முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு விஷேட நிதி ஒதுக்குமாறு ஹூனைஸ் எம்பி ஜனாதிபதியிடம் கோரிக்கை - Sri Lanka Muslim

முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு விஷேட நிதி ஒதுக்குமாறு ஹூனைஸ் எம்பி ஜனாதிபதியிடம் கோரிக்கை

Contributors

2014ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு விஷேட நிதி ஒதுக்குமாறு ஹூனைஸ் எம்பி ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுள்ளார்.

2014 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட சீர் செய்யும் மீளாய்வுக் கூட்டம் நேற்று(22) ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
மேற்படிக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர மற்றும் ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் வன்னியில் இருந்து சுமார் 23 வருடங்களாக இடம்பெயர்ந்து ஏனைய மாவட்டங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் இதுவரை காலமும் உரிய முறையில் மீள் குடியமர்த்தப்படாது இருப்பதாகவும் தற்போது வடமாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ளதால் முஸ்லிம் மக்கள் உட்பட எஞ்சியுள்ள தமிழ் மற்றும் சிங்கள மக்களையும் மீள் குடியமர்த்துவதில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதால் அதனைக் கருத்தில் கொண்டு மேற்படி மக்களை மீள் குடியேற்றுவதற்கு 2014ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் விஷேட நிதியை ஏற்பாடு செய்து அதன் மூலம் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து எஞ்சியுள்ள அனைவரையும் 2014இல் முற்று முழுதாக மீள் குடியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
அத்துடன் வன்னி மாவட்டத்தில் குறிப்பாக வவுனியா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு தூய குடிநீர் வசதி இல்லாதிருப்பதாகவும் இதன் காரணமாக அதியமானவர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்பட்டு வருவதாகவும் அவர்களை மேற்படி நோய்களில் இருந்தும் அவர்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதத்திலும் சிறந்த தூய குழாய் நீர் வசதிகளையும் 2014ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் செய்து தருமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team