் செய்தவர் அவர்.

முஸ்லிம்களுக்குப் பிரச்சினைகள் தலைதூக்கும் சந்தர்ப்பங்கள், இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று செயல்பட்டார்.

பாராளுமன்ற அமர்வுகளை தவற விடமாட்டார். அத்துடன் காலையிலே முதலாவதாகச் சென்று முழு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, கடைசியாகவே திரும்பும் சுபாவமுள்ளவர். பாராளுமன்ற விவகாரங்கள், அதன் சட்டதிட்டங்கள், ஒழுங்குப் பிரச்சினைகள், குறுக்கீடுகள் ஆகிய அனைத்திலும் சிறந்த நுண்ணறிவுகளைப் பெற்றிருந்தார். இதன்விளைவாக இவருக்கு பாராளுமன்ற விவகார அமைச்சுப் பதவியும் வந்தடைந்தமை மற்றொரு சிறப்பம்சமாகும்.

ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகர், ஊடக ஆலாட்சி அதிகாரி ஆகிய பதவிகளையும் அலங்கரித்துள்ளார். தமிழ்மொழியில் இவருக்குள்ள பரிச்சயம் காரணமாக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் பிரகாசித்தார். இந்தியா, மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்து சிறப்பித்துள்ளார். மேற்படி மாநாடுகளின் முன்னோடி அல்லாமா ம. மு. உவைஸ் மற்றும் ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து அத்தகைய மாநாடுகளை இலங்கையிலும் நடத்த பங்களிப்பு செய்துள்ளார்.

அவர் சிறந்த ஊடவியலாளராவார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும் இருந்துள்ளார். அகில இலங்கை முஸ்லிம் லீக், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு, முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், வை. எம். எம். ஏ. பேரவை போன்ற அமைப்புக்களிலும் அங்கம் வகித்துப் பங்களிப்பு செய்துள்ளார்.

முஸ்லிம் விவகாரங்கள், சமய, சமூக வரலாற்றுத் தகவல்கள் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்ட நடமாடும் கலைக்களஞ்சியமாகவும் தகவல் பெட்டமாகவும் திகழ்ந்துள்ளார். அவர் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி தனது 80 ஆவது வயதில் காலமானார்.

Web Design by Srilanka Muslims Web Team