முஸ்லீம்களின் சுய நிர்னயம் அங்கீகரிக்கப்படவேண்டும் - வபா பாறுக்குடனான நேர்காணல் - Sri Lanka Muslim

முஸ்லீம்களின் சுய நிர்னயம் அங்கீகரிக்கப்படவேண்டும் – வபா பாறுக்குடனான நேர்காணல்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முஸ்லீம் காங்கிரஸின்’ஆரம்ப பொருளாலரும் ‘கிழக்கின் எழுச்சி’யின் ஸ்தாபகரும் ‘கிழக்கு தேசத்தின்’ நிறுவனருமான அல்ஹாஜ் வபா பாறுக் அவர்களுடனான நேர்காணல்!


கேள்வி: சம கால உள்நாட்டு அரசியல் பற்றிய உங்களது அவதானத்தை பொதுமைப் படுத்தி கூறுங்களே

பதில்: பொதுமைப்படுத்தி கூறுவதாயின், சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையின் புதிய அத்தியாயமாகவே சம கால அரசியலை நான் காண்கிறேன்.

கேள்வி: சற்று விரிவாக கூறுங்கள்

பதில்; ஒற்றையாட்சி என்ற ஸ்தானத்திலிருந்து விடுபட்டு ஓர்மித்த/ஒன்றித்த ஆட்சி போன்ற சொற்பதங்களுடன் மறைமுகமான சமஷ்டி ஆட்சியைஏற்படுத்தும் முனைப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்களின் நீண்டகால போராட்டத்தின் விளைவாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது.

பிரிக்கமுடியாத நாட்டுக்கான சரத்துக்களை உட்கொண்டிருக்கும் புதிய யாப்பு மாற்றம்;அதன் அடிப்படையிலேயே அச்சரத்துக்களை பலவீனமாக்கி விடுகின்றது.

ஒற்றையாட்சி என்ற வரையறையிலிருக்கும் ஒரு நாடு அதிலிருந்து ஒரு எழுத்தை மாற்றினாலும்கூட அது கூட்டாட்சி என்ற கோட்பாட்டை நோக்கிய நெகிழ்வாகவே நான் காண்கிறேன்.

இது தவறானதுமல்ல.
தமிழ் மக்களின் சுய நிர்னய உரிமை மறைமுகமாவது ஏற்றுக்கொள்ளப்படுவதே இதில் உள்ள உளவியல் உண்மை. ஆதலால் இது ஆரோக்கியமானதே.

கேள்வி: முஸ்லீம்களை பொறுத்தவரையில் புதிய யாப்பு எத்தகையதாய் அமையும் என கருதுகிறீர்கள்?

பதில்; முன்னர் கூறியவாறு தமிழர்களின் சுய நிர்னயத்தை மறைமுகமாக அங்கீகரிக்கும் அதேவேளை புதிய யாப்பு கிழக்கை வடக்குடன் இணைப்பதினூடாக முஸ்லீம்களின் சுய நிர்னயத்துக்கான அடிப்படை நிலபுலனை இல்லாமலாக்கும் அநியாயத்தை செய்கின்றது என்பதே வேதனைக்குரிய அம்சமாகும்.

கேள்வி; வடக்கும் கிழக்கும் இணைந்ததாய் அமையும் ஒரு அரசியலமைப்புக்கு சிங்கள மக்கள் ஆதரவளிப்பார்கள் என நம்புகிறீர்களா?

பதில்: வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு பெரும் மாநிலத்துக்கான சுயாட்சியை வேண்டிய போராட்டத்தை பல வடிவங்களில் தமிழ் மக்கள் கடந்த ஐந்து தசாப்தங்களாக முன்னெடுத்ததும் அதனால் அச்சமூகம் சந்தித்த பேரழிவுகளும் சிங்கள மக்களின் மன நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தாமலில்லை.

அடிமட்டத்திலுள்ள ஒவ்வொரு சிங்கள குடும்பமும் இந்த கொடிய யுத்தத்தால் தமது அன்புக்குரியோரை இழந்திருக்கும் நிலையில் எதிர்த்தரப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றும் உளவியல் பக்குவம் யதார்த்தமானது.

ஆகவே, சிங்கள மக்கள் விருப்பமின்றியேனும் இணைப்புக்கு ஆதரவளித்துவிடுவதும் நடக்ககூடியதே.

தவிரவும், இங்கு சர்வஜன வாக்கெடுப்பில் புதிய அரசியலமைப்பு வெற்றி பெறுமா இல்லையா என்பதை விட புதிய அரசியலமைப்பின் இறுதி வரைபில் இணைப்பு உள்வாங்கப்படுமா இல்லையா என்பதே தமிழர்களையும் முஸ்லீம்களையும் பொறுத்தவரையில் முக்கியமானது.

இணைப்பு உள்வாங்கப்பட்டால் தமிழர்களுக்கு மீண்டும் ஒரு வரலாற்றுத்தடயத்தை கொடுப்பதுபோலவே முஸ்லீம்களின் சுய நிர்னய உரிமைக்கான முஸ்லீம் பெரும்பாண்மை கொண்ட நிலபுலத்தை இல்லாமலாக்கிவிடும்.

என்றோ ஒரு காலத்தில் ஈழம் உருவாகியே தீரும் என்பதை ஊகிக்க முடிந்தாலே இணைப்பின் ஆபத்தை உணர முடியும்.

வடக்குடன் கிழக்கை இணைப்பதென்பது ஈழத்துடன் இணைப்பதே என்பதை எதிர்வு கூற இயன்றோரால் இதை இலகுவாக புரியலாம்.

அத்தகைய ஒரு நிலைக்குள் சிக்குவதிலிருந்து கிழக்கு பாதுகாக்கப்படவேண்டுமாயின் புதிய அரசியலமைப்பில் கிழக்கு தனித்துவமாகவே அடையாளப் படுத்தப்படவேண்டும்.

ஒருகால் முஸ்லீம்கள் பூரண சுய நிர்னயத்தை வேண்டுவதாயினும் அவர்களின் பெரும்பாண்மை தளமாக கிழக்கு தனித்து இருக்கவேண்டும்.
அதற்கு வரலாற்றுத்தடையாக புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படும் இணைப்பு அமைந்துவிடும். அது சர்வஜன வாக்கெடுப்பில் தோல்வியுற்றாலுமே.

கிழக்கை வடக்குடன் இணைப்பதென்பது வெறுமனே முஸ்லீம்களின் விகிதாசாரத்தை குறைக்கும் செயல்பாடு மட்டுமல்ல
முஸ்லீம்களுக்கிருக்கும் ஒரேயொரு பெரும்பாண்மை பெருநில புலத்தை இல்லாதொழித்து அவர்களை சுய நிர்னயத்துக்கு தகுதியற்றவர்களாக்கும் பேராபத்தையும் கொண்டுள்ளது.

கேள்வி: அவ்வாறாயின் தமிழர்களுடன் வாழ முடியாது என்கின்றீர்களா?

பதில்: அப்படிக்கூறவில்லை ஈழத்தில்தான் வாழ முடியாது என்கின்றோம்.

ஈழம் என்றால் அராஜகம் என்பதை அனுபவித்தவர்கள் நாம்.
ஆயுதங்கள் மட்டுமிருந்த ஈழமே அவ்வளவு கொடியதாயின் அதிகாரமும் கொடுக்கப்பட்டால் என்னவாகும் என்பதை எவராலும் ஊகிக்க இயலும்.

கேள்வி; அப்படியாயின் முஸ்லீம்களின் இருப்புக்கான சிறந்த வழிமுறை எதுவாயிருக்கும்?

பதில்: இது மிகவும் கடினமான கேள்வியாயினும் எனது கருத்தை வெளிப்படையாகவே கூற விரும்புகின்றேன்.

தேசிய,பிரதேச ரீதியான பேரினவாத அடக்கு, ஒடுக்கு முனைப்புகள் எல்லாம் மாற்றுவழிகளை தேடும் நிர்பந்தத்தை தோற்றுவித்துவிடுகின்றன.

ஒருபுறம் நமது விருப்பத்துக்கு மாறாக நம்மை ஆள முற்படுவதும், மறுபுறம் நமது அடிப்படை உரிமைகளையும் மறுத்து பேரினத்தீவிரவாதத்துக்கு அடிமையாக்குவதும் திட்டமிட்ட முறையில் தொடராக நடந்தேறும்போது எமது இருப்பை உறுதி செய்யக்கூடிய மாற்றுவழியை நாம் தேடியாகவேண்டும்.

அதனால்தான் நாம் ‘கிழக்கு தேசம்’ எனும் சுய நிர்னய கோட்பாட்டை முன்னெடுத்துச்செல்கின்றோம்.அதனை ஆங்கிலத்தில் ‘EastLand’ என்றும் அழைக்கின்றோம்.

எது எப்படிப்போகினும் புதிய அரசியலமைப்பு இறுதி வரைபில் கிழக்கு மாகாணம் தனித்துவமாய் இருக்கவேண்டியதே இப்போதைய தேவை.

அதற்கு அடுத்த கட்டங்களை நம்மைவிட அறிவிலும் ஆளுமையிலும் உயர்வானவர்களாய் இருக்கக்கூடிய அடுத்தடுத்த தலைமுறைகள் தெரிவு செய்து கொள்ளும்.

ஆனால் ஒன்றுமட்டும் தவிர்க்க முடியாதது; ஈழம் பிரகடணப்படுத்தப்படுமாயின் சம நேரத்தில் ‘கிழக்கு தேசமும்’ பிரகடணப்படுத்தப்பட நேரும்

இலங்கையின் காஷ்மீராய் நாம் செத்தொழியக்கூடாது.

கேள்வி: இது மிக ஆபத்தானதல்லவா?

பதில்: ஈழத்தின் அடிமைகளாய் ஒவ்வொரு கணமும் அழுது அழிவதைவிடவும் இலங்கையின் காஷ்மீராய் தினமும் செத்துப்போவதைவிடவும் குறைந்த ஆபத்தையே ஏற்படுத்தும்.

தவிரவும், சுய நிர்னய உரிமைகள் சர்வதேச சட்டங்களூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இக்காலத்தில் முன்னைய காலங்கள் போல் அளவுக்கதிகமாக அச்சப்பட ஏதுமில்லை.

என்றாலும், தவிர்க்க முடியாத திணிப்புகள் ஏற்றுக்கொள்ளப் படவேண்டியவையே.

பேரினவாதிகளின் அடக்குவாரங்களும் ஒடுக்குவாரங்களுமே சிறுபாண்மையினரின் தேர்வை தீர்மாணிக்கின்றன.

கேள்வி: முஸ்லீம்களின் ஆணையை பெற்ற அரசியல் தலைமைகள் இந்த இக்கட்டான நிலைபற்றி கவனம் கொள்ளாமல் இருப்பதைப்பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: அவர்கள் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை.
போதியளவு அவர்களை விமர்சித்துள்ளோம் விழிப்பூட்டியுள்ளோம். கோமாளிகளைபற்றி இனியும் பேசுவதைவிட எதிர்கால சந்ததிகளுக்கான கருத்துக்களை முன்வைப்பதிலேயே ஆர்வம் காட்ட விரும்புகின்றோம்.

Web Design by Srilanka Muslims Web Team